புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் செல்வவளம் சேர்க்கும் காரடையான் நோன்பு | Tomorrow is kaaradaiyan nonbu

வெளியிடப்பட்ட நேரம்: 09:44 (14/03/2019)

கடைசி தொடர்பு:10:02 (14/03/2019)

புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் செல்வவளம் சேர்க்கும் காரடையான் நோன்பு

புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் செல்வவளம் சேர்க்கும் காரடையான் நோன்பு...

புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் செல்வவளம் சேர்க்கும் காரடையான் நோன்பு

நாளை காரடையான் நோன்பு. காரடையான் நோன்பு என்பது கணவனின் நீடித்த ஆயுளை வேண்டிப்பெறும் நோன்பாகவே பெரும்பாலும் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், அதுமட்டுமே அதன் பயனன்று. ஒரு பெண்ணுக்குப் புகுந்த வீடும் பிறந்த வீடும் இரு கண்கள் என்பர். அந்த இரு வீடுகளும் சகல செல்வங்களையும் பெற்றுச் செழிக்கச் செய்யும் ஒரு நோன்பாகவே காரடையான் நோன்பு அமைகிறது. சாவித்திரியின் கதையை உற்று நோக்கினால் இதை அறியலாம்.

காரடையான் நோன்பு

பகைவர்களிடம் போரில் தோல்வியுற்ற துயுமத்சேனன் என்னும் சால்வ நாட்டு மன்னன், காட்டில் தன் மனைவி மற்றும் மகன் சத்யவானோடு வாழ்ந்து வந்தார். சத்தியவான் பேரழகு கொண்ட ஆண்மகன். அந்தக் காட்டுக்குத் தன் தந்தை அஸ்வபதியோடு வந்த சாவித்திரி, சத்தியவானின் அழகிலும், அவன் தன் பெற்றோருக்குச் செய்யும் பணிவிடைகளிலும், அவர்களிடம் அவன் காட்டும் பணிவிலும் மனதைப் பறிகொடுத்தவளாக,  அவன் மேல் காதல் கொள்கிறாள். சத்தியவானைத் திருமணம் செய்துகொள்ளும் தன் விருப்பத்தையும் தன் தந்தையிடம் தெரிவிக்கிறாள். அந்த நேரம் அங்கு வரும் நாரத மகரிஷி `சத்தியவானின் ஆயுள்  இன்னும் பன்னிரண்டு மாதங்களே' எனச் சொல்லி எச்சரிக்கிறார். 

மனதில் வரித்தவனையே கணவனாக அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சாவித்திரி, தன் தந்தையிடம், ``தந்தையே, சத்தியவானை நான் மனதால் கணவனாக வரித்துவிட்டேன். மணந்தால் அவரையே மணப்பேன்'' என்று உறுதியுடன் கூறிவிட்டாள். 

மகளின் மன உறுதியை நன்கு அறிந்த அஸ்வபதி வேறுவழியின்றி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். நாரத மகரிஷி சாவித்திரியிடம், ``சாவித்திரி, நான் சில நோன்பு முறைகளை உனக்கு உபதேசிக்கிறேன். நீ அதை பக்திபூர்வமாகக் கடைப்பிடித்தால், அம்பாள் மனம் மகிழ்ந்து உனக்கு நிகழ இருக்கும் தீமைகளை அழித்து நன்மைகளையே அருள்வாள்" என்று கூறினார்.

நோன்பு

சாவித்திரியும் நாரதர் உபதேசித்த நோன்பைக் கடைப்பிடித்தாள். சத்தியவான் உயிர் பிரியும் நாளும் வந்தது. சாவித்திரி மனம் தளராமல் நோன்பைக் கடைப்பிடித்தாள். நோன்பு முடியும் தருவாயில் சத்தியவான் மயங்கிச் சரிந்தான். அப்போது யம தருமராஜன் சத்தியவானின் உயிரைக் கவர்ந்து செல்ல அங்கு வந்தான்.

ஒளிவீசும் தேகத்தோடு தோன்றிய யமனைக் கண்டு வணங்கிய சாவித்திரி, `` தாங்கள் யார் ?" எனக் கேட்டாள். அதற்கு,  'நான் யமன்' என்று பதிலளித்தான் அந்த தேவன்.

``பொதுவாக மானுட உயிர்களைக் கவர்ந்து செல்ல உங்கள் சேவகர்களான யம கிங்கரர்கள்தானே வருவார்கள்? தாங்களே வந்தது ஏன்" என்று சாவித்திரி கேட்டாள்.

அதற்கு யமன் , ``சத்தியவான் தர்மத்தில் தலை சிறந்தவன் என்பதால் அவனை சேவகர்கள் அனுப்பி அழைத்தல் தகாது என்று நானே வந்தேன்" என்று பதில் அளித்து சத்தியவானின் உயிரைக் கவர்ந்தான்.

ஆனபோதும் மனம் தளராத சாவித்திரி, தான் கடைப்பிடித்த நோன்பின் மகிமையினால் கிடைத்த ஆற்றலைக் கொண்டு யமனைப் பின் தொடர்ந்தாள். சாவித்திரி தன்னைப் பின் தொடர்வதைக் கண்டதும் மனம் இரங்கிய யமன், ஒரு வரம் தருவதாகவும் சத்தியவானின் உயிரைத் தவிர எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்று கூறினார்.

காரடையான் நோன்பு

``நாட்டையும் இழந்து பார்வையும் இழந்து காட்டில் ஆசிரமத்தில் வாழும் எனது மாமனாரும் சத்தியவானின் தந்தையுமாகிய துயுமத்சேனன் மீண்டும் ஆட்சியையும் பார்வையையும் பெற வேண்டும் என்று வேண்டினாள். அதற்கு யமன் `தந்தேன்' என்று சொல்லி நடக்க ஆரம்பித்தான். மீண்டும் சாவித்திரி பின் தொடர்ந்தாள்.  

மறுபடியும் சாவித்திரி தன்னைத் தொடர்வதைக் கண்ட யமன் அவளிடம்  ``நீ மிகவும் களைத்திருப்பதால் என்னைத் தொடரவேண்டாம்." என்று சொன்னான்.

அதற்கு அவளோ, ``என் கணவன் இருக்கும் இடத்தில் நான் இருக்கும்போது எனக்கு எப்படி களைப்பு ஏற்படும்" என்று பதிலளித்தாள்.

கணவன் மீதான அவளின் பாசத்தைக் கண்ட யமன், ``உத்தமியே, உனக்கு மீண்டும் ஒரு வரம் தருகிறேன். சத்தியவானின் உயிர் தவிர்த்த வேறு எது வேண்டுமானாலும் கேள் " என்றான்.

சாவித்திரியும் தன் தந்தைக்கு அரசாள ஆண்வாரிசு இல்லாததால், அவருக்கு ஆண்வாரிசு தேவை என்று கேட்டாள். `அப்படியே ஆகட்டும்' என்று யமன் வாக்களித்தான்.

யமன் செல்லும் பாதையிலேயே தொடர்ந்து சென்றாள் சாவித்திரி. மீண்டும் அவளோடு பேசிய யமன், அவளின் வாக்குவன்மையிலும் மன உறுதியிலும் மனம் மயங்கி, `இன்னுமொரு வரம் தருகிறேன். சத்தியவான் உயிர் அன்றி வேறு ஏதாவது கேள்' என்றான்.

சாவித்திரியும் யமனைப் பலவாறு துதித்து, ``போரில் பின்வாங்காத வீரம் உடைய குமாரர்கள் எனக்கு புத்திரர்களாக வேண்டும்" என்று கேட்டாள். சாவித்திரியின் சாமர்த்தியமான பேச்சைக் கேட்ட யமன் `அப்படியே ஆகட்டும்' என்று சொல்லி மேலும் நடந்தான். சாவித்திரியோ பின் தொடர்ந்தாள்.

யமனுக்கு சாவித்திரியின் பொறுமை கண்டு மனம் இளகியது. அவன் சாவித்திரியுடன், `இன்னும் என்ன வரம் வேண்டும்?' என்றான். அதற்கு சாவித்திரி, `ஏற்கெனவே நீங்கள் தந்த வரமாகிய புத்திரப் பிராப்தி எனக்கு என் கணவன் இல்லாமல் எப்படிக் கிடைக்கும்? எனவே, அவனை மீண்டும் உயிப்பித்து, ஆயுளையும் நீட்டித்துத் தர வேண்டும்' என்று வேண்டிக்கொண்டாள்.

யமதர்மராஜன் இதற்குமேலும் அவள் பொறுமையை சோதிக்க விரும்பாமல், `தந்தேன்' என்று சொல்லி மறைந்தார். சத்தியவான் உறக்கத்தில் இருந்து எழுபவன் போல எழுந்தான். அவள் பெற்ற வரத்தின்படி அவள் மாமனார் பார்வை பெற்று பலசாலியானார். இழந்த ராஜ்யத்தை மீட்டார். சாவித்திரியின் தந்தைக்கும் ஆண் வாரிசு ஏற்பட்டது. சத்தியவானும் சாவித்திரியும் வீரமிக்க புத்திரர்களைப் பெற்று பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

சாவித்திரி தன் கணவனின் உயிரைக் காக்கச் செய்த நோன்பே காரடையான் நோன்பு. இந்த நோன்பை பெண்கள் மேற்கொண்டு வேண்டிக்கொள்ள, தீர்க்க சுமங்கலி பாக்கியம் மட்டுமன்றி, புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் அனைத்து வளங்களும் கிடைக்கச் செய்யலாம். 

சாவித்ரி

நோன்பு நோற்பது எப்படி? 

காரடையான் நோன்பு நாளன்று காலையிலேயே நீராடி, தூய ஆடைகளை அணிய வேண்டும். பூஜையறையைச் சுத்தம் செய்து, கோலமிட வேண்டும். ஒரு மனைப் பலகையில் தேங்காய், மாவிலைகள் கொண்ட கலசம் வைக்க வேண்டும். கலசத்தை அலங்காரம் செய்து அதன் மேல் நோன்புச் சரடை வைக்க வேண்டும். கலசத்தையே காமாட்சியாக அல்லது சாவித்திரி தேவியாகக் கருதி வணங்க வேண்டும். 

`உருக்காத வெண்ணெயும் உவப்பான காரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் நீங்காதிருக்க வேண்டும்' என்று சொல்லி செய்த கார அடையையும் வெல்ல அடையையும் வெண்ணெயோடு சேர்த்து படைக்க வேண்டும். பின்பு மஞ்சள் பூசிய நோன்புக் கயிற்றை பெண்கள் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த விரதம் இருக்கும் திருமணமான பெண்களுக்கு தீர்க்கசுமங்கலி வரமும், திருமணமாகாத பெண்களுக்கு கூடிய விரைவிலேயே திருமண பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை

நேரம் : நாளை (15.3.19) காலை சரடு மாற்றும் நேரம் : அதிகாலை 5.20 - 5.30.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close