இடிந்த நிலையில் சிவாலயம்... விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு! | Chola dynasty sculpture idendified in vanthavasi sivan temple

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (28/03/2019)

கடைசி தொடர்பு:21:20 (28/03/2019)

இடிந்த நிலையில் சிவாலயம்... விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டறியப்பட்டது.  மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் – வந்தவாசி சாலையில் மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் மரங்களும் முட்புதர்களும் நிறைந்த பகுதிக்குள் சிதைந்த நிலையில் சிவன்கோயில் இருப்பதைக் கண்டறிந்த ஊர்மக்கள், ஞாயிறு ஜெ.கஜேந்திரனிடம் தெரிவித்தனர்.

 சிவாலயம்

அந்தக் கோயிலில் திருப்பணி செய்வதற்காக மரங்களையும் முட்செடிகளையும் அகற்றியபோது மிகவும் சிதைந்த நிலையில் சிவலிங்கம், சிற்பம், மண்டபம், கல்வெட்டு ஆகியவை கண்டறியப்பட்டன. 

இந்த ஆலயம் சிதைந்த நிலையில் உள்ள கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் மகாமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. மகாமண்டபக் கிழக்குப்பகுதி முப்பட்டை குமுதத்தில் விக்கிரமசோழன் கல்வெட்டு இருப்பதை ஆய்வாளர் ப.பூபாலன், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையக் காப்பாட்சியர் கோ.உத்திராடம், எழுத்தாளர் ரெங்கையா முருகன்  ஆகியோர் கண்டறிந்து கல்வெட்டைப் படியெடுத்து ஆய்வு செய்தனர்.

 சிவாலயம்

விக்கிரமசோழனின் 15-வது ஆட்சியாண்டில் (கி.பி.1118 - 1135)  வெட்டப்பட்ட இந்தக் கல்வெட்டு, ஜயங்கொண்ட சோழமண்டலத்து வெண்குன்றக் கோட்டத்தில் உள்ள வாதவூர் நாட்டு பிரமதேயமான ஓசூர் மகாசபையார் நிலவிலை ஆவணம் செய்யப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இந்த நிலங்கள் அனைத்தும் 16 சாண் கோலால் அளக்கப்பட்டது.

நிலத்தின் மொத்த குழிகள் 7000 ஆகும். இந்தக் கல்வெட்டு, நிலம் விற்பனை செய்யப்பட்ட செய்தியைக் குறிப்பிடுகிறது. விற்கப்பட்ட  நிலமும் அதன் விவரமும் எல்லைகளும் குறிக்கப்பட்டுள்ளன.  இன்றைய மழவங்கரணை கல்வெட்டில் மழவன்காராணை  என்று அழைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

இக்கல்வெட்டை ஆராய்ந்த கோ.உத்திராடம் கூறுகையில், ``சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற படையெடுப்பால் இந்தக் கோயிலின் சிலைகளும் மண்டபங்களும்  சிதைக்கப்பட்டுள்ளன. தற்போது, ஒரு கல்வெட்டு மட்டுமே கிடைத்துள்ளது. மேலும், இக்கோயிலை சீரமைக்கும்போது பல கல்வெட்டுகளும் சிற்பங்களும் கிடைக்க வாய்ப்புள்ளன" எனத் தெரிவித்தார்.

 சிவாலயம்

``இவ்வூரில் உள்ள துர்க்கை மேட்டில், பல்லவர் காலக் கொற்றவை சிற்பம் தலைப்பகுதி சிதைந்தநிலையில் காணப்படுகிறது. கொற்றவை வலதுகாலை  எருமைத் தலைமீது ஊற்றியும் இடதுகாலைத் தன் வாகனமான சிங்கத்தின்மீது வைத்தும் எட்டுக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள்.

கொற்றவையின் கழுத்து, தோள், கை, கால் ஆகியவற்றில் அணிகலன்கள் காட்டப்பட்டுள்ளன. மார்பை கச்சையும் இடையை ஆடையும்  அழகுசெய்கின்றன. கொற்றவையின் கீழ்பகுதியில்  இரு அடியவர்கள் வழிபடுகின்றனர். இந்தச் சிற்பம் கி.பி.7-ம் நூற்றாண்டைச் சார்ந்தது" என்று ப.பூபாலன் தெரிவித்தார். இந்த ஆய்வு மேற்கொண்டால் மேலும் ஆய்வுகள் மேற்கொண்டால் பல்வேறு அரிய வரலாற்றுத் தகவல்கள் கொண்ட கல்வெட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க