கள்ளழகர் எழுந்தருள வாகனங்கள் தயார்! - ஜொலிஜொலிக்கும் மதுரை | Lord Kallazhagar ready to brings joy to Madurai residents

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (15/04/2019)

கடைசி தொடர்பு:18:45 (15/04/2019)

கள்ளழகர் எழுந்தருள வாகனங்கள் தயார்! - ஜொலிஜொலிக்கும் மதுரை

சித்திரைத் திருவிழாவையொட்டி, அழகர்கோயிலில் இருந்து கள்ளழகரின்  வாகனங்கள், அவர் எழுந்தருளுகின்ற கோயில்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டன.

கள்ளழகர்


மதுரையை நோக்கி, கோயிலில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்படும் கள்ளழகர், மதுரை நகரில் உள்ள தல்லாகுளம் பிரசன்னவெங்கடாஜலபதி கோயிலில் தங்கக்குதிரை வாகனத்தில்  எழுந்தருள்வார். அடுத்து, வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் சேஷவாகனரூபராய் காட்சியருள்வார். பின்னர், வண்டியூர் வைகைக்குள் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கருடவாகனம். இப்படி நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு கள்ளழகர் அருள்பாலிப்பார். இதையொட்டி, இந்த வாகனங்கள் அனைத்தும் அழகர் கோயிலில் இருந்து அந்தந்த கோயில்களுக்கு கொண்டுசெல்லப்பட்டன.

சித்திரை

இன்று காலை, சீர்பாதம் தாங்கிகள் சேஷவாகனத்தை டிராக்டரிலும் மற்ற இரண்டு வாகனங்களை மினி லாரியிலும் ஏற்றிக்கொண்டு சென்றனர். கோயில்களில் இறக்கப்பட்ட அந்த வாகனங்கள், காவல் துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. திருவிழா முடிந்தவுடன் அவை மீண்டும் அழகர்கோயிலுக்கு திரும்பக் கொண்டுவரப்படும். சீர்பாதம் தாங்கிகளிடம் பேசியபோது, "ஒவ்வோர் ஆண்டும் சாமி புறப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக இந்த வாகனங்களை மதுரைக்குக் கொண்டுசென்றுவிடுவோம். அந்த வழக்கப்படி, இன்று மூன்று வாகனங்களையும் கோயில்களில் சேர்த்துள்ளோம்" என்றனர்.