''அழகருக்கு முன்னுக்க நான்தான் ஆத்துல இறங்குவேன்!" - மதுரை சித்திரைத் திருவிழாவில் கலக்கும் விசிறித் தாத்தா #MaduraiChithiraiFestival | madurai visiiri saamiyaar

வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (18/04/2019)

கடைசி தொடர்பு:15:03 (18/04/2019)

''அழகருக்கு முன்னுக்க நான்தான் ஆத்துல இறங்குவேன்!" - மதுரை சித்திரைத் திருவிழாவில் கலக்கும் விசிறித் தாத்தா #MaduraiChithiraiFestival

பேரன், பேத்திகளையெல்லாம் கண்டுவிட்ட நடராஜன் தாத்தா இப்போதும் ஆரோக்கியத்தோடும் உற்சாகத்தோடும் இந்த ஆண்டும் அழகருக்கு முன்பாக ஆற்றில் இறங்கக் காத்திருக்கிறார்.

''அழகருக்கு முன்னுக்க நான்தான் ஆத்துல இறங்குவேன்!

ழகர் ஆற்றில் இறங்கப்போகும் தருணம். அழகரைத் தரிசிக்க மக்கள் முண்டியடிக்கின்றனர். திமிரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறுகின்றனர். வைகையாறெங்கும் மனிதத் தலைகள். அலைகள் மெல்ல நகர்ந்து விலகுவதுபோல பக்தர்கள் ஒரு சிறு இடைவெளியை அங்கு உருவாக்குகிறார்கள். எள் விழக்கூட இடைவெளியில்லாதிருந்த அந்தக் கூட்டத்திற்கிடையே, பக்தர்கள் சிறு வழி ஏற்படுத்த, ஒரு மனிதர் உள்ளே நுழைகிறார். 'யார் அந்த வி.ஐ.பி' என்று பார்த்தால், மயில்விசிறியுடன் ஆடிக்கொண்டே வருகிறார் மதுரை 'விசிறித் தாத்தா'! 

மதுரை 

ஒவ்வோராண்டும் பக்தர்கள் அன்பால் உருவாக்கும், அந்தச் சின்னஞ்சிறு இடைவெளிப்பாதையில் ஒய்யாரமாக ஆடியபடியே வந்து வைகையில் இறங்குவார். இது இன்று நேற்றல்ல, பல ஆண்டுக்காலமாக நடக்கும் வழக்கம். 
 "அழகருக்கு முதல்ல நான்தான் ஆத்துக்குள்ள இறங்குவேன்” என்று பெருமைபொங்கப் பேசும் அந்தத் தாத்தாவின் பெயர் நடராஜன். மதுரை பக்தர்களுக்கு நன்கு அறிமுகமான மனிதர். ஆண்டவனைத் தொழ ஆலயம் வரும் பக்தர்களுக்கு ஆலவட்டக் கைங்கர்யம் செய்யும் அந்தத் தாத்தாவுக்கு வயது 92. தன் வாழ்வின் பெரும்பகுதியை இந்த இறைப்பணிக்காகவே செலவிட்ட அந்தப் புண்ணிய புருஷரோடு பேசினோம். 

திருவிழா

"எனக்கு 5 வயசு இருந்தப்போ, இந்தக் கோயில்ல இதே இடத்திலதான் ஒரு பெரியவரைப் பார்த்தேன். எல்லோருக்கும் விசிறிக்கிட்டே இருந்தாரு. வியர்க்க விறுவிறுக்க வர்றவங்களுக்குப் பெரியவர் விசிறினதும் 'சில்'லுன்னு ஆயிரும். இதைப் பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோஷமாயிருந்தது. ஆண்டவனைப் பார்த்து உள்ளம் குளிர்ந்த பக்தர்கள், உடலும் குளிரச் செய்ற இந்த கைங்கர்யத்துல என் மனது லயிச்சிச்சு. 14-வது வயதில விசிற ஆரம்பிச்சேன்” என்றார். 

நடைதிறந்ததும் கோயில்களுக்குக் காலையிலும் மாலையிலும் சென்று, நடைசாத்தும் வரை எல்லோருக்கும் மயில்விசிறியால் விசிறிவிடுவதுதான் இவரின் பணி. திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் திருப்பரங்குன்றம், புதன்கிழமை பழநி, வியாழனன்று திருச்செந்தூர், வெள்ளியென்றால் மீனாட்சிக்கோயில், சனிக்கிழமை கூடலழகர் கோயில், பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை, அமாவாசை நாளன்று ராமேஸ்வரம் என்று எப்போதும் தான் வீசும் விசிறியைப் போலவே சுறுசுறுப்பாகச் சுற்றிக் கைங்கர்யம் செய்துகொண்டிருக்கிறார் நடராஜன். 

மதுரை 

50 ஆண்டுகள் சங்கரன்கோயில் ஆடித் தபசுக்கும், 56 ஆண்டுகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப் பூரத்துக்கும் சென்றிருக்கிறார். ராமேஸ்வரம், சமயபுரம் கோயில்களில் நடைபெற்ற, 5 கும்பாபிஷேகங்களைத் தரிசித்துள்ளார். பழநியில் 7 முறை நடந்துள்ள கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் கோயில் கும்பாபிஷேகத்திலும் பெரும்பாலானவற்றில் சென்று கலந்துகொண்டுள்ளதாகப் பூரிக்கிறார். இதற்கிடையில், ஒவ்வொருவாரமும் திருப்பதிக்கும் சென்றுவிடுவாராம். 

வாழ்வில் தான் சந்தித்த மகான்கள், முக்கியஸ்தர்கள் குறித்துக் கேட்டோம். 
"காந்தி, பாரதி, திருப்பூர் குமரன்லாம் பார்த்திருக்கேன். அவங்களோட 'வந்தே மாதரம்'ன்னு கோஷம் போட்டுருக்கேன். பெரியாருக்கு என்னை நல்லாத் தெரியும். என்னைக் கண்டாலே சந்தோஷப்படுவார். ஒரு தடவை காமராசர், என்னை மேடையில ஏத்தி அழகு பார்த்தார்.

சீர்காழி கோவிந்தராஜன், எப்போ மதுரை வந்தாலும் என்கிட்டே வந்து நின்னு பாடுவார். கேட்டு மெய்மறந்திருவேன். அவர் பையன், சிவசிதம்பரமும் அப்படித்தான், ரொம்பப் பாசம். ராஜன் செல்லப்பா எனக்கு மகன் மாதிரி அன்போடு இருப்பாரு. மதுரை சோமு, இளம்பிறை மணிமாறன்னு என்மேல் பாசம்வைச்சங்களோட பெரிய லிஸ்டே இருக்கு. எல்லோருடைய அன்புக்கும் பாத்தியப்பட்டவன். 
ஒருமுறை ஜெயலலிதாம்மா கலந்துகிட்ட விழாவில காஞ்சிப்பெரியவர், எனக்கு இந்த மாலையைப் போட்டார். இந்த மாலை, வாரியார் சாமி போட்டது” என்று அணிந்திருந்த மாலைகளை ஒவ்வொன்றாகப் பெருமைபொங்க எடுத்துக் காட்டினார் . 

திருவிழா

சித்திரைத் திருவிழாவில் இந்தத் தாத்தாவின் ஆட்டத்தைக் காண்பதற்கே தனி ரசிகப் பட்டாளம் உண்டு. அதுவும், அழகர் பவனியில் 'ஏழுமல வாசா நீ எங்க குல நேசா' பாடலின் லயத்துக்கு அவர் ஆடுவது அத்தனை நேர்த்தியான அழகு!  “அதென்னய்யா, அந்தப் பாட்டக் கேட்டாலே அந்த ஆட்டம் போடுறீங்க!’ என்றால், ‘நானா ஆடுறேன்? அம்மையும் அப்பனும் பெருமாளும் என்னை ஆடவைக்கிறாங்க’ என்கிறார். 

எப்போதும் ஓயாமல் நடந்துகொண்டிருக்கும் கால்களில் சிறு கட்டு போட்டிருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பதி சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிள் இடித்து எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கிறது. தற்போது ஓரளவு குணமாகியிருக்கவே மீண்டும் ஆசையோடு கோயிலைத் தேடிவந்துவிட்டார்.

திருவிழா

 "பக்தர்கள் என்னைப் பார்த்ததுமே சந்தோஷப்படுவாங்க. யாருக்கிட்டயும் காசு கேட்க மாட்டேன். ஒரு சிலர், இவரு என்ன காசு கொடுத்தாத்தான் வீசுவாரா?ன்னு கூடக் கேட்பாங்க. அவங்களா கொடுத்தாங்கன்னா வாங்கிக்குவேன். கொடுப்பது அவங்களா என்ன... அந்த இறைவன்தானே அவர்கள் மூலம் கொடுக்கிறான்! என் பணி விசுறுறது, எனக்குக் கை வலிக்கிற வரைக்கும், கை இருக்கிறவரைக்கும் என்னால விசிறிவிட முடியும்." 
பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு காசு கொடுத்தார். 

"இந்தாப் பாரு, இப்பக்கூட மீனாட்சி காசு கொடுக்கிறா" என்று சொல்லி, அவருக்கு ஒரு அரைவட்ட விசிறு வீசி விடுகிறார். 
பேரன், பேத்திகளையெல்லாம் கண்டுவிட்ட நடராஜன் தாத்தா இப்போதும் ஆரோக்கியத்தோடும் உற்சாகத்தோடும் இந்த ஆண்டும் அழகருக்கு முன்பாக ஆற்றில் இறங்கக் காத்திருக்கிறார். புராணங்களில் நிறைய கைங்கர்யங்கள், இறைப்பணிகள் செய்தவர்களைப் பற்றிப் படிக்கிறோம். நம் காலத்தில், நம்மோடு வாழும் இந்தப் புண்ணிய புருஷர் நடராஜர். 


டிரெண்டிங் @ விகடன்