பரிவேட்டை... சூரசம்ஹாரம்... திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவத் திருவிழா! | This article is about masi month surasamharam festival of thiruporur murugan temple

வெளியிடப்பட்ட நேரம்: 18:12 (15/02/2019)

கடைசி தொடர்பு:18:12 (15/02/2019)

பரிவேட்டை... சூரசம்ஹாரம்... திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவத் திருவிழா!

பரிவேட்டை... சூரசம்ஹாரம்... திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவத் திருவிழா!

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான பரிவேட்டைத் திருவிழாவில் சூரசம்ஹாரம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

“அனைத்து முருகன் கோயில்லயும் கந்தசஷ்டியப்போதான் சூரசம்ஹாரம் நடக்கும். ஆனா, திருப்போரூர் முருகன் கோயில்லதான் கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம்னு வருசத்துக்கு ரெண்டு முறை சூரசம்ஹாரம் நடக்கும். திருப்போரூர் கோயில்லேருந்து முத்துக்குமாரசுவாமி மயில் வாகனத்துல ஏறி ஆலத்தூருக்குப் புறப்படுவாரு. ஒரு காலை தரையிலயும் மற்றொரு காலை மயில் மேலேயும் வச்சிக்கிட்டு, கைல வில் அம்புனு போர்க்கோலத்துல முத்துக்குமாரசாமி வர்ற காட்சிய பார்க்கவே பரவசமா இருக்கும். திருப்போரூர்லேருந்து பக்தர்களோட ‘அரோகரா’, ‘வெற்றிவேல்... வீரவேல்...’ முழக்கத்தோடே முத்துக்குமார சுவாமி ஆலத்தூர் வருவார். ஆலத்தூர்ல இருக்கற அகத்தீஸ்வரர்கிட்ட அருள் பெற்று, சூரசம்ஹாரம் செய்யற மண்டபத்துக்கு வந்து சேருவாரு’’ என்று பக்திப் பரவசத்துடம் சொன்னார் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்தராஜ். 

சூரசம்ஹாரம்

மேலும் பரிவேட்டை மற்றும் சூரசம்ஹார நிகழ்வு குறித்து அவரிடம் கேட்டபோது, 

``பக்கத்துல இருக்கற கிராமம் செம்பாக்கம். இந்த ஊர்லேருந்து 'பத்தர் வகையறா' மக்கள்தான் வருஷா வருஷம் வீரபாகு வேஷம் கட்டுவாங்க. மொத்தம் ஒன்பது பேரு. ஒன்பது பேரும் வீரபாகு வேஷம் கட்டிகிட்டு காட்டு வழியா, தீப்பந்தத்த கொளுத்திக்கிட்டு வெறியாட்டம் ஆடிக்கிட்டே ஊருக்குள்ள நுழைவாங்க. ஊருக்குள்ள வர்ற முருகனுக்கு என்ன மரியாதை செய்து வரவேற்போமோ, அதே மாதிரியான மரியாதை வீரபாகு வேஷம் கட்டுறவங்களுக்கும் உண்டு. வாணவேடிக்கை, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்னு ஊருக்குள்ள இவுங்க வந்ததும் சூரசம்ஹாரம் களைகட்டும். சூரர்களுக்கும் தேவர்களுக்கும் போர் தொடங்கும். கஜமுகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன்,  தாரகாசுரன்னு ஒவ்வொரு சூரனையும் பாட்டுப் பாடி, வெறியாட்டம் ஆடி வீரபாகு வதம் செய்வாரு. கடைசியா வீரபாகுக்கு அடங்காம ஆட்டம் போடற பத்மாசுரனை முத்துக்குமாரசுவாமி தன்னோட வேல் எறிஞ்சி வதம் செய்வாரு” என்றார்.

முருகன் சூரசம்ஹாரம்

பொதுவாக, சூரசம்ஹார நிகழ்வு ஐப்பசி மாத கந்த சஷ்டியின்போது அனைத்து கோயில்களிலும் நடைபெறும். முருகன் சூரனுடன் மூன்று இடங்களில் போர் புரிந்தார் என்பது ஐதிகம். சூரனுடன் தரையில் போர் புரிந்த இடம் திருப்பரங்குன்றம், கடலில் போர் புரிந்த இடம் திருச்செந்தூர், விண்ணில் போர் புரிந்த இடம் திருப்போரூர். திருப்போரூரில் மாசி மாத பிரம்மோற்சவத்தின்போதும் கோயிலிலிருந்து புறப்படும் முத்துக்குமார சுவாமி பக்கத்திலிருக்கும் ஆலத்தூர் கிராமத்துக்குச் சென்று சூரசம்ஹாரம் செய்கிறார். 

விண்ணில் போர் புரிந்ததன் அடையாளமாகத்தான் முத்துக்குமார சுவாமி மயில் மீதேறிப் பறந்து சென்று சூரசம்ஹாரம் புரிகிறார். கந்தசஷ்டியின்போது இதே ஆலயத்தில் கந்தசாமி சூரனை வதம் செய்து தெய்வானையைக் கரம்பிடிக்கிறார். மாசி பிரம்மோற்சவத்தின் போது முத்துக்குமார சுவாமி சூரனை வதம் செய்து வள்ளியின் கரம் பற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்போரூர் மாசி பிரம்மோற்சவம் குறித்து கோயிலின் குருக்கள் அருண் பேசியதாவது...

பக்தர்கள்

“திருப்போரூரில் கந்தப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகிறார். ஈசனைப் போலவே சுயம்புவாகத் தோன்றியவர் கந்தப்பெருமான். அதனால் இங்கு மூலவருக்கு எந்த நாளும் அபிஷேக ஆராதனைகள் கிடையாது. வஸ்திரம் சாத்தி, கோயில் நந்தவனத்தில் பூக்கும் மலர்கள் மட்டுமே சாமிக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. பக்தர்கள் கொண்டுவரும் மலர்கள் அபிஷேக மூர்த்திக்கு மட்டுமே சாத்தப்படும். நான்கு கால பூஜைகளும் அபிஷேக மூர்த்திக்கு மட்டுமே நடைபெறும். இங்கு, சுப்ரமணியர் ஸ்ரீ சக்கரம் காணப்படுகிறது. சுவாமிக்கு யந்திரம் வைத்தே ஆவாகணம் செய்யப்படுகிறது. யந்திரத்துக்கு சத்ரு சம்ஹார ஹோமம், சத்ரு சம்ஹார சித்தி ஆகியவை மூல மந்திரங்களுடன் செய்யப்படுகிறது.

மாசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் கொடியேற்றிய 10 வது நாள் மாசி மகத்தின்போது தீர்த்தவாரி நடைபெறும். மூன்றாவது நாள் உபதேச உற்சவமும் எட்டாவது நாள் பரிவேட்டை சூரசம்ஹார நிகழ்வும் நடைபெறுகிறது. முருகன் தன் தந்தைக்கே குருவாக விளங்கியவர். அதனால் இங்கு பிரம்மோற்சவத்தில் உபதேச உற்சவம் கொண்டாடப்படுகிறது. எட்டாவது நாள் திருவிழாவாகத் திருப்போரூருக்கு அருகிலிருக்கும் ஆலத்தூர் கிராமத்துக்குச் சென்று முத்துக்குமார சுவாமி சூரசம்ஹாரம் நிகழ்த்துவார். இந்த சூரசம்ஹாரத்துக்கு மட்டுமே முத்துக்குமார சுவாமி காட்சி தருவார். மற்ற வைபவங்கள் அனைத்துக்கும் கந்தசாமி உற்சவர்தான் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.  

முத்துக்குமார சாமி

செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். அதனால் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், திருமணத் தடை இருப்பவர்கள், புத்திரதோஷம் உள்ளவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து யந்திரத்தை வழிபட்டு கந்தசாமியை வணங்கினால் அனைத்து தோஷங்களும் விலகும். வியாபார விருத்தி, சகல காரியங்களும் சித்தியாகும்” என்றார்.

வரும் ஞாயிற்றுக்கிழமையன்று  (17.2.2019) முத்துக்குமார சுவாமி திருப்போரூரிலிருந்து புறப்பட்டு ஆலத்தூருக்குச் சென்று சூரசம்ஹாரம் புரிகிறார். முருகன் பக்தர்கள் அனைவரும் சூரசம்ஹாரத்தைக் கண்டு அருள்பெறலாம்...

திருப்போரூர் கந்தசாமி கோயில் சில செய்திகள்...

முருகன் தன் அப்பனுக்கே பாடம் சொன்னவன் என்பதால் ‘ஞானகுரு’ என்ற பெயரும் இவருக்கு உண்டு. 

திருப்போரூர் முருகப்பெருமான் மற்ற தலங்களைப்போல அல்லாமல் பிரம்மாவுக்கு உரிய அட்சமாலையைக் கையில் ஏந்தியபடி, திருமாலைப்போல இடதுகரத்தைத் தொடையில் வைத்தபடி, சிவனாருக்கே உரிய அபய ஹஸ்த முத்திரையுடன் மும்மூர்த்திகளின் அம்சமாகத் திகழ்கிறார்.

திருப்போரூர் முருகப்பெருமானைத் தரிசித்தால் மும்மூர்த்திகளையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

சஷ்டியில், வள்ளி தெய்வானையுடன் கந்தசாமி குடும்பம் சகிதமாகச் சென்று சூரனை வதம் செய்வார். ஆனால், மாசி சூரசம்ஹாரத்தின்போது மட்டும் முத்துக்குமாரசுவாமி தனியாகப் போர்க்கோலத்தில் சென்று வதம் செய்கிறார்.

திருப்போரூர் கோயிலில் நவகிரக சந்நிதி இல்லை. மாறாக, கந்தசாமியைத் தரிசித்தாலே சகல கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதிகம்.

அருணகிரிநாதர் திருப்புகழில் ‘சகல வேதங்களின் வடிவம்’ என்று திருப்போரூர்  கந்தப்பெருமானைப் போற்றுகிறார். முருகனுக்கு, 'வேத உச்சி யாக சுவாமி’ என்றும் பெயர் உண்டு. எனவே, கல்வியில் சிறக்கவும், ஞானம் பெறவும் கந்தனை வேண்டுகிறார்கள் பக்தர்கள். கந்தனும் தமது பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

1984-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்குத் திருமணம் ஆனது இந்தத் திருத்தலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close