யுனெஸ்கோ பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்கப்படுமா வாரங்கல் ராமப்பா கோயில்? | Ramappa Temple In Warangal May Get World Heritage Tag

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (07/03/2019)

கடைசி தொடர்பு:18:30 (07/03/2019)

யுனெஸ்கோ பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்கப்படுமா வாரங்கல் ராமப்பா கோயில்?

தெலங்கானா மாநிலம், ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் பாலம்பேட் கிராமத்தில் அமைந்திருக்கிறது ராமப்பா கோயில். காகத்தீய கலைப் பாணியில் கட்டப்பட்ட 800 ஆண்டுகள் பழைமையான கோயில் இது. காகதீய ஹெரிடேஜ் ட்ரஸ்ட் (Kakatiya Heritage Trust ) அமைப்பு 2015 ம் ஆண்டிலிருந்து எடுத்து வரும் தொடர் நடவடிக்கையின் மூலம் இந்த ஆண்டுக்கான `யுனெஸ்கோ பாரம்பர்யச் சின்னம்’ பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவிலிருந்து இந்தக் கோயில் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதனால், ராமப்பா கோயில் யுனெஸ்கோ பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உருவாகியிருக்கிறது. 

ராமப்பா கோயில்

PC : https://commons.wikimedia.org-Jayadeep Rajan

ஒவ்வோர் ஆண்டும் யுனெஸ்கோ அமைப்பு தகுதி வாய்ந்த பாரம்பர்ய மற்றும் பண்பாட்டுச் சின்னங்களை தேர்ந்தெடுப்பது வழக்கம். இயற்கை, பாரம்பர்யம், கலாசாரம், பண்பாடு மற்றும் கலை அடிப்படையில் விண்ணப்பிக்கப்படும் சின்னங்களிலிருந்து தகுதி வாய்ந்தவற்றைத் தேர்ந்தெடுத்து யுனெஸ்கோ அமைப்பு பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்கும். அந்த வகையில் வாரங்கல் கோயில் முதல் கட்டமாகப் பரிந்துரைப் பட்டியலில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இடம்பெற்றிருக்கிறது. யுனெஸ்கோ அமைப்பின் ஹெரிடேஜ் குழுவினர் ஆய்வு செய்து, தகுதியிருப்பின் ராமப்பா கோயிலை உலகப் பாரம்பர்யச் சின்னமாக அறிவிப்பார்கள். இது, வாரங்கல்லிலிருந்து 77 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. கி.பி 1213 ம் ஆண்டு காகதீய அரசர் கணபதி தேவர் காலத்தில், அவரது படைத்தலைவர் ரேச்சர்ல ருத்திரன் என்பவரால் எழுப்பப்பட்ட கோயில் இதுவாகும். செம்மணற் கல்லால் எழுப்பப்பட்ட அழகிய கலைப் பெட்டகம் இந்தக் கோயில். அழகிய தூண்கள், குறுஞ்சிற்பங்கள், நளினமான சிற்பங்கள் நிறைந்த இந்தக் கோயிலை இந்தியத் தொல்லியல் துறையினர் தற்போது பராமரித்து வருகிறார்கள். ராமப்பா கோயில் தேர்ந்தெடுக்கப்பட்டால் தெலங்கானாவிலிருந்து அறிவிக்கப்படும் முதல் யுனெஸ்கோ பாரம்பர்யச் சின்னமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

யுனெஸ்கோ

PC:  https://commons.wikimedia.org - Gokanag

ஏற்கெனவே தமிழகத்திலிருந்து மாமல்லபுரம், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழீச்சுவரம், தாராசுவரம் கோயில் ஆகியவை யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பர்ய மற்றும் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது! 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close