மதுரை சித்திரைத் திருவிழா - மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண முன்பதிவு தொடக்கம்! | Pre-registration for meenakshi marriage function

வெளியிடப்பட்ட நேரம்: 19:48 (04/04/2019)

கடைசி தொடர்பு:19:48 (04/04/2019)

மதுரை சித்திரைத் திருவிழா - மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண முன்பதிவு தொடக்கம்!

‘மதுரை சித்திரைப் பெருவிழாவில், மீனாட்சி - சுந்தரேஸ்வரருக்கு நடைபெறும் திருக்கல்யாணத்தை நேரில் காண, இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்’ என்று கோயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தைக் காண விரும்புகிறவர்கள், https://www.maduraimeenakshi.org/ என்ற இணையதளம் மூலமும், சித்திரை வீதியில் உள்ள பிர்லா விடுதியில் அமைந்திருக்கும் முன்பதிவுக் கவுண்டரில் நேரில் சென்றும் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மீனாட்சி திருக்கல்யாணம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், வரும் 17-ம் தேதி காலை 9.50 - 10.14 மணிக்குள் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் காண விரும்பும், முதலில் வரும் 3200 பக்தர்கள், தெற்கு கோபுரம் வழியாகக் கட்டணமில்லாமல் அனுமதிக்கப்படுவார்கள். 

மேலும், திருக்கல்யாணத்தைக் காண விரும்பும் பக்தர்களின் வசதிக்காக, இணையதளம் மற்றும் நேரில் பதிவுசெய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சித்திரை வீதியில் உள்ள பிர்லா தங்கும் விடுதியின் வரவேற்பறையில், வரும் 8 - ம் தேதி முதல் 12 - ம் தேதி வரை நேரடியாக முன்பதிவு செய்துகொள்ளலாம். இணையதளம் (https://www.maduraimeenakshi.org/ ) மூலமாகவும் பதிவுசெய்து கொள்ளலாம். முன்பதிவு செய்துகொள்பவர்கள், நிச்சயம் அடையாள அட்டையைக் கொண்டுசெல்லவேண்டியது அவசியம். 

மீனாட்சி

ரூ. 500 கட்டணம் செலுத்திப் பதிவுசெய்கிறவர்கள், வடக்கு கோபுரம் முனீஸ்வரர் சந்நிதி அருகில் உள்ள வழியாகவும், ரூ.200 கட்டணம் செலுத்தி பதிவுசெய்கிறவர்கள், வடக்குக் கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க