எகிப்தில் மம்மி உடல்களோடு எலி, பூனை, கழுகு கல்லறைகள் கண்டுபிடிப்பு! | mummified mice found in Egyptian tomb

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (08/04/2019)

கடைசி தொடர்பு:16:30 (08/04/2019)

எகிப்தில் மம்மி உடல்களோடு எலி, பூனை, கழுகு கல்லறைகள் கண்டுபிடிப்பு!

கிப்து என்றாலே பிரமிடுகளும், அங்கு புதைக்கப்பட்ட மம்மி எனப்படும் பதப்படுத்தப்பட்ட மனித உடல்களும்தான் அனைவரின் நினைவுக்கும் வரும். சமீபத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட இரண்டு கல்லறைகளில் பதப்படுத்தப்பட்ட மம்மியில் மனித உடல்களோடு எலி, கழுகு, மலையாடு, பூனை போன்ற வீட்டு விலங்குகளின் உடல்களையும் கண்டறிந்திருக்கிறார்கள். இதை எகிப்து நாட்டு தொல்பொருளியல் அமைச்சகமும் உறுதி செய்திருக்கிறது. 

எகிப்து, மம்மி

PC : https://www.facebook.com/moantiquities/

எகிப்தியக் கலாசாரத்தின்படி இறந்த உடல்களைப் பதப்படுத்துதல், இறந்தவர்களுக்குச் செய்யப்படும் சடங்குகளுள் ஒன்று. அக்காலத்தில், இறந்த பிறகு மற்றொரு வாழ்க்கை உண்டு என்று எகிப்தியர்கள் கருதினார்கள். மறுவாழ்வுக்கு உடலைப் பதப்படுத்துதல் என்பது மிகவும் முக்கியம் என்றும் நினைத்தார்கள். அது மட்டுமல்லாமல், உடலைப் பதப்படுத்தும்போது அதனுடன் தங்கம், வீட்டு விலங்குகள் ஆகியவற்றையும் சேர்த்துப் புதைப்பர்.

 

 

அண்மையில், எகிப்து நாட்டின் தலைநகரான கைரோவிலிருந்து தெற்கே சுமார் 390 கி.மீ தொலைவில் நைல் நதிக்கு அருகே அடுத்தடுத்து இரண்டு கல்லறைகளைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கல்லறையின் சுவர்கள் முழுவதும் வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. அதற்குள் 35 - 50 வயதுக்குட்பட்ட ஒரு பெண், 12 - 14 வயதுக்குட்பட்ட அவரின் மகன் ஆகியோரின்  பதப்படுத்தப்பட்ட  இரண்டு உடல்களும், அதைச் சுற்றிலும் பதப்படுத்தப்பட்டுப் புதைக்கப்பட்ட எலி, கழுகு, மலையாடு, பூனைகள் ஆகிய விலங்கு மற்றும் பறவைகளையும் கண்டறிந்திருக்கிறார்கள். இன்னும் 50-க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளின் மம்மி உடல்கள் இன்னும் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

இந்தக் கல்லறைகளைக் கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், ``இந்தக் கல்லறைகள் தாலமைக் பேரரசு (Ptolemaic era) காலத்துக்குரியவை. 2,000 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை. இந்தப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளிலேயே அற்புதமான கல்லறை இதுதான். இந்தக் கல்லறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்” என்று தெரிவித்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க