திருவெண்காட்டில் மாசி பிரம்மோற்சவம்! - 21-ம் தேதி திருக்கல்யாணம்; 23-ம் தேதி திருத்தேர் | Masi brammorsavam festival in thiruvenkadu

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (16/02/2019)

கடைசி தொடர்பு:17:30 (16/02/2019)

திருவெண்காட்டில் மாசி பிரம்மோற்சவம்! - 21-ம் தேதி திருக்கல்யாணம்; 23-ம் தேதி திருத்தேர்

நாகை மாவட்டம், திருவெண்காட்டில் உள்ள  சுவேதாரண்யேசுவரர் கோயிலில் நடைபெற உள்ள இந்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (15.2.19) தொடங்கியது. இந்தப் பிரம்மோற்சவம் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவெண்காடு பிரம்மோற்சவம்

திருவெண்காட்டில் சுவேதாரண்யேசுவரர் திருத்தலம் காசிக்கு இணையான புண்ணியத் தலமாகக் கருதப்படுகிறது. ஆதி சிதம்பரம் என அழைக்கப்படும் இந்தத் தலத்தில் நவகிரகங்களில் ஒருவரான புதனுக்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது. சிவபெருமானின் அம்சமான அகோரமூர்த்தி தனிச் சந்நிதியில் காட்சி அருள்கிறார். 

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 10 நாள்கள் இந்திரப்பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடத்துக்கான விழா நேற்று (15.2.19) இரவு 9 மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மங்கள வாத்தியங்கள், வேத கோஷங்கள் முழங்க நந்தி உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து இரவு 10 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் இந்திர விமானத்தில் வீதியுலா எழுந்தருளினர்.

கொடியேற்றம்

விழாவின் 7-ம் நாள் அன்று 21-ம் தேதி பிரம்மவித்யாம்பிகை - சுவேதாரண்யேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும் அதையொட்டி முத்துப்பல்லக்கில் எழுந்தருளலும் நடைபெறும். இந்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் 23-ம் தேதி நடைபெற உள்ளது. 

24-ம் தேதி கொடியிறக்குதலும் 26-ம் தேதி இந்த ஆலயத்தில் உள்ள சந்திர தீர்த்ததில் தீப அலங்காரங்களுடன் தெப்போற்சவமும் , 27 -ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற உள்ளது. 

திருவெண்காடு

விழாவின் எல்லா நாள்களும் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பூஜைகளும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலா எழுந்தருளலும் விமரிசையாக நடைபெறும். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோயில் நிர்வாகத்தினர் விழாவுக்கான சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.


[X] Close

[X] Close