நோய்கள் தீர்த்து ஆயுள் விருத்தி அருளும் திருக்கடவூர் கோயில் திருவிழா! | festival start at thirukadavur temple

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (06/04/2019)

கடைசி தொடர்பு:14:30 (06/04/2019)

நோய்கள் தீர்த்து ஆயுள் விருத்தி அருளும் திருக்கடவூர் கோயில் திருவிழா!

யிலாடுதுறைக்கு அருகே உள்ள சிவதலம் திருக்கடவூர். தேவர்களும் அசுரர்களும் கொண்டு வந்த அமிர்தக் கடத்தை இங்கு வைக்க, அது லிங்கமாக மாறியது. எனவே, இங்கு உறையும் ஈசனுக்கு அமிர்தகடேஸ்வரர் என்று பெயர். இவரை வணங்கச் சகல ஐஸ்வர்யங்களும் கூடும் என்று நம்பப்படுகிறது.  திருக்கடவூர்

மேலும், இந்தத் தலம் மார்க்கண்டேயனுக்குச் சிரஞ்சீவி வரம் அருளிய தலம். இறைவன் இங்கு யமனை வதம் செய்த கோலத்தில் காலசம்ஹாரமூர்த்தியாகக் காட்சியருள்கிறார். இங்கு ஈசனை வேண்டிக்கொண்டால் நோய்கள் நீங்கி, ஆயுள் விருத்தி ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

இந்தத் தலத்தில்தான், அபிராமி பட்டர் அன்னை அபிராமியை வேண்டிக்கொண்டு அந்தாதி பாடி அமாவாசை அன்று பௌர்ணமி நிலவை தோன்றச் செய்த அற்புதம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 

இத்தகைய சிறப்புகளை உடைய இந்தத் திருத்தலத்தில் சித்திரை மாத உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை உற்சவம் வரும் 10.4.19 அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11.4.19 அன்று அமிர்தகடேஸ்வரர் பூதவாகனத்தில் அம்மையுடன் எழுந்தருள்வார்.

திருக்கடவூர் 12.4.19, வெள்ளிக்கிழமையன்று அபிராமி அம்பாள் உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற இருக்கிறது. சித்திரை 1-ம் தேதியான, 14.4.19 அன்று கால சம்ஹாரமூர்த்தி அன்னை பாலாம்பிகையோடு மகாமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்றைய இரவில் இறைவன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளலும் நடைபெறும்.

15.4.19 அன்று இறைவன் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளி, வீர நடன தரிசனம் அருளி, தருமராஜனுக்கு அனுக்கிரகம் செய்யும் வைபவமும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா 17.4.19 அன்றும் 21.4.19 அன்று தெப்போற்சவமும்  நடைபெறும். 

விழா நாள்களில், ஆன்மிகச் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விழாவில் ஆதீனப் பெரியவர்களும், திரளான பக்தர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க