அழகருக்கே ‘டேக் டைவர்ஷனா?' - மதுரை நகருக்குள் பாலம் கட்டும் பணியால் பாதை மாறும் கள்ளழகர்! | Azhagar's usual route change over road works

வெளியிடப்பட்ட நேரம்: 22:17 (06/04/2019)

கடைசி தொடர்பு:22:17 (06/04/2019)

அழகருக்கே ‘டேக் டைவர்ஷனா?' - மதுரை நகருக்குள் பாலம் கட்டும் பணியால் பாதை மாறும் கள்ளழகர்!

துரை பாண்டியன் ஹோட்டலில் இருந்து ரேஸ்கோர்ஸ் வரையிலான அழகர் செல்லும் பாதையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாலம் கட்டும் பணி நடப்பதால் அந்தப் பக்கம் மட்டும் அழகர் வரமாட்டார், ஆனால் எல்லா மண்டகப்படிகளுக்கும் வந்துவிடுவார்” என்றார். 

கள்ளழகர்

மதுரை அழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா 15-ம் தேதி தொடங்கி 24-ம் தேதிவரை நடைபெறுகிறது. இதற்காக, கோயில் நிர்வாகம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், இணை ஆணையர் செ.மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

அப்போது,  "புதுநத்தம் சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. திருவிழாவின்போது பாலப் பணிகளுக்கான பொருள்களை ஒதுக்கி பாதை ஏற்படுத்தித்தருவதாகவும், அந்த நாள்களில் மட்டும் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகவும் நெடுஞ்சாலைத் துறையினர் கூறியிருக்கின்றனர்" என்று தெரிவித்தார் இணை ஆணையர். கூடவே,

கள்ளழகர்

" பாண்டியன் ஹோட்டல் முதல் ரேஸ்கோர்ஸ் வரையிலான பகுதி முழுவதும் சாலையை ஆக்கிரமித்து பணிகள் நடந்துகொண்டிருப்பதால், அந்தப் பகுதியில் மட்டும் அழகர் வர இயலாத சூழல் உள்ளது. ஆனால், எல்லா மண்டகப்படிகளுக்கும் அழகர் எழுந்தருளுவார். ஆற்றில் தடுப்பணை கட்டுவதால், திருவிழாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆற்றில் தண்ணீர் வருவதற்குப் போதிய இடைவெளி ஏற்படுத்தப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளனர்" என்றும் தெரிவித்தார்.

அழகர்

அழகர் மண்டகப்படிகள் அனைத்தும் தகரக் கொட்டகையால் அமைக்க வேண்டும். அழகர் வந்துசெல்ல விசாலமான பாதை வேண்டும். மண்டபங்கள் தூய்மையாய் வைக்கப்பட்டிருக்க வேண்டும் உள்பட பல  கட்டுப்பாடுகள், மண்டபக்காரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. அழகர்கோயிலில் 10 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்திட கோயில் வளாகத்தினுள் இருந்து மேலூர் சாலைக்கு நேரடியாக இருவழிப் பாதை வசதி, கோயில் பணியாளர்களுக்கும் பக்தர்களுக்கும் காப்பீடு எனப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.