மங்கையின் கண்குறைபாடு போக்கிக் காத்த பெருங்குடி பரமேஸ்வரர்..! | This Article narrates the glory of Perungudi Agaththeeswar temple

வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (06/03/2019)

கடைசி தொடர்பு:17:44 (06/03/2019)

மங்கையின் கண்குறைபாடு போக்கிக் காத்த பெருங்குடி பரமேஸ்வரர்..!

இறைவன் அடியார்க்கு இரங்கி அருள்பாலிப்பவன். நம் குறைகளை அவனிடம் முறையிட நிச்சயம் அவன் அருள் செய்வான். அப்படி இறைவனிடம் தன் மகளின் கண்நோய் குறித்து வேண்டுதல் செய்து பலன்பெற்ற பக்தன் ஒருவன் இறைப்பணிக்குக் கழஞ்சுபொன் கொடையளித்த சம்பவம் ஒன்று வரலாற்றில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 

மங்கையின் கண்குறைபாடு போக்கிக் காத்த பெருங்குடி பரமேஸ்வரர்..!

றைவன் அடியார்க்கு இரங்கி அருள்பாலிப்பவன். நம் குறைகளை அவனிடம் முறையிட நிச்சயம் அவன் அருள் செய்வான். அப்படி இறைவனிடம் தன் மகளின் கண்நோய் குறித்து வேண்டுதல் செய்து பலன்பெற்ற பக்தன் ஒருவன் இறைப்பணிக்குக் கழஞ்சுபொன் கொடையளித்த சம்பவம் ஒன்று வரலாற்றில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 

பெருங்குடி கோயில்

13-ம் நூற்றாண்டில் கூத்தன் என்னும் சிவபக்தன் வாழ்ந்துவந்தார். தினமும் திருப்பெருமுடி பரமேஸ்வரனார் கோயிலுக்குச் சென்று தவறாது வழிபடுவார். காவிரி ஆற்றங்கரையில் அவரது கழனி இருந்தது. நல்ல முறையில் விவசாயம் செய்த அவர் வாழ்க்கை மிகவும் செழிப்பாக இருந்தது. அவருக்கு ஒரு மகள் இருந்தாள். பெயர், நல்லமங்கை. சுட்டிப் பெண்ணாக வளர்ந்துவருகையில் நல்லமங்கை வாழ்க்கையில் ஒரு துயரம் நேர்ந்தது. நல்ல மங்கையின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கிவிட்டது. கூத்தன் மிகவும் அதிர்ச்சியடைந்தான். எவ்வளவோ வைத்தியம் செய்தும் பார்வை குறைபாடு சரியாகவில்லை. வைத்தியர்களும் தடுமாறினர். ஒரு கட்டத்தில் நல்லமங்கை பார்வை முழுவதையும் இழந்தாள்.

கூத்தன் போகாத இடம் இல்லை; பார்க்காத வைத்தியம் இல்லை. எதுவும் நல்லமங்கைக்குப் பார்வையினைக் கொடுக்கவில்லை. வெளியூர்களில் வாழும் பெரும் வைத்தியர்களிடம் சென்று வைத்தியம் பார்க்கலாம் என்று முடிவு செய்து அதற்கெனப் பணத்தைச் சேர்க்கத் தொடங்கினான். வருடங்கள் ஓடிக்கொண்டேயிருந்தன. 

பெருங்குடி

கி.பி 1268, ஆண்டில் பெருமுடி பரமேஸ்வரனார் கோயிலில் ஹொய்சாள மன்னன் ராமநாதன் திருப்பணி செய்ய ஆரம்பித்தான். திருப்பணிக்கு ஒதுக்கிய நிதி முழுவதும் தீர்ந்துவிட்டன. பணி செய்த கோயில் கல் தச்சர்களுக்குக் கூலிகூட கொடுக்க முடியாத நிலை. கோயில் வேலை அப்படியே நின்றுபோனது. இறைவனின் திருப்பணி நின்றுபோனதால் மனம் வருந்திய கூத்தன், தன் மகள் நல்லமங்கையின் கண் வைத்தியத்துக்கென வருடக்கணக்காக உழைத்துச் சேர்த்து வைத்திருந்த மூன்று கழஞ்சு பொன்னையும் கோயில் திருப்பணிக்குக் கொடை அளித்தான். இந்தப் பணம் அப்படியே கல் தச்சர்களுக்குக் கூலியானது. திருப்பணிகள் மீண்டும் வேகம் கொண்டு நடந்து முடிந்தன. 

மகள் கண் வைத்தியத்துக்குச் சேர்த்து வைத்திருந்த பொன்னை, கோயில் திருப்பணிக்குச் செலவிட்டு விட்டதால் கூத்தன் வைத்திய செலவுக்கு மீண்டும் பணம் சேர்க்க வேண்டியதாயிற்று. வேறுவழியின்றி திருப்பெருமுடி பரமேஸ்வரனின் திருவடிகளில் விழுந்து சரணடைந்தான். கருணைக் கடலான பரமேஸ்வரன் தன் திருப்பணியினால் கைப்பொருளை இழந்து வாடும் பக்தனின் நிலைகண்டு பொறுப்பாரா? இறைவன் அருள்புரிந்தார். அற்புதம் நிகழ்ந்தது. 

பெருங்குடி

நல்லமங்கைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை தெரிய ஆரம்பித்தது. சில நாள்களில் அவளுடைய கண்கள் பிரகாசமாகி முழுமையாகப் பார்வை திரும்பியது. கூத்தன் மகிழ்ச்சியில் கூத்தாடினான். பெருமுடி பரமேஸ்வரனுடைய அருளை நினைத்து நெக்குருகினான். தன் துயர் துடைக்கப் பரமேஸ்வரர் இருக்கும்போது தனக்குப் பணம் எதற்கு என்று முடிவுசெய்து அவன் சேர்க்கும் பணத்தையெல்லாம் பரவேஸ்வரனின் திருப்பணிக்கே வழங்கினான். பெருமுடி பரமேஸ்வரனுக்கு கழஞ்சுபொன் பட்டம் செய்து சாற்றித் தன் நன்றியைத் தெரிவித்தான். நல்ல மங்கையும் திருமணம் முடிந்து மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். இந்தப் பொன் கொடுத்த நிகழ்வு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் வடித்து வைக்கப்பட்டிருக்கிறது. 

மேற்கண்ட அற்புதம் நிகழ்ந்த இடம் பெருங்குடி அகத்தீஸ்வரர் கோயில். கல்வெட்டுகளில் இந்த ஊர் `பெருமுடி',' திருப்பெருமுடி' என்று குறிக்கப்பட்டுள்ளது. இப்போது அவை மருவி `பெருங்குடி' என்று அழைக்கப்படுகிறது. அகத்தியர் வழிபட்ட சுயம்பு லிங்கமாகக் கருதப்படுவதால் இவர் `அகத்தீஸ்வரர்' என்றும் `அகத்தீஸ்வரமுடையார்' என்றும் பெயர்பெற்றார்.  

திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் சோமரசன்பேட்டைக்கு அடுத்து வலது பக்கமாகப் பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், பெருங்குடி கிராமத்தை அடையலாம். பார்வைக்கு எட்டிய தொலைவுவரை வயல்வெளிகள் நிறைந்திருந்த அந்த ஊரின் வடக்கே அமைந்திருக்கிறது சோழர் காலக் கற்றளியான அகத்தீஸ்வரர் கோயில். தற்போது `அகத்தீஸ்வரர்' என்று அழைக்கப்பட்டாலும் இறைவனார் பெயர் `பெருமுடி பரமேஸ்வரனார்' என்றே அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது. 

தட்சணாமூர்த்தி

சோழர்களால் காவிரிக் கரையோரம் எழுப்பப்பட்ட நூற்றுக்கணக்கான கற்றளிகளில் இதுவும் ஒன்று. தற்போதிருக்கும் கற்றளி ராஜராஜனின் தந்தையான சுந்தரச்சோழனின் காலத்தில் எழுப்பப்பட்டது. கோயிலில் கருவறை, முக மண்டபம் ஆகியவை சோழர்களாலும், அம்மன் சந்நிதி பாண்டியர்களாலும் எழுப்பப்பட்டது. அம்மன், சிவகாமசுந்தரி என்று அழைக்கப்படுகிறாள். கோயில் பார்ப்பதற்கு எளிமையாகவும், சிறியதாகவும் காட்சியளித்தாலும் அற்புதமான வேலைப்பாடுகளுடன் அழகான விமானம் மற்றும் வியக்க வைக்கும் சிற்பங்களுடன் அமைந்திருக்கிறது. 

கோட்டத்தில் தெற்கே தென்முகக் கடவுள் ஆலமர் செல்வர், மேற்கே மாதொருபாகன், வடக்கே பிரம்மா, மற்றும் சண்டிகேஸ்வரரது  சிற்பங்கள் அனைத்தும் முற்காலச் சோழர் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. இங்கிருக்கும் மாதொருபாகன் சிற்பத்தைப் போல வேறு எங்கும் காண இயலாது. அவ்வளவு நேர்த்தியாக உச்சந்தலையில் தொடங்கி புருவம், கண், கன்னம், உதடு, மார்பு, இடுப்பு, தொடை, கால்கள் என்று ஆண் பகுதியையும், பெண் பகுதியையும் பிரித்துக் காட்டியிருக்கிறார்கள். முற்கால சோழர் சிற்பக்கலையின் உன்னதமான படைப்பு மாதொருபாகன் சிலை.

கோயிலுக்குள் மகாகணபதி, வேங்கடாசலபதி, லட்சுமி நாராயணன் ஆகியோர் இடது பக்கமாகவும்; முருகன் தெய்வானையுடன் வலது பக்கத்திலும் அருள்புரிகிறார்கள். அருணகிரிநாதர் போற்றிப் புகழ்ந்த முருகப்பெருமான் இவர். முருகனுக்கு அருகே சப்த கன்னிகளில் வைஷ்ணவி, பிராமி, வாராகி ஆகியோர் அருள்புரிகிறார்கள். இந்த வாராகிக்குத் தேய்பிறை பஞ்சமி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுனி வாழை இலையில் பச்சரிசி இட்டு தேங்காய் தீபம் ஏற்றி வழிபட்டால் வியாபாரத்தில் ஏற்றம் வரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.   

முருகன்

முருகனுக்கு நேர் எதிரே ஈசானிய மூலையில் சனீஸ்வர பகவான் தனியாக எழுந்தருளியிருக்கிறார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்வதால் செவ்வாய் தோஷம், சனி தோஷம் இருப்பவர்களுக்கு இந்தக் கோயில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. கருவறைக்குள் அகத்தீஸ்வரர் சாய்ந்த திருமேனியாக வடக்கே சாய்ந்து தென்கிழக்கைப் பார்த்தபடி அருள்பாலிக்கிறார். அம்மன் ஸ்ரீ சிவகாம சுந்தரி தேவி தனிச் சந்நிதியில் எழுந்தருளுகிறாள். அம்மன் சந்நிதியில் விநாயகரும், முருகப் பெருமானும் காட்சியளிக்கின்றனர். இந்தத் தல அம்மனுக்கு அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமமும் உண்டு. 

கல்வெட்டுச் செய்தி - இந்தியக் கல்வெட்டறிக்கை எண் : 394 வருடம் 1939 - 1940

சக் கூலிக்கு இவன் இட்ட பொன் கழஞ்சு முக்கழஞ்சு இப் 

பொன் முக்கழஞ்சும் திருப்பணிக்கு கூ(த்)தன் இட் 

டான் இதுவும் 19 வது மகரநாயற்று நாள் இந்த கூத்தன் 

மகள் நல்லமங்கை சிறு வயஸ்ஸிலே கண் ம(றை)ந்த 

அளவுக்கு இவன் மகள்

பின்பு கண் விளங்கி ஐந்நாயனாருக்கு இவன் கழஞ்சு 

பொன்னிட்டு பட்டம் பண்ணிச் சாத்தினான். 

எப்படிச் செல்வது: திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் சோமரசன் பேட்டைக்கு அடுத்து வலது பக்கமாகப் பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் பெருங்குடி கிராமத்தை அடையலாம்.

சிறப்பு: கண்நோய் உடையவர்கள் இந்தத் தலத்து இறைவனை வழிபட விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close