கொடியேற்றத்துடன் தொடங்கியது, மதுரை சித்திரைத் திருவிழா! | Chithirai festival of Meenakshi temple begins with flag hoisting

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (08/04/2019)

கடைசி தொடர்பு:14:47 (08/04/2019)

கொடியேற்றத்துடன் தொடங்கியது, மதுரை சித்திரைத் திருவிழா!

லகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைப் பெருந்திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில், இன்று தொடங்கி 19-ம் தேதிவரை 12 நாள்கள் நடைபெற உள்ளது.  இதையொட்டி, நேற்று (7.4.19) காலை வாஸ்து சாந்தி எனப்படும் நிலத்தேவர் வழிபாடு நடைபெற்றது. திருவிழாவின் முதல் திருநாளான இன்று, காலை (8.4.19) கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 

மதுரை சித்திரைத் திருவிழா

மீனாட்சி-சொக்கநாதர் சமேதர் பிரியாவிடையும், வெள்ளி சிம்மாசனங்களில் சுவாமி சந்நிதிக்கு முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தின் அருகே எழுந்தருளினர். பின்னர், சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, காலை 10.05 மணிக்கு மிதுன லக்கினத்தில் ரிஷபச் சின்னம் பொறிக்கப்பட்ட  கொடிப் பட்டம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

சித்திரைத் திருவிழா

இன்றுமுதல், தினமும் மாலை 7 மணியளவில் மாசி வீதிகளில் திருவீதியுலா நடைபெறும். இன்று மாலை, கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமியும், சிம்ம வாகனத்தில் அம்பாளும் எழுந்தருளுகின்றனர். தினமும்  நான்கு மாசி வீதிகள் சுற்றிலும் வலம்வந்த பிறகு, உற்சவமூர்த்திகள் இரவு 10.30 மணியளவில் திருக்கோயிலை வந்தடைவர்.

மதுரை சித்திரைப் பெருவிழா

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, ஏப்ரல் 15-ம் தேதி இரவு 08.00 மணிக்கு மீனாட்சி பட்டாபிஷேகமும், 16-ம் தேதியன்று மாலை திக்கு விஜயமும் நடைபெறும். ஏப்ரல் 17 -ம் தேதி, மீனாட்சி திருக்கல்யாணம் காலை 09.50 மணியிலிருந்து 10.14 மணிக்குள் நடைபெற உள்ளது. ஏப்ரல் 18 - ம் தேதி, திருத்தேரோட்டம்  நடைபெற உள்ளது.  திருவிழாவையொட்டி மீனாட்சிக்கோயில் கோபுரங்களும் உள்பிராகாரங்களும் சந்நிதிகளும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.