ஸ்ரீலோகநாயகி சமேத ஸ்ரீ சுயம்புநாத சுவாமி திருக்கல்யாணம்! - சித்திரை முதல் நாளில் கோலாகலம் | Sri lokanayaki sameetha shree suyambunatha swami thirukalyanam

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (14/04/2019)

கடைசி தொடர்பு:10:41 (15/04/2019)

ஸ்ரீலோகநாயகி சமேத ஸ்ரீ சுயம்புநாத சுவாமி திருக்கல்யாணம்! - சித்திரை முதல் நாளில் கோலாகலம்

ஸ்ரீசுயம்புநாதர் எழுந்தருளியுள்ள நரசிங்கன் பேட்டை திருத்தலமானது, தஞ்சை மாவட்டம் திருவிடை மருதூர் வட்டத்தில்,  திருவாவடுதுறைக்கு மிக அருகில் அமைந்துள்ள மிகப்புராதனப் பெருமை வாய்ந்த ஆலயமாகும். 

New Year

நரசிம்மர் பூஜித்த இந்த ஆலயம் சற்றேறக்குறைய 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. மூலவர் உறைந்திருக்கும் கருவறை மண்டபம் வேசர (வட்ட வடிவ) வடிவமுடையது. `கஜ ப்ருஷ்ட' அமைப்புடைய மூலஸ்தான மண்டப அமைப்பு இவ்வாலயத்தின் சிறப்பு அம்சமாகும்.  மூலவர் சுயம்புநாதர் பெரும் பாணமுடன் காட்சியருளும் அழகிய வடிவினர்.

அன்னை லோக நாயகி எனும் திருநாமம் தாங்கிய உலகம்மை வடிவில் சிறியனள் ஆயினும் அருளில்  பெரியவள். தெற்கு நோக்கி அருள் பாலிக்கின்றாள். மண்டபத்தின் சுவரில் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியானவர் , ஸ்ரீஸ்வயம்பு நாதரைப் பூஜிக்கும் காட்சியானது அழகிய புடைப்புச் சிற்பமாக வடிக்கப் பெற்றுள்ளதைக் கண்டு தரிசிக்கலாம். ஸ்ரீமகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் நிகழ்த்தியபோது இரண்யாசுரனை வதம் செய்ததால் அவரை 'வீரஹத்தி' தோஷம் பற்றியது. இத்தலத்தில் சுயம்பு மூர்த்தமாக  எழுந்தருளியுள்ள சிவபெருமானை நரசிம்ம மூர்த்தியானவர் வேண்டிப் பூஜித்து, அத் தோஷம் நீங்கப் பெற்றார் என்பது இத்தலத்து புராண வரலாறு.  

New Year

நரசிம்மர் சிவனை பூஜித்த காரணத்தினால் இத்தலத்துக்கு `நரசிங்கபுரம் ' என்ற பெயர் ஏற்பட்டது.  பின்னாளில், `நரசிங்கமங்கலம்' என்று வழங்கப்பட்ட இவ்வூர் தற்போது நரசிங்கன்பேட்டை என்று அழைக்கப்படுகின்றது. ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி மூலத்தானத்து இறைவனை வழிபடுவதற்காக நீராடிய தீர்த்தம் ஆலயத்தின் முன்புறத்தில் இன்றைய நாளில் சிறு குளமாகக் காட்சியளிக்கின்றது. இதற்கு `நரசிம்மதீர்த்தம்' என்று பெயர். இதே தீர்த்தத்தில் ஸ்ரீ பிரம்மாவும் நீராடியமையால்,  'பிரம்மதீர்த்தம்' என்ற பெயராலும் குறிக்கப்படுகின்றது என்பர். இப்பகுதியை ஆண்ட 'நரசிம்மவர்மன்' எனும் அரசன் இத்தீர்த்தத்தில் நீராடி, மூலவரை வழிபட்டு, தன் மனைவியின்  தீராத நோய் நீங்கப் பெற்றான் என்பது வரலாறு.

திருவாவடுதுறையில் உறைந்திருந்த  சித்தரான `திருமாளிகைத் தேவரும்',  இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார் என்பது தல புராணம் சொல்லும் செய்தி. 'தற்பொழுது, திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் 24- வது குருமகா சந்நிதானம்  ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளவர்களின் திருவுளப் பாங்கின் வண்ணம்,  ஊர்மக்களின் சீரிய முயற்சியின்  விளைவாக, ஆண்டுதோறும் அனைத்து உற்சவங்களும் வெகு விமரிசையாக இவ்வாலயத்தில்  நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், விகாரி தமிழ் வருடப் பிறப்பாகிய 'சித்திரை முதல்  நாளான இன்று,  ஆலயத்தில் உள்ள கோஷ்டாதி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளும், ஸ்ரீ சுயம்புநாதர் - ஸ்ரீ லோகநாயகி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவமும் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானமவர்களின் திருமுன்னர் நடைபெற்றது.

தமிழ் வருடத்தின் முதல் நாளாகிய புண்ணிய  தினத்தில், இத்திருக்கல்யாண நிகழ்வினைக் கண்டு தரிசித்து, அம்மையப்பரின் அருளினை ஏராளமான பக்தர்கள் பெற்றனர்.

படங்கள்: பா.பிரசன்னா