ரூ. 12,000 கோடியைத் தாண்டிய திருப்பதி தேவஸ்தான வைப்புநிதி! | TTD cash deposits in banks crosses Rs 12,000 cr mark

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (25/04/2019)

கடைசி தொடர்பு:11:29 (26/04/2019)

ரூ. 12,000 கோடியைத் தாண்டிய திருப்பதி தேவஸ்தான வைப்புநிதி!

திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். நாள்தோறும் அவர்கள் செலுத்தும் காணிக்கைகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்துவருகிறது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை, நிர்வாகச் செலவுகள் போக மீதமுள்ளவற்றை வங்கியில் வைப்புநிதியாகத் தேவஸ்தானம் சேமித்துவைத்துள்ளது. அப்படி வைப்புநிதிகளில் சேமித்துவைக்கப்பட்ட தொகையின் மொத்த மதிப்பு தற்போது, ரூ.12,000 கோடியைத் தாண்டியுள்ளது. 

வேங்கடாசலபதி

இதுகுறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரி கூறியதாவது,``தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் வைப்பு வைக்கப்பட்டுள்ள தொகையின் மதிப்பு ரூ.12,000 கோடியைத் தாண்டியுள்ளது. இவற்றிலிருந்து ஆண்டுதோறும் சுமார் ரூ.845 கோடி வட்டியாகக் கிடைத்துவருகிறது. 

கோயிலின் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டில், இதுவரை கோயிலுக்கு இரண்டரை கோடி பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். உண்டியலில் காணிக்கையாக, பக்தர்கள் செலுத்திய 8.7 டன் தங்கம் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட 550 கிலோ தங்க ஆபரணங்கள் தேவஸ்தானத்தின் வசம் உள்ளன. இவை வரும் நாள்களில் உருக்கப்பட்டு, சொக்கத் தங்கமாக மாற்றப்படும். 

திருமலை திருப்பதி

மேலும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 8.7 டன் தங்கத்தில், 1,938 கிலோ இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் மற்றும் 5,387 கிலோ ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிலும் வைப்பு வைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைப்பு வைக்கப்பட்டிருந்த 1,381 கிலோ தங்கத்தின் வைப்புக்காலம் முடிவடைந்ததால், தற்போது அது தேவஸ்தானத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

திருப்பதி

திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோயிலுக்குச் சொந்தமான, பல நூற்றாண்டுகளைக் கடந்த பழைமையான சிலைகள் மற்றும் மதிப்புமிக்க ஆபரணங்கள் ஆகியவை, எப்போதும் சந்நிதிக்குள்தான் இருக்கும்” என்று தெரிவித்தார்.