மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரைக்கு மானியம்... விண்ணப்பிக்க ஏப்ரல் 30 கடைசி நாள் | Article about mansarovar subsidy

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (22/04/2019)

கடைசி தொடர்பு:15:25 (22/04/2019)

மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரைக்கு மானியம்... விண்ணப்பிக்க ஏப்ரல் 30 கடைசி நாள்

சீனாவிலுள்ள மானசரோவர், நேபாளத்திலுள்ள முக்திநாத் கோயில்களுக்குப் புனித யாத்திரை சென்று வந்த பக்தர்களுக்கு அரசு மானியம் பெற ஏப்ரல் 30-ம் தேதி கடைசி நாள் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மானசரோவர் புனித யாத்திரை

ஒவ்வோர் ஆண்டும் மானசரோவர், முக்திநாத் கோயில்களுக்குப் புனித யாத்திரை சென்று வருபவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் அமல்படுத்தப்பட்டுவருகிறது. 

முக்திநாத் கோயில்

இதன்படி கடந்த 2018 - 2019-ம் நிதியாண்டில் (1.4.2018 முதல் 31.3.2019 முடிய) புனிதப் பயணம் முடித்த பக்தர்கள் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பங்கள் இந்து சமய அறநிலையத்துறை இணையப் பக்கத்தில் (https://tnhrce.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதில், மேற்கண்ட காலத்துக்குள் இரு புனித தலங்களுக்கும் யாத்திரையை முழுமையாக நிறைவு செய்து திரும்பிய, தமிழகத்தைச் சேர்ந்த, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள்

மேலும், இவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருப்பது அவசியம். விண்ணப்பதாரர்கள் புனித யாத்திரை முடித்துத் திரும்பியதற்கான உரியச் சான்றுகளுடன், ஒவ்வொரு யாத்திரைக்கும் தனித்தனி விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு யாத்திரைகளுக்கும் ஒருங்கிணைந்த விண்ணப்பங்கள், உரியச் சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள், கடைசி தேதிக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்திநாத்

மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட 500 பேருக்கு மட்டும் தலா ரூ.40,000 வீதமும் முக்திநாத் கோயில்களுக்குச் சென்று வந்த 500 பேருக்கு மட்டும் தலா ரூ.10,000 வீதமும் மானியம் வழங்கப்படும். அரசின் தேர்வுக்குழுவால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், இவ்விரு தலங்களுக்கும் முதல்முறையாகச் சென்று வந்தவர்களுக்கே மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.