மயிலம் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவும் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரமும் | Election awareness at mayilam murugan temple

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (23/03/2019)

கடைசி தொடர்பு:14:24 (23/03/2019)

மயிலம் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவும் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரமும்

மயிலம்

தமிழகத்தில் பல ஆலயங்களில் பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரம் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, தான் சூரனின் வாகனமாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். முருகப்பெருமானின் ஆணையின்படி தவமியற்றத் தொடங்கினான். அவனுடைய தவத்துக்கு இரங்கிய முருகப்பெருமான், அவனை வாகனமாக ஏற்றுக் கொண்டார். சூரபத்மன் மயில் வடிவில் தவமியற்றத் தொடங்கியதன் காரணமாக, இந்தத் தலத்துக்கு மயூராசலம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், அந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மாறியதாகவும் தலவரலாறு.

தேர்தல் விழிப்பு உணர்வு

12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய மயிலம் பங்குனி உத்திரத்தன்று மயிலம் முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அலகு குத்துதல், காவடி எடுத்தல் என்று பக்தர்கள் தங்கள் வேண்டுதலைச் செலுத்தினர்.

பங்குனி உத்திரம்

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஆனால், வித்தியாசமாக மயிலம் கோயில் பங்குனி உத்திரம் திருவிழாவின்போது பங்குனி உத்திரத் திருவிழாவுடன் கோயில் வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால், அவர்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்ரமணியன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் முன்னிலையில், மயிலம் கோயில் மண்டபத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்தை வைத்து விழாவுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.