புதர் மேடாகிக் கிடக்கும் கம்பர் வாழ்ந்த `கம்பர் மேடு’ - அரசு நடவடிக்கை எடுக்குமா? | government should renovate Kambar medu, urges people

வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (21/03/2019)

கடைசி தொடர்பு:20:05 (21/03/2019)

புதர் மேடாகிக் கிடக்கும் கம்பர் வாழ்ந்த `கம்பர் மேடு’ - அரசு நடவடிக்கை எடுக்குமா?

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இருக்கிறது தேரெழுந்தூர். இங்குதான், கம்பராமாயணத்தை இயற்றிய கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்ந்த இடமான 'கம்பர் மேடு' உள்ளது.  கம்பர் நினைவிடமாகப் போற்றப்பட்டுவரும் இவ்விடம், தற்போது தொல்லியல் துறையின் அலட்சியத்தால் பராமரிக்கப்படாமல், புதர் மண்டிப் பாழடைந்து காணப்படுகிறது. எனவே, இவ்விடம் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கம்பர் மேடு

வடமொழியில் வால்மீகி இயற்றிய  ராமாயணத்தை தமிழில் பன்மடங்கு இலக்கண, இலக்கிய சுவைகூட்டி மொழிபெயர்த்த பெருமை கம்பரையே சாரும். பின்னாளில், அது அவரின் பெயராலையே ’கம்பராமாயணம்’ என வழங்கப்பட்டது. 

கம்பர், நாகை மாவட்டம் மயிலாடுதுறை - குத்தாலம் செல்லும் வழியில் கோமல் என்ற பகுதிக்கு அருகே உள்ள தேரெழுந்தூரில் வாழ்ந்தார். இவருக்கு ஒரு விசித்திர பழக்கம் இருந்துள்ளது. அவர்,  ஒருமுறை உணவு சமைக்கப் பயன்படுத்தும் மண்பாண்டங்களை மறுமுறை பயன்படுத்தாமல் அன்றே உடைத்துவிட, அந்த மண்பாண்டத் துகள்கள் குவிந்து, ஒரு பெரிய மேடாக மாறியது. அதுவே தற்போது 'கம்பர் மேடு' என்று  அழைக்கப்படுகிறது  என்று சொல்கிறார்கள்.

கம்பர்

இந்தப் பகுதியை, பாதுகாக்கப்பட்ட பகுதியாக இந்திய தொல்பொருள் துறை அறிவித்து, தன் வசம் வைத்துள்ளது. ஆனால், இந்தப் பகுதியைப் பாதுகாக்க எந்தவித  நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டதோடு சரி. இந்த இடம், செடி கொடிகளால் புதர் மண்டிக்கிடக்கிறது. தமிழ் மொழியின் சிறப்பைத் தன் காவியங்களின்  மூலமாக அறியச்செய்த கம்பர்  வாழ்ந்த இடம் கேட்பாரற்றுப் பராமரிப்பின்றிக் கிடப்பது, பொதுமக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  

'தொல்லியல் துறையினர் அலட்சியம் செய்யாமல், கம்பர் மேட்டைச் சுற்றி சுவர் எழுப்பி ,உரிய பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' எனப் பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.