வெளிநாட்டு யோகத்தை கேது பகவான் எந்த லக்னக்காரர்களுக்கு வழங்குவார்? #Astrology | Ketu benefits for people

வெளியிடப்பட்ட நேரம்: 09:37 (24/02/2019)

கடைசி தொடர்பு:09:37 (24/02/2019)

வெளிநாட்டு யோகத்தை கேது பகவான் எந்த லக்னக்காரர்களுக்கு வழங்குவார்? #Astrology

வெளிநாட்டு யோகத்தை கேது பகவான் எந்த லக்னக்காரர்களுக்கு வழங்குவார்? #Astrology

''வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு நல்லதைக் கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும் தலைகீழாக மாற்றுபவர் கேது பகவான்.மனதைப் பாதிக்கும் மாற்றங்கள், இருக்கும் இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றுதல் போன்றவற்றை கேதுதான் ஏற்படுத்துவார்'' என்கிறார் 'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி. அவர் கேது பகவான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கும் அமைப்பைப் பொறுத்து எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்பதை மேலும் விளக்கமாகக் கூறுகிறார்.

கேது, ராகு


ஜோதிட சாஸ்திரத்தில் கேது பகவானுக்கு 'மாற்றங்களைத் தரும் கிரகம்' என்று பெயர். எந்த ஒரு விஷயத்திலும் மாற்றங்களைக் குறிப்பவர் கேது. ஒருவரின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றம், சூழ்நிலைக் காரணமாக எடுக்கும் நிலைப்பாடு ஆகியவை,  இவரின் தசை, புக்தி. அந்தரங்களிலோ அல்லது கேதுவின் சாரம் போன்ற தொடர்புகளைப் பெற்ற கிரகங்களின் தசை புக்தி அந்தரங்களி லோதான் நடக்கும்.
ஒருவருக்கு வேலை கிடைப்பது, வேலை பறிபோவது, வாழ்க்கையைத் தலைகீழாக்கும் நல்லதும் கெட்டதுமான மாற்றங்கள், போன்றவற்றைக் கேதுதான் தருவார்.

சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் போன்றவற்றில் அமர்ந்தோ எட்டு, பன்னிரண்டாம் இடங்களுடன் தொடர்பு கொண்டோ இருக்கும் கேது ஒருவரை வெளிநாட்டில் நிரந்தரமாகக் குடியேற வைப்பார்..
தான் அமரும் பாவத்தைக் கெடுத்துப் பலன்களைத் தரும் ராகு பகவான் போல கேது கெடுப்பது இல்லை. அமரும் வீட்டைப் பலவீனமாக்கும் அளவுக்கு அதிகமான பலம் கேதுவுக்குக் கிடையாது. 
திருமணம் மற்றும் புத்திர தோஷங்களைக் கொடுக்கக்கூடிய 2, 5, 7, 8 - ம் இடங்களில் ராகு இருப்பது போன்று இவர் கெடுபலன்களைச் செய்வது இல்லை.

கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்குச் சுப, சூட்சும வலுவுடன், லக்ன சுபர்களின் தொடர்பு இருக்கும் நிலையில் கேது நன்மைகளைச் செய்வார். 

ராசி பலன்

செவ்வாயின் லக்னங்களான மேஷம், விருச்சிகம் ஆகிய இரண்டுக்கும் லக்னாதிபதியைப் போலச் செயல்பட்டு நன்மைகளைச் செய்வார். 6, 8 - ம் வீட்டுக்குடையவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது மட்டுமே மேற்கண்ட ஆறு லக்னங்களுக்கும் கேது சாதகமற்ற பலன்களைத் தருவார்.


கேதுவுக்கு விருச்சிகம், கன்னி, கும்பம் ஆகியவை நன்மைகளைத் தரும் இடங்கள். சில மூலநூல்களில் மேஷம் முதல் கன்னி வரையிலான ஆறு இடங்களில் இருக்கும் ராகு நன்மைகளைச் செய்வார் என்றும் துலாம் முதல் மீனம் வரையிலான ஆறு இடங்களில் இருக்கும் கேது நன்மைகளைச் செய்வார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய சர ராசிகளில் இருக்கும் ராகு,கேதுக்கள் தங்களின் தசா புக்தி நடக்கும்போது ஒருவருக்கு இருக்கும் நிலைகளில் மாற்றங்களைத் தருவார்கள். அது வேலை, தொழில், வாழ்க்கை, இருப்பிடம் போன்ற அனைத்து நிலைகளிலும் இருக்கும்.
இனி தனித்தனியாக ஒவ்வொரு லக்னத்துக்கும் கேது என்ன பலன்களை அளிப்பார் என்று பார்ப்போம்.

ஆதித்ய குருஜி

மேஷ லக்னத்துக்கு 1, 4, 7, 10 - வீடுகளில்  குருவுடன் கேது சேர்ந்திருக்கும் போது 'கேள யோகம்' எனப்படும் கோடீஸ்வர யோகத்தைத் தருவார். ஒன்பதாம் வீடான  தனுசு, 11-ம் இடமான கும்பத்தில் இருக்கும் நிலையிலும் மேன்மையான பலன்களைச் செய்வார்.

ரிஷப லக்னத்துக்கு 5, 7, 10 ஆகிய இடங்களில் இருக்கும் நிலையில் ஓரளவுக்குச் சாதகமான பலன்களைச் செய்வார். 11 - ம் இடமான மீனத்தில் இருக்கும்போது வெளிநாடு தொடர்பான நன்மைகள் இருக்கும். ஐந்தாமிடமான கன்னி, கேதுவுக்குப் பிடித்த வீடு என்பதால் இங்கே சூரியன், செவ்வாய், சனியுடன் இணைந்திருக்கும் நிலையில் நன்மைகளைச் செய்வார்.

மிதுன லக்னத்துக்கு நான்காமிடமான கன்னியில் சனியுடனும், 6-ம் இடமான விருச்சிகத்தில் தனித்தும், ஒன்பதாம் வீடான கும்பத்தில் குரு அல்லது புதனுடன் இணைந்தும் தசை நடத்தும் நிலையில் நற்பலன்கள் இருக்கும். ஏழாமிடமான தனுசிலும், பத்தாமிடமான மீனத்திலும் இருப்பது நன்மை தரும் அமைப்புதான்.

கடக லக்னத்துக்கு மூன்று மற்றும் ஐந்தில் கேது தனித்தோ குருவுடன் இணைந்து அல்லது குரு பார்வையில் இருக்கும் நிலையிலோ, கேதுவால் நன்மைகள் இருக்கும். எட்டாமிடமான கும்பத்தில் சனியின் தொடர்புகள் ஏற்படாதவரை கெடுதல்களைச் செய்யமாட்டார். ஆறாமிடத்தில் கேது தனித்து இருப்பது நன்மைகளைத் தராது.

சிம்ம லக்னத்துக்கு இரண்டு, நான்கு, ஐந்து, ஒன்பது, பதினொன்றாம் இடங்களில் இவர் நன்மைகளைச் செய்வார். இந்த லக்னத்தின் பாபரான ஆறுக்குடைய சனியின் தொடர்பை அவர் பெறுவது நன்மைகளைத் தராது. சனியின் தொடர்பைப் பெற்று கேது தசை,புக்தி நடக்கும்போது சனியின் பலன்களான கடன், நோய் போன்றவற்றைத் தனது தசை, புக்திகளில் கேது தருவார்.

கன்னி லக்னத்துக்கு லக்னம், மூன்று, ஐந்து, ஆறு, ஒன்பது, பத்து, பன்னிரண்டு ஆகிய இடங்களில் இருக்கும் இவர் நன்மைகளைச் செய்வார். 11, 12 -ம் வீட்டில் இருக்கும் கேது அந்த வீட்டு அதிபதிகளான சூரிய, சந்திரர்களின் நிலையைப் பொறுத்து தனது தசை, புக்திகளில் ஜாதகரை வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தூரமான இடங்களுக்கு அனுப்பி வைப்பார்.

துலாம் லக்னத்துக்கு ஐந்து, ஒன்பது, பத்து, பன்னிரண்டு ஆகிய பாவங்களில் கேது அமரும் நிலையில் நன்மைகள் இருக்கும். லக்னத்தில் இருந்தால் கெடுதல்கள் இல்லை. நான்காமிட கேதுவால் நன்மைகள் உண்டு. ஏழு, எட்டு, பதினொன்றில் சாதகமான பலன்களைத் தரமாட்டார்.

 

12 ராசிகள்

விருச்சிக லக்னத்துக்கு 1, 11 - ம் வீடுகளில் அமர்ந்து, குருவின் பார்வையைப் பெறும் நிலையில் கேதுவால் நன்மைகள் இருக்கும். மூன்று, நான்காமிடங்களிலும் நன்மைகளைச் செய்வார். ஐந்து, ஒன்பதாமிடங்களில் குரு, சந்திர, செவ்வாயின் தொடர்புகளுடனும், பத்தாமிடத்தில் சூரியனுடன் தொடர்புகொள்ளும்போதும் கேது சுபராகச் செயல்படுவார். மற்ற இடங்களில் இருக்கும்போது சாதாரண பலன்களை அளிப்பார்.

தனுசு லக்னத்துக்குப் பன்னிரண்டாமிடத்தில் சுப, சூட்சும வலுவுடன் இருந்தால் தனம், ஞானம் இரண்டையும் ஜாதகருக்கு தந்து முக்தியும் அளிப்பார். எட்டில் உச்சம் பெறும் குருவுடன் இணைவதும் நல்ல அமைப்புதான். மூன்றாமிடத்தில் அமர்ந்திருக்கும் கேதுவை, குரு பார்ப்பது யோக நிலை. லக்னம், நான்கு, பத்தில் நன்மைகளைத் தருவார். இவை தவிர்த்த பிற இடங்களில் சாதாரணப் பலன்களைக் கேது தருவார்.

மகர லக்னத்துக்கு, அதன் அதிபதி சனியுடன் இணையும்போது ஆன்மிக ரீதியிலான சுப பலன்களைச் செய்வார். லக்னத்தில் இருக்கும் கேது குரு, சனியோடு தொடர்புகொண்டால் ஜாதகர் ஆன்மிகத் தொடர்புள்ள வராகவும், பக்தி உணர்வு மிக்கவராகவும் இருப்பார். 2, 3, 5, 9, 10, 11 - ஆகிய இடங்கள் ஒன்றில் இருக்கும் கேது நல்ல பலன்களைச் செய்வார். 4, 6, 7, 8 - ம் வீட்டில் உள்ள போது பெரிய நன்மைகளைச் செய்வது இல்லை. ஏழு மற்றும் எட்டாமிடங்களில் இருக்கும் கேது வெளிநாட்டுத் தொடர்புகளைச் செய்வார். பன்னிரண்டில் அமரும் கேது வெளிநாடு, ஆன்மிகம், ஞானம், தனம் ஆகிய பலன்களோடு முக்தி நிலையையும் அருளுவார்.

குரு கிரகம்

கும்ப லக்னத்துக்கு லக்னத்தில்  இருக்கும் கேது ஆன்மிக உணர்வுகளையும், நல்ல குணங்களையும் தருவார். 2, 3, 4 -  ஆகிய வீடுகளில் ஏதாவது ஒன்றில் இருப்பதும் யோகமே. ஐந்தில் இருக்கும்போது ஆண் வாரிசு தோஷம் உண்டாகலாம். ஆறாமிடத்தில் இருக்கும்போது  வெளிநாடு, வெளிமாநிலங்களில் வேலை செய்ய வைப்பார். ஏழாமிடத்தில் இருக்கும்போது மண வாழ்க்கை தாமதமாகலாம். எட்டாமிடத்திலிருக்கும்போது, ஜாதகரை பிறந்த இடத்தை விட்டு, தொலைதூர இடங்களுக்கு  அனுப்புவார். 9, 10, 11, 12 -போன்ற வீடுகள் ஒன்றில் இருக்கும்போது நன்மைகளே ஏற்படுத்துவார்.

மீன லக்னத்துக்கு லக்னத்தில் இருக்கும் கேது சனியின் தொடர்பு கிடைத்தால், ஆன்மிக எண்ணங்களைத் தருவார். 3, 4, 6, 7, 8 ஆகிய இடங்களில் நல்ல பலன்கள் இருக்காது. மேற்கண்ட இடங்களில் குருவின் இணைவு அல்லது பார்வை இருக்கும் பட்சத்தில் கெடுதல்கள் செய்ய மாட்டார். 2, 5, 9, 10, 11, 12 - ம் இடங்களில் இருந்தால் நன்மைகள் கிடைக்கும்.  

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close