'தஞ்சை கோயிலில் இந்தி, சம்ஸ்கிருத கல்வெட்டு பதிப்பு என்பது தவறான தகவல்!'- வரலாற்று ஆய்வாளர் விளக்கம் | Is there inserting hindi inscription in tanjure temple?

வெளியிடப்பட்ட நேரம்: 21:25 (19/03/2019)

கடைசி தொடர்பு:21:25 (19/03/2019)

'தஞ்சை கோயிலில் இந்தி, சம்ஸ்கிருத கல்வெட்டு பதிப்பு என்பது தவறான தகவல்!'- வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

`தஞ்சைப் பெரிய கோயிலில் இருக்கும் தமிழ்க் கல்வெட்டுகளை நீக்கிவிட்டு, இந்தி மற்றும் சம்ஸ்கிருத கல்வெட்டுகளைப் பதிக்கின்றனர்’ என்ற செய்தி கடந்த சில நாள்களாகச் சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. அதற்கு ஆதாரமாக, நாகரி எழுத்துகளால் ஆன கல்வெட்டுப் பலகைகளின் புகைப்படங்களையும் பகிர்கின்றனர். இந்தக் கல்வெட்டுகள் குறித்த செய்திகள் சில தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானதால் பதற்றம் தொற்றிக்கொண்டது. 

நாகரி கல்வெட்டுகள்

ஆனால், இது வதந்தி என்று தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் கல்வெட்டுப் புகைப்படங்கள் அனைத்தும் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் காலத்தில் எழுதப்பட்டவை என்று தெரிய வந்துள்ளன. இந்தக் கல்வெட்டுகள் பற்றி வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியத்திடம் கேட்டோம். 

``தஞ்சைப் பெரிய கோயிலில் இந்தி மற்றும் சம்ஸ்கிருந்த கல்வெட்டுகள் பதிக்கப்படுவதாகக் கூறப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி. இந்தக் கோயில் யுனெஸ்கோவினால் பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. மத்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுவது. சட்டப்படி கோயிலில் புதிதாக ஒரு கல்வெட்டைக்கூட வைக்க முடியாது. சமூக ஊடகங்களில் பகிரப்படும் கல்வெட்டுகள் அனைத்தும் மராத்திய கல்வெட்டுகள். கல்வெட்டுகளின் எழுத்துகள், `நாகரி எழுத்துமுறையில் `வெட்டப்பட்டுள்ளன. அதுதான் இந்த வதந்தி பரவக் காரணம். 

மராத்தி கல்வெட்டுகள்

நாம் சம்ஸ்கிருதத்தை எழுத, கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துகிறோம். வடக்கே இந்தி, சம்ஸ்கிருதத்தை எழுத நாகரி எழுத்துகளைப் பயன்படுத்துவார்கள். இந்தி, சம்ஸ்கிருதம், மராத்தி ஆகிய மொழிகள் அனைத்தும் நாகரி மூலம்தான் எழுதப்படுகின்றன. இந்த நாகரி எழுத்து முறையில்தான் தஞ்சைப் பெரிய கோயிலில் மராத்தி எழுத்துகள் வெட்டப்பட்டுள்ளன. பெரிய கோயில் சுற்றுப் பிராகார தென்மேற்கு மூலை, இரண்டு நாட்டிய மேடைகள், ஒரு சில தூண்கள், விநாயகர் சந்நிதி ஆகிய இடங்களில் மராத்திய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்குள்ள விநாயகர் சந்நிதியை எழுப்பியவர்கள் மராத்தியர்கள். அதனால் அங்கு முழுவதும் மராத்தியக் கல்வெட்டுகளைக் காணமுடியும். கோயிலில் தமிழ் கல்வெட்டுகளை நீக்கிவிட்டு சம்ஸ்கிருத மற்றும் இந்தி கல்வெட்டுகளைப் பொறிக்கிறார்கள் என்பது அடிப்படை ஆதாரமற்றது" என்றார் அவர்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க