ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு கீழப்பெரும்பள்ளம் கோயிலில் குவிந்த பக்தர்கள் | Ragu - Kethu keezhapperumballam temple festival

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (14/02/2019)

கடைசி தொடர்பு:14:50 (14/02/2019)

ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு கீழப்பெரும்பள்ளம் கோயிலில் குவிந்த பக்தர்கள்

கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள கேது ஸ்தலமான நாகநாதசுவாமி திருக்கோயிலில், கேது பெயர்ச்சி விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.  இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பரிகார பூஜைகள் செய்து, கேது பகவானைத் தரிசனம்செய்தனர்.

ராகு கேது தலம்

நாகை மாவட்டம், கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயில், நவகிரகங்களில் கேது பகவானுக்கு உரிய தலம். கேது, ஞானகாரகன் என்று அழைக்கப்படுகிறார்.  ஞானம் மற்றும் மோட்சத்திற்கு அதிபதியான  இவரை வழிபட்டால், செல்வச் செழிப்பு, கடன் பிரச்னைகள், திருமணத்தடை, நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம். 

நேற்று நடந்த ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு, இந்த ஆலயத்தில் கேது பகவானின் உற்சவ மூர்த்திக்கு, காலை தொடங்கி இரவு வரை பரிகார பூஜைகள் நடைபெற்றன.

கேது பெயர்ச்சி

காலையில், கோயிலின் பிராகாரத்தில் நடைபெற்ற மகா யாகத்தின்போது, கேது பகவானுக்கு உரிய மந்திரங்கள் முழங்க பரிகார ஹோமம் நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு, மலர்களால் ஆன மேடையில் எழுந்தருளிய கேது பகவானுக்கு, பக்தர்கள் பரிகார பூஜைகளைச் செய்தனர். கேதுவிற்கு உகந்த நவதானியமான கொள்ளு மற்றும் வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 

ராகு கேது தலம்

பகல் 2.04 மணியளவில் கேது பகவான் உத்தராட நட்சத்திரம் 2-ம் பாதம், மகர ராசியிலிருந்து உத்தராட நட்சத்திரம் 1-ம் பாதம் தனுசு ராசிக்குப் பிரவேசித்தார். பெயர்ச்சி நேரத்தில், கேது பகவானுக்கு இன்னிசை வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன.  ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யவேண்டியவர்கள் என்பதால், நாகை மற்றும் மற்ற மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் இங்கு குவிந்தவண்ணம் இருந்தனர். பக்தர்களின் வருகை இரவு வரை நீடித்ததால், பரிகார பூஜைகளும் இரவு வரை தொடர்ந்து நடைபெற்றன.