மீண்டும் உற்சவத்துக்கு வந்த தொன்மையான சோமாஸ்கந்தர்! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் பக்தர்கள்! | Kanchipuram Ekambaranathar Temple Festival

வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (16/03/2019)

கடைசி தொடர்பு:10:22 (16/03/2019)

மீண்டும் உற்சவத்துக்கு வந்த தொன்மையான சோமாஸ்கந்தர்! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் பக்தர்கள்!

மீண்டும் உற்சவத்துக்கு வந்த தொன்மையான சோமாஸ்கந்தர்! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் பக்தர்கள்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பஞ்சபூதத் தலங்களில் பிருத்வி (மண்) தலம் என்ற பெருமையைப் பெற்றது. உற்சவர் சிலை தொடர்பாக பிரச்னை ஏற்பட்ட கோயிலும் இதுதான். இந்தக் கோயிலில் இருந்த பழைமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலையைச் சீரமைக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று முதல் பழைமையான உற்சவ மூர்த்தியே வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஏகாம்பரநாதர் கோயிலும் ஒன்று. இக்கோயிலில் வழிபாட்டில் இருந்த தொன்மையான சோமாஸ்கந்தர் சிலை சிதிலம் அடைந்ததாகக் கூறி இந்து சமய அறநிலையத்துறையினர் 2015-ல் புதிய சோமாஸ்கந்தர் சிலை செய்தனர். இதில் அவர்கள் குறிப்பிட்ட அளவு தங்கம் கலக்கவில்லையெனவும் ஆகம விதிப்படி சிலை செய்யப்படவில்லை எனவும் அப்போது புகார் எழுந்தது. இதையடுத்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கோயிலில் உள்ள சிலைகளைப் பார்வையிட்டார். பின்பு சிவனடியார்களும் பக்தர்களும் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டது. இதைத் தொடர்ந்து முத்தையா ஸ்தபதி மற்றும் இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

பின்பு சர்ச்சைக்குரிய அந்தப் புதிய சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தொன்மையான சோமாஸ்கந்தர் சிலையை வைத்து பங்குனி உற்சவத் திருவிழாவை நடத்த வேண்டும் என சிவபக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்குக் கோரிக்கை விடுத்தனர்.

சோமாஸ்கந்தர் சிலை சரிசெய்யும் பணி

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டியதால் காஞ்சிபுரம் சிவபக்தர்களும் அடியார்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி பழைய சிலையையே சரி செய்து உற்சவத்துக்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் சிலையை சரிசெய்து உற்சவம் நடத்துவது தொடர்பான பணிகள் பொன்.மாணிக்கவேல் தலைமையில் நடைபெற வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஏகாம்பரநாதர் கோயிலில் திரண்டனர். பழைய சோமாஸ்கந்தர் சிலையைப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவு எங்களுக்குக் கிடைக்கவில்லை எனக் காலம் தாழ்த்திக்கொண்டே சென்றனர். இதனால் பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்ததும் 11-ம் தேதி இரவே திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. அடுத்த நாள் சிலைகளை சரிசெய்யும் பணியை மேற்பார்வையிடப் பொன்.மாணிக்கவேல் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு பணிகள் காரணமாக அவர் அன்று வரவில்லை. நேற்று இரவு பொன்.மாணிக்கவேல் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வந்ததும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின் பேரில் பழைமையான உற்சவர் சிலைக்கு பாலாலயம் செய்யப்பட்டு ஜடி பந்தனம் என்னும் சிலை சீரமைப்புப் பணிக்கு ஸ்தபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சோமாஸ்கந்தர் சிரசெய்யும் பணி

சோமாஸ்கந்தர் சிலை சரிசெய்யும் பணி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், கோயில் அர்ச்சகர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், சிவபக்தர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் முன்னிலையில் நடைபெற்றது. நேற்று இரவு 11 மணியளவில் பணி நிறைவு பெற்றது. ‘நூறு சதவிகிதம் சிலை நன்றாக இருப்பதால், இன்று முதல் திருவிழாவுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பூஜைகளுக்கும் இந்த சிலையே பயன்படும்’ என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் தெரிவித்தார்.

சோமாஸ்கந்தர் சிலை பூஜை

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு கண்காணிப்பு அதிகாரி ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், “பழைமையான சோமாஸ்கந்தர் உற்சவர் கோயிலில் மட்டுமல்லாமல் நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வருவார். பங்குனி உற்சவத் திருவிழா ஊர்வலங்களிலும் கோயில் பாதுகாப்பிலும் 24 மணி நேரமும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை ஏ.டி.எ.ஸ்.பி தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். திருவிழா முடியும் வரை இந்தப் பணிகள் தொடரும்” என்றார்.

பொன்மாணிக்கவேல்

பல்வேறு போராட்டங்கள், வழக்குகள், கைதுகள் எனப் பெரும் பிரளயத்துக்குப் பின்னர், மீண்டும் பழைய ‘சோமாஸ்கந்தர்’ வீதியுலா வருவது பக்தர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close