`நாளை மயானக்கொள்ளை திருவிழா!’ - களைக்கட்டியது வேலூர் | Vellore gears up for Mayana kollai festival

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (05/03/2019)

கடைசி தொடர்பு:19:30 (05/03/2019)

`நாளை மயானக்கொள்ளை திருவிழா!’ - களைக்கட்டியது வேலூர்

மயானக்கொள்ளை திருவிழா நாளை நடைபெறுவதால், வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் இன்றே களைக்கட்டியிருக்கிறது. அங்காளம்மன் கோயில்களில் பக்தர்கள் அதிகளவில் காப்புக்கட்டி வழிபட்டுவருகிறார்கள்.

அங்காளம்மன்

மாசி மாத அமாவாசையில் நடைபெறும் மயானக்கொள்ளை திருவிழா, வேலூர் மாவட்டத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அங்காளப் பரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோயிலிலிருந்து, மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்சென்று வழிபடுவார்கள். அலங்கரிக்கப்பட்ட தேர்களுக்கு முன்பு சிவன், பார்வதி, காளியம்மன் வேடமிடும் பக்தர்கள் கோழி, ஆடுகளை வாயில் கடித்தபடி மயானத்திற்குச் சென்று அங்காளப் பரமேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். 

இந்த ஆண்டிற்கான மயானக்கொள்ளை திருவிழா, நாளை (6-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று (5-ம் தேதி) 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக்கட்டி வழிபட்டனர். இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்திருக்கும் சமாதிக்கு, உறவினர்கள் வர்ணம் பூசி, பூ பொட்டு வைத்து, இடுகாட்டைச் சுத்தப்படுத்தினர். இந்த திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம், வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

காப்புகட்டி வழிபட்ட பக்தர்கள்

கூட்டத்தில், பேசிய விழாக்குழுவினர், ``இந்த ஆண்டு மயானக்கொள்ளை திருவிழாவை சிறப்பாக நடத்த போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தோட்டப்பாளையம் பகுதியில் சில பிரச்னைகள் உள்ளன. அங்கு அதிகப்படியான பாதுகாப்பு வழங்க வேண்டும். விழாவில், மது குடித்துவிட்டு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர் செல்லும் இடங்களில் மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தினர். 

இதைத்தொடர்ந்து, டி.எஸ்.பி பாலசுப்பிரமணியம் பேசுகையில், ``மயானக்கொள்ளை திருவிழாவை பிரச்னையின்றி நடத்த போலீஸாருக்கு, விழாக் குழுவினர் ஒத்துழைப்பு தரவேண்டும். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட நேரத்திற்குள், தேர்களைத் தெருக்களிலிருந்து மெயின் ரோட்டுக்கு கொண்டுவர வேண்டும். வீண் காலதாமதம் செய்யக் கூடாது’’ என்று அறிவுறுத்தினார்.


[X] Close

[X] Close