துர்கா பூஜையை பாரம்பர்யப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு பரிந்துரை! | goverment request UNESCO to announce durga pooja as cultural heritage

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (02/04/2019)

கடைசி தொடர்பு:23:30 (02/04/2019)

துர்கா பூஜையை பாரம்பர்யப் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு பரிந்துரை!

நம் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் பழைமையும் பாரம்பர்யமும் மிக்கது துர்கா பூஜை. மத்திய அரசு, அடுத்த ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாடு மையமான யுனெஸ்கோவின், பாரம்பர்யப் பட்டியலில் துர்காபூஜையை சேர்க்க பரிந்துரை செய்துள்ளது.

துர்காபூஜை

பழங்கால நகரங்கள், கட்டடங்கள், கோட்டைகள், கலைக் கூடங்கள், காடுகள், மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களின் புராதனம் அழியாமல் இருந்தால், அவற்றை, உலகப் பாரம்பர்யச் சின்னங்களாக, யுனெஸ்கோ அங்கீகரிக்கிறது. தமிழகத்தில் உள்ள பழைமையான கோயில்களான மாமல்லபுரம், தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களை உலகப் பாரம்பர்யச் சின்னங்களாக, யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. இது தவிர, மேற்குத் தொடர்ச்சி மலையினையும் இயற்கை பாரம்பர்யச் சின்னமாகத் தேர்ந்தெடுத்து அங்கீகரித்துள்ளது. இதே போல நம்நாட்டின் யோகா, கும்பமேளா உள்ளிட்ட13 பண்பாட்டு அம்சங்களும் இந்தப் பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ளன. உலக பாரம்பர்யச் சின்னங்கள் அதிகம் உள்ள நாட்டுக்கு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். அதனால், உள்ளூர் வணிகம் சிறக்கும்; உலகளவில் பெருமை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

யுனெஸ்கோ

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், ஆண்டுதோறும் துர்கா பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. எனவே, அதையும் பாரம்பர்யப்  பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று  யுனெஸ்கோவுக்கு மத்திய அரசு தற்போது பரிந்துரை செய்துள்ளது. இந்தத் தகவலை மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நாடக அகாடமி தெரிவித்துள்ளது.