விமரிசையாக நடந்த உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்! | Thanjavur Brihadeeswara Temple car festival

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (16/04/2019)

கடைசி தொடர்பு:16:20 (16/04/2019)

விமரிசையாக நடந்த உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்!

உலகப் புகழ்பெற்று விளங்கும் தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம், இன்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, 'பெருவுடையாரே... பெருவுடையாரே...' என கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தஞ்சாவூர் பெரியகோயிலில், சித்திரைத் திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, காலை மாலை சுவாமி வீதிஉலா நடைபெற்றது. பதினாறரை அடி உயரம்கொண்ட தேரில், 25 அடி உயரம் அளவிற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இன்று அதிகாலை 4.30 மணிக்கு, ஸ்ரீ தியாகராஜர், ஸ்கந்தர், ஸ்ரீ கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. இதைத் தொடர்ந்து, காலை 5 மணிக்கு பெரிய கோயில் உற்சவ மூர்த்திகள் தேரில் எழுந்தருளினர். பின்னர், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை 6 மணி அளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அப்போது, அனைவரும் 'பெருவுடையாரே... பெருவுடையாரே...' என விண்ணதிர பக்தி மயத்துடன் கோஷங்கள் எழுப்பினர்.

பெரியகோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

பெரும் மக்கள் வெள்ளத்திற்கு நடுவே தேர் ஆடி அசைந்து நகர்ந்தது, காண்போரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது. மேல வீதியில் புறப்பட்ட தேர், வடக்கு வீதி, கீழ வீதி என நான்கு ராஜவீதிகளிலும்  வலம்வந்தது. அப்போது,  14 இடங்களில் தேர் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டன.தேருக்கு முன் திருவையாறு ஐயாறப்பர் கோயில் யானை கம்பீரமாக நடந்துசென்றது, காண்போரைக் கவர்ந்தது. தேர் செல்லும் வழியில் பெண்கள் கோலாட்டம் ஆடினர். டிராக்டரில் பெருவுடையார் வடிவில் இருந்த முளைப்பாரி, பக்தர்களைப் பரவசப்படுத்தியது. தேரோட்டத்தின்போது, பாதுகாப்புப் பணிக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் பெரியகோயில் திருவிழா தேரோட்டம்

மேலும், தேருக்குப் பின்னால் தீயணைப்பு வாகனமும் மற்றும் மருத்துவர்களுடன்கூடிய ஆம்புலன்ஸ் ஒன்றும் சென்றன. நிறுத்தப்பட்டிருந்த பெரிய கோயில் தேரோட்டம் நூறாண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2015-ம் ஆண்டு மீண்டும் ஓடத் தொடங்கியது. நான்காம் ஆண்டான இந்த வருடமும் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக, மாவட்ட நிர்வாகம் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க