மந்திராலய மகானுக்கு இசை அஞ்சலி... மகாருத்ர ஜபம் ஹோமம்! | raghavendra swamy jayanthi festival

வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (11/03/2019)

கடைசி தொடர்பு:18:13 (11/03/2019)

மந்திராலய மகானுக்கு இசை அஞ்சலி... மகாருத்ர ஜபம் ஹோமம்!

மந்திராலய மகானுக்கு இசை அஞ்சலி... மகாருத்ர ஜபம் ஹோமம்!

க்த பிரகலாதனின் அம்சமாக அவதரித்தவர் ஶ்ரீராகவேந்திர சுவாமிகள். அவர் தம்முடைய ஜீவித காலத்தில் மட்டுமல்லாமல், பிருந்தாவன பிரவேசத்துக்குப் பிறகும் எத்தனையோ பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். பிருந்தாவன பிரவேசத்துக்குப் பிறகு அவர் நிகழ்த்திய முதல் அற்புதம், தம்முடைய சீடர் அப்பண்ணாச்சார் பூர்த்தி செய்யாமல் விட்ட ஸ்லோகத்தைப் பூர்த்தி செய்ததுதான். 

மகாருத்ர ஜபம்

ராகவேந்திரர் ஜீவசமாதி அடைய திருவுள்ளம் கொண்டார். ஆனால், தம்முடைய சீடர் அப்பண்ணாச்சார் அருகில் இருக்கும்போது, பிருந்தாவனப் பிரவேசம் மேற்கொள்ள அனுமதிக்க மாட்டார் என்பது ராகவேந்திர சுவாமிகளுக்குத் தெரியும். எனவே, அப்பண்ணாச்சாரை அழைத்த சுவாமிகள், ``நாம் விரைவில் பிருந்தாவனப் பிரவேசம் செய்யப்போகிறோம். எனவே, நீ மற்றவர்களிடம் இந்த விஷயத்தைத் தெரிவித்துவிட்டு வா'' என்று கூறி அனுப்பிவிட்டார். 

குருநாதர் பிருந்தாவனப் பிரவேசம் செய்ய சில நாள்கள் ஆகும் என எண்ணிய அப்பண்ணாச்சார் அந்தப் பக்கம் சென்றதும், திவான் வெங்கண்ணாவிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, ஜபம் செய்தபடி பிருந்தாவனப் பிரவேசம் செய்ய சித்தமானார். இந்த விஷயம் அப்போது பிச்சாலயா என்ற ஊரிலிருந்த அப்பண்ணாச்சாருக்குத் தெரிய வந்தது. உடனே மந்த்ராலயத்துக்குச் செல்ல துடித்தார். துங்கபத்திரையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெருகி வரும் வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் குருநாதரைப் போற்றும் ஸ்லோகங்களைப் பாடியபடியே ஆற்றைக் கடந்து மந்த்ராலயத்தை அடைந்தார். அவர் வருவதற்குள் பிருந்தாவனம் மூடப்பட்டு விட்டது. குருநாதரை தரிசிக்க முடியாத ஏக்கத்தில் அப்பண்ணாச்சார் ஸ்லோகத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார். அவருக்கு ஆறுதல் சொல்லும் வண்ணம், பிருந்தாவனத்துக்குள் இருந்து, `ஸாக்ஷீ ஹயாஸ்யோத்ரஹி' என்று ஶ்ரீராகவேந்திரரின் அமுதக் குரல் ஒலித்தது. அப்பண்ணாச்சாருக்கு ஆறுதல் சொல்லும்விதமாக மகான் ஶ்ரீராகவேந்திரர் நிகழ்த்திய முதல் அற்புதம் இதுவே.

ராகவேந்திர சுவாமிகள்.

சுவாமிகள் ஒருமுறை கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தபோது, மூன்று ஜோதிடர்கள் அவரை தரிசிக்க வந்தனர். அவர்களிடம் ஒரு ஜாதகத்தைக் கொடுத்து ஆயுள்காலம் கணித்துச் சொல்லும்படிக் கேட்டார். மூவரும் தனித்தனியாகக் கணித்துக் கூறினர். ஒருவர் அந்த ஜாதகரின் ஆயுள் 100 வருடங்கள் என்றும்; இரண்டாமவர் 300 வருடங்கள் என்றும், மூன்றாமவர் 700 வருடங்கள் என்றும் கணித்துக் கூறினர். 

அவர்கள் மூவரின் கணிப்பும் சரிதான் என்று கூறிய சுவாமிகள், அதற்கான விளக்கத்தையும் தாமே கூறினார். ``நீங்கள் மூவரும் கணித்துக் கூறிய ஜாதகம் என்னுடைய ஜாதகம்தான். 100 வயது என்பது நான் இந்த உடலில் இருக்கும் காலத்தைக் குறிப்பதாகும். 300 வருடங்கள்    என்பது என்னுடைய கிரந்த நூல்கள் பிரகாசமடைந்து பரவும் காலத்தைக் குறிப்பதாகும். 700 வருடங்கள் என்பது பிருந்தாவனப் பிரவேசத்துக்குப் பிறகு 700 வருடங்கள் என் பக்தர்களுக்கு அருள்புரிவேன் என்பதைக் குறிக்கும்'' என்று விளக்கினார் சுவாமிகள்.
அதன்படியே தம்முடைய பிருந்தாவனப் பிரவேசத்துக்குப் பிறகு இன்றைக்கும் தம் பக்தர்கள் வாழ்க்கையில் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார் ராகவேந்திர சுவாமிகள்.

ஶ்ரீராகவேந்திரரின் பிருந்தாவனம் அமைந்திருக்கும் புண்ணிய பூமியான மந்த்ராலயத்தில், சுவாமிகளின் ஜயந்தி விழாவை முன்னிட்டு, திருவையாறு இசை விழாவைப் போலவே, `நாத ஹாரம்' என்ற பெயரில் ஓர் இசை விழா கடந்த 12 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த வைபவத்தை ஶ்ரீராகவேந்திர நாதஹார டிரஸ்ட் என்ற அமைப்பு முன்னின்று நடத்தி வருகிறது.

ராகவேந்திர சுவாமிகள்.

அந்த அமைப்பைச் சேர்ந்த மதுரை பாலசுப்ரமணியனிடம் பேசினோம்.
``ஶ்ரீராகவேந்திர நாதஹார டிரஸ்டின் சார்பில் கடந்த 2005-ம் வருடம் முதல் மந்த்ராலயம் ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனத்தில் இசை அஞ்சலி செய்து வருகிறோம். ஒவ்வொரு வருடமும் இசை அஞ்சலியுடன் பக்தர்களின் பங்களிப்போடு ஒரு காணிக்கையும் செலுத்திவருகிறோம். இதுவரை, வெள்ளி வீணை, நவரத்ன ரதம், 108 பசுக்கள் தானம், மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக ஒரு விடுதி, தங்கத்தினாலான அஷ்டோத்திர பாத்திரம், தங்க அபிஷேக பாத்திரம், தங்க மந்த்ராட்சத பாத்திரம் ஆகியன சமர்ப்பணம் செய்திருக்கிறோம்.

மகாருத்ர ஜபம்

இந்த வருடம் 13 -ம் தேதி தங்கத்தினாலான புஷ்ப பாத்திரம் சமர்ப்பணம் செய்யவிருக்கிறோம். முன்னதாக தமிழகத்திலிருந்து 65 வேத விற்பன்னர்கள் கலந்துகொள்ளும் மகாருத்ர ஜபம் மற்றும் ஹோமம் மார்ச் 12-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த ஆன்மிகத் திருப்பணியில் அனைத்து பக்தகோடிகளின் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். இந்தப் புனிதப் பணியில் கலந்துகொள்வதன் மூலம் குருவருளையும் திருவருளையும் பெறலாம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close