நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள்... விழாக்கோலம் பூண்ட அழகர் மலை | alagar koil festival

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (16/04/2019)

கடைசி தொடர்பு:14:40 (16/04/2019)

நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள்... விழாக்கோலம் பூண்ட அழகர் மலை

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வரும் 19 -ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களைச் செலுத்த அழகர் மலையில் குவிந்தவண்ணம் உள்ளனர். 

அழகர் மலை

அழகர்கோயிலிலிருந்து நாளை, புதனன்று மாலை கள்ளழகர் மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். அதற்கான ஆயத்தப் பணிகளில் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவிழாவையொட்டி தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்துவதற்காக பக்தர்கள் அழகர்மலை நோக்கித் திரளாகப் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

அழகருக்குக் கன்றுக்குட்டி ஒன்றை நேர்த்திக்கடனாகச் செலுத்த வந்த பக்தர் ஒருவரிடம் பேசியபோது, ``வீட்டில பசுமாடு இருக்கு. கர்ப்பகாலத்தில ரொம்பச் சிரமப்பட்டுச்சி. நல்லபடியா பிரசவம் நடக்கணும்ன்னு அழகரை வேண்டினோம். பிரசவம் நல்லபடியா நடந்துச்சு. வேண்டிக்கிட்ட படி, பொறந்த கன்னுகுட்டிய சாமிக்கு விட வந்திருக்கோம்" என்றனர்.

அழகர் கோயில்

அருப்புக்கோட்டையிலிருந்து வந்திருந்த பக்தர்களில் ஒருவரிடம் பேசினேன். ``திருவிழாவுக்கு வந்தா, வழக்கமா 3 நாள்கள் தங்கியிருப்போம். இந்த முறை தேர்தலும் சேர்ந்து வர்றதால கோயில்ல தங்காம, சாமி கிளம்பும்போது மட்டும் இருக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம்." என்றனர்.

திருவிழாவில் கருப்பசாமி வேடம்போட்டு தடியெடுத்து ஆடுபவர்கள், கள்ளழகரை வழிபட்டு அந்த நேர்த்திக்கடனைத் தொடங்குகின்றனர். மேலும், தங்களது பிள்ளைகளுக்கு முடியெடுப்பதற்காகக் குடும்பம் குடும்பமாய்க் கூடியிருப்பதால் முடிக்காணிக்கை மண்டபம் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது.

அழகர்

கொளுத்தும் உச்சிவெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வருகைதந்து கொண்டிருப்பதால், சாமி புறப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக இன்றையதினமே அழகர்மலை திருவிழாக்கோலம் பூண்டுள்ளது!