கோலாகலமாகத் தொடங்கியது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா! | Thiruvallikinai Parthasarathy Perumal Temple

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (07/03/2019)

கடைசி தொடர்பு:19:00 (07/03/2019)

கோலாகலமாகத் தொடங்கியது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் தெப்பத் திருவிழா, நேற்று (6.3.19)   தொடங்கியது. கோயில் அருகே அமைந்துள்ள கைவீரணி குளத்தில், தெப்பத்தில் அமர்ந்தவாறு பார்த்தசாரதி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பார்த்தசாரதி பெருமாள்

கைவீரிணி தீர்த்தம்  இந்திர, சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆகிய ஐந்து தீர்த்தங்களைத் தன்னுள் கொண்ட சிறப்பினை உடையது என்று நம்பப்படுகிறது. 

இந்தத் திருக்கோயிலில் நடைபெறும் பல திருவிழாக்களில், தெப்பத் திருவிழா மிகவும் சிறப்பானது. கைவீரணி திருக்குளத்தில் முதல் மூன்று நாள்கள் பார்த்தசாரதி சுவாமியும், அதனைத் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு முறையே நரசிம்மர், ரங்கநாதர், ராமர் மற்றும் கஜேந்திரவரதராஜசுவாமி ஆகியோர், தெப்பத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 

பெருமாள்

இதன்படி, முதல் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு, பார்த்தசாரதி பெருமாள் தெப்பத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கைவீரணி குளத்தில் ஐந்து முறை வலம்வந்த பெருமாளை பக்தர்கள் பரவசத்துடன் வணங்கினர். பொதுமக்கள் பெருமாளைத் தரிசனம் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

தெப்பம்

தெப்பத்தில் பார்த்தசாரதி பெருமாள் வலம் வந்தபோது, தீயணைப்புத் துறையைச் சேர்ந்த காவலர்கள், மீட்புப் படகில் பாதுகாப்புக்காகப் பின்னால் வந்தனர். இதன்பிறகு, உற்சவ மூர்த்தி மாடவீதிகளை வலம்வந்து, திருக்கோயிலை அடைந்தார். 

தெப்பத் திருவிழா, வரும் திங்கள்கிழமை (12.3,2019) வரை நடைபெறும். 


[X] Close

[X] Close