திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம்! - ஏற்பாடுகள் தீவிரம்! | tiruvarur car festival preparation in full swing

வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (30/03/2019)

கடைசி தொடர்பு:20:35 (30/03/2019)

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம்! - ஏற்பாடுகள் தீவிரம்!

'சியாவிலேயே இரண்டாவது மிக உயரமான கோயில் தேர்' என்ற பெருமைக்குரியதும், தேர் அழகுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதுமான  திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேரோட்டம், ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தேரோட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

திருவாரூர்

96 அடி உயரமும், 360 டன் எடையும் கொண்ட இந்தத் தேர் நான்கு நிலைகளை உடையது. தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை. கலைநயந்துடன்கூடிய வேலைப்பாடுகள் உடைய இந்த தேர் 'ஹைட்ராலிக் ப்ரேக்' பொருத்தப்பட்டது. ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறும் தேரோட்டத்தை முன்னிட்டு, தேரை அலங்கரிக்கும் பணிகள், கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. தேரை அலங்கரிக்க, அதிக அளவில் மூங்கில் கம்பங்களும் 3,000 மீட்டர் அளவுக்குத் தேர் சீலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

தேர்

தேரின் மேற்புறத்தில் 1 மீட்டர் உயரத்திலான கலசம் பொருத்தப்பட்டிருக்கும். காகிதக் கூழில் தயாரிக்கப்பட்ட, பிரம்மாவின் சிலை, தேரோட்டி பொம்மை மற்றும் நான்கு வேதங்களைக் குறிக்கும் பெரிய குதிரை பொம்மைகள் என ஏராளமான பொம்மைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. முன்பு மனித சக்தி அல்லது யானைகள் கொண்டு தேர் இழுக்கப்பட்டது. ஆனால், தற்போது 4 புல்டோசர்கள் கொண்டு இழுக்கப்பட்டு வருவதால் அன்று மாலையே தேர் நிலைக்கு வந்துவிடும். ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற இருக்கும் தேரோட்டத்துக்காகக் கடந்த 22-ம் தேதியே தியாகராஜ சுவாமி தேரில் வந்து அமர்ந்துவிட்டார். அன்றிலிருந்து ஒரு வாரமாகப் பக்தர்கள், இறைவனைத் தரிசனம் செய்து வருகிறார்கள். 

தேரோடும் நான்கு வீதிகளிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. தேரைப் பின் தொடர்ந்து 108 அவசர சேவை ஊர்தியும், 2 நடமாடும் மருத்துவக் குழுக்களும், 4 இடங்களில் நிலையான மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட உள்ளன. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தேவைக்காக 10 இடங்களில் குடிநீர் வசதியும், 4 இடங்களில் கழிவறை வசதியும் செய்யப்பட்டுள்ளன. காவல்துறை, தீயணைப்புத்துறை, அவசரகால மீட்பு கமாண்டோ குழு எனப் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன. ``ஆருரா, தியாகேசா’’ என்ற  முழக்கத்துக்கு நடுவில் அசைந்தாடிவரும்  ஆழித்தேரின் அழகு காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். அதைத் தரிசிக்க பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.
 

படங்கள் : பா. பிரசன்னா