கோலாகலமாக நடைபெற்ற சுவேதாரண்யேசுவரர் - பிரம்மவித்யாம்பிகை திருக்கல்யாண வைபவம் | Suvetharanyeswar temple thirukkalyana vaibavam

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (22/02/2019)

கடைசி தொடர்பு:17:40 (22/02/2019)

கோலாகலமாக நடைபெற்ற சுவேதாரண்யேசுவரர் - பிரம்மவித்யாம்பிகை திருக்கல்யாண வைபவம்

நாகை மாவட்டம், திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ள சுவேதாரண்யேசுவரர் கோயிலில் மாசி மாத பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஆலய மூலவரான சுவேதாரண்யேசுவரர் - பிரம்மவித்யாம்பிகை திருக்கல்யாண வைபவம் நேற்று (21.1.19) இரவு கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்கல்யாண நிகழ்வைக் கண்டுகளித்தனர்.

திருக்கல்யாண வைபவம்

சுவேதாரண்யேசுவரர் கோயிலில் கடந்த 15- ம் தேதி மாசி மாத இந்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதன் 7-ஆம் நாள் விழாவான நேற்று நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தின் ஆரம்பமாக, காலையில் ஆலயத்தில் உள்ள பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனையும், மகா தீபாராதனையும் செய்யப்பட்டது. மேலும், ஆலய உற்சவரான அகோரமூர்த்திக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்பு மாலை 8 மணியளவில் மூலவருக்கு அபிஷேகம் முடிந்த பிறகு சுவேதாரண்யேசுவரர் - பிரம்மவித்யாம்பிகை அம்பாள் பட்டு வஸ்திரம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் கோயில் பிரகாரத்தை வலம் வந்தனர். மூலவர் சந்நிதிக்கு எதிரே மாலை மாற்றிக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இறைவனும், இறைவியும் திருக்கல்யாண மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினர். அவர்களுக்கு முன்பாக ஆகுதி எழுப்பப்பட்டு, மந்திரங்கள் கூறப்பட்டு திருமாங்கல்யம் பூஜிக்கப்பட்டது.

திருவெண்காடு

தொடர்ந்து இரவு 9.30 மணியளவில் இன்னிசை வாத்தியங்கள், மந்திரங்கள் முழங்க சுவேதாரண்யேசுவரர் - பிரம்மவித்யாம்பிகை திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சிவ கோஷங்களை எழுப்பி இறைவனையும், அம்பாளையும் வணங்கினர். பின்னர் ஊஞ்சல் ஆராதனை நடைபெற்றது. இந்தத் திருக்கல்யாண நிகழ்வின் இறுதியில் பக்தர்கள் மணமக்களான இறைவனுக்கும் அம்பாளுக்கும் மொய் வைத்து சீர் செய்யும் முறை நடந்தது.

மாசி பிரம்மோற்சவம்

இதன் பிறகு சிவபெருமானும் அம்பாளும் முத்துப்பல்லக்கில் காட்சியளித்தனர். இரவு 10.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா எழுந்தருளினர். மேலும் தொடர்ந்து, இந்த ஆலயத்தில் வரும் 23- ம் தேதி திருத்தேர் வடம்பிடித்தலும், 26- ம் தேதி சந்திர தீர்த்தத்தில் தெப்போற்சவ தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.


[X] Close

[X] Close