உலகம் செழிக்க நடைபெற்ற அரசு -வேம்பு திருக்கல்யாணம்! | Tree marriage held in nagai district

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (25/02/2019)

கடைசி தொடர்பு:14:30 (25/02/2019)

உலகம் செழிக்க நடைபெற்ற அரசு -வேம்பு திருக்கல்யாணம்!

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே கண்ணாங்குளம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் திருஞானம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசு - வேம்பு மரக் கன்றுகளை நட்டு வைத்துப் பராமரித்து வந்தனர்.

அரசு - வேம்பு

இந்த இரண்டு கன்றுகளும் பின்னிப் பிணைந்து மரமாக வளர்ந்தன. இந்த மரத்தைச் சுற்றி கான்கிரீட் மேடை கட்டப்பட்டு அதில் நாக வடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. 
இந்த மரங்களுக்கு வயது 40. இதை முன்னிட்டு ஊர்மக்கள் சார்பில், அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருக்கல்யாணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். இதற்காக  'விருட்சராஜா திருமண அழைப்பிதழ்” என்ற தலைப்பில் திருமண பத்திரிகை அச்சிட்டு உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு, வெற்றிலை பாக்குடன் திருமண அழைப்பிதழ் வழங்கினர். 

அதைத் தொடர்ந்து நேற்று (24.2.19) காலையில் அரசு - வேம்பு ஆகிய இரண்டு மரங்களுக்கு முன்பு சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் பஞ்சகவ்யம் மற்றும் முக்கிய மூலிகை திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பின்னர்,  அரசு - வேம்பு மரங்களுக்கு பால், தயிர் மற்றும் திரவியப் பொடிகளுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அரசு - வேம்பு

யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் மரங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டு வேஷ்டி, பட்டுப் புடவைகள்  மற்றும் மலர் மாலைகள் மரங்களுக்கு அணிவிக்கப்பட்டன. சிவாசார்யர்களால் மூன்று முறை மாலை மாற்றும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து மங்கள மேளம் முழங்க திருமாங்கல்யம் சூட்டும் வைபவமும் நடைபெற்றது.

இதுபற்றி சிவாசார்யர்கள் குறிப்பிடுகையில், ``ஊரும் உலகமும் செழிக்கவும், விவசாயம் மற்றும் தொழில்கள் தழைக்கவும், திருமணத் தடை நீங்கவும், அனைவரும் நோயற்ற வாழ்வு வாழவும் பிரார்த்தனை செய்து இந்த வைபவம் நடைபெற்றது. இதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம்'' என்றனர். விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும்  ஏராளமானோர் கலந்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவால் ஊர்மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

படம்: பா.பிரசன்னா


[X] Close

[X] Close