நாளை எமகண்டத்தில் வரும் வாஸ்து நேரம்... பூமி பூஜை செய்யலாமா? | Vastu pooja article

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (22/04/2019)

கடைசி தொடர்பு:20:40 (22/04/2019)

நாளை எமகண்டத்தில் வரும் வாஸ்து நேரம்... பூமி பூஜை செய்யலாமா?

குடியிருக்கப் போகும் மனையின் அமைப்பைத் தீர்மானிப்பது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து நாள் வருடத்தில் 8 நாள்கள் மட்டுமே வருகிறது. அந்த 8 நாள்களிலும், வாஸ்து புருஷன்,  3 3/4 நாழிகைதான் (1 1/2 மணி நேரம்) விழித்திருப்பார், பிறகு மீண்டும் உறக்க நிலைக்குச் சென்றுவிடுவார். வாஸ்து புருஷன் கண் விழிக்கும் நாளே ‘வாஸ்து நாள்’ என்று சொல்லப்படுகிறது. புது வீடு கட்டுவதற்கு `பூமிபூஜை' செய்வதற்கு உகந்த நேரமாக அன்றைய தினத்தைச் சாஸ்திரங்கள் சொல்கின்றன. 

வாஸ்து நேரம்

வாஸ்து புருஷன் விழித்திருக்கும் ஒன்றரை மணி நேரத்தில், கடைசி 36 நிமிடங்கள் மட்டுமே `பூமிபூஜை' செய்வதற்கு ஏற்ற நேரம் என்று சொல்லப்படுகிறது. நாளை, காலை 8.54 - 9.30 மணிக்குள் பூமிபூஜை செய்வதற்கு உகந்த நேரமாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த நேரம் எமகண்டத்தில் வருகிறது. அதனால், எமகண்ட நேரத்தில் பூமி பூஜை செய்வது உகந்ததா என்று வாஸ்து நிபுணர் அருக்காணி ஜெகந்நாதனிடம் பேசினோம்...

வாஸ்து தினம்

``நாளை எமகண்டத்தில் வாஸ்து நேரம் வருகிறது. எனவே, பூமி பூஜையை நாளை தொடங்காமல் தவிர்த்துவிடுவது நல்லது. வருடத்தில் வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை உள்ளிட்ட ஐந்து மாதங்களில் வாஸ்து நாள் வரும்போது பூமிபூஜை செய்வது அதிக பலனளிக்கும். சித்திரை, பங்குனி ஆகிய இரண்டு மாதங்களும் சாஸ்திரங்களால் விலக்கப்பட்டவை. வாஸ்து நாள் இந்த இரண்டு மாதங்களில் இருந்தாலும், வாஸ்துபூஜை செய்யக்கூடாது. சாஸ்திரங்களால் விலக்கப்பட்ட செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் வாஸ்து பூஜை செய்யக்கூடாது. நாளை சித்திரை மாதம், செவ்வாய்க்கிழமை எமகண்டத்தின்போது வாஸ்து நேரம் வருகிறது. அதனால் நாளை பூமி பூஜை செய்வதைத் தவிர்த்துவிடுவது நல்லது” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க