7 நாள்கள்.. 30கி.மீ.. 445 திருக்கண்கள்.. 'புறப்பட்டார் மாயழகன்'! | this story about chithirai thiruvizha festival

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (17/04/2019)

கடைசி தொடர்பு:22:30 (17/04/2019)

7 நாள்கள்.. 30கி.மீ.. 445 திருக்கண்கள்.. 'புறப்பட்டார் மாயழகன்'!

துரையின் மணிமகுடமாகக் கொண்டாடப்படுகின்ற சித்திரைத் திருவிழாவின் அற்புதமான நிகழ்வு, வைகையில் அழகர் இறங்கும் வைபவம்! இதைக் கண்டு களிப்பதற்காக தென்னக மக்கள் உட்பட பக்தர்கள் பல லட்சம்பேர் மதுரையெங்கும் கூடுவர். தீர்த்தவாரி, சாபவிமோசனம், தசாவதாரம், பூப்பல்லக்கு உள்ளிட்ட விழாக்களில் கலந்து கொள்வதற்காக அழகர்மலை அருள்மிகு சுந்தரராஜபெருமாள் கள்ளழகராக வேடமிட்டு மதுரையை நோக்கிப் புறப்பட்டார்.

மதுரை சித்திரை திருவிழா

மலையில் தொடங்கி வண்டியூர் வரையிலும் 30 கி.மீ. தூரத்துக்குப் பயணத் திருவிழாவாக அழகர் திருவிழா நடைபெறுகிறது. சாமியைத் தூக்கிவரும் சீர்பாதம்தாங்கிகள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மன்னர் காலத்தில் வழியெங்கும் ஆங்காங்கே கல்மண்டபத் திருக்கண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவை காலப்போக்கில் வணிகர்களால் பெருக்கப்பட்டுவிட்டது. தற்போது மொத்தம் 445 திருக்கண் அழகருக்காக அமைக்கப்பட்டுள்ளன.

கள்ளழகர்

முதல்நாளான இன்று மலைவிட்டுப் புறப்பட்ட கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி, கடச்சனேந்தல் என ஒவ்வொரு கிராமமாக இரவுமுழுவதும் கடந்து 2-ம் நாள் விடியும்போது மதுரைநகரம் வந்தடைவார். பகல் முழுவதும் திருக்கண்களில் எழுந்தருளியபடியே தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலை அடைவார்.

கள்ளழகர்

3-ம் நாள் அதிகாலை தல்லாகுளம் கோயிலில் தங்கக்குதிரையேறி வைகை வந்திறங்குவார். அடுத்து, மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி முடித்து அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயில் செல்வார். 4-ம் நாள் காலையில் சேஷவாகனத்தில் தேனூர் மண்டபம் வருவார். அங்கே கருட வாகனத்தில் எழுந்து மண்டூக முனிவருக்குச் சாபவிமோசனம் அருள்வார். அண்ணாநகர் வழியே திரும்பி ராமராயர் மண்டபம் வந்து இரவு முழுவதும் தசாவதாரம் நிகழ்த்துவார். 5-ம் நாள் அதிகாலை மோகினி அவதாரம் முடித்து இரவு தல்லாகுளம் சேதுபதி மண்டபம் வருவார். 6-ம் நாள் அதிகாலை பூப்பல்லக்கு அலங்காரத்தில் கிளம்பி மீண்டும் கள்ளர் கோலத்தில் மலைக்குப் புறப்படுவார். 7-ம் நாள் காலை மலையை அடைவார்.

புறப்பட்டார் அழகர்

அழகர் புறப்பட்டதையொட்டி வழிநெடுகிலும் அன்னதானங்கள், நீர்மோர் வழங்குதல், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனக் களைகட்டுகிறது மதுரை. இரவு அப்பன் திருப்பதியில் அழகர் வருகையையடுத்து சேவல் சண்டை நடைபெறுகின்றது. அழகரோடு சேர்ந்து ஊர்வலமாக வெள்ளியங்குன்றம் ஜமீன் உடன் வருவார். விசிறிகள், அழகர் குடைகள், கோயில் உண்டியல்கள் ஊர்வலத்தோடு செல்லும். திரி தடியேந்தி ஆடுவோர், அழகராட்டக்காரர்கள் உள்ளிட்ட பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தியபடியே அழகருடன் வருவர்.

மயக்கும் மாலையில் மதுரை கிளம்பிவிட்டார் மக்களுக்கு அருள் செய்ய!