நாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்! | pallaththuk karuppan temple festival

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (25/04/2019)

கடைசி தொடர்பு:21:40 (25/04/2019)

நாமக்கல் அருகே பள்ளத்துக் கருப்பணார் கோயிலில் திருவிழா கோலாகலம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ளது பட்டணம் பள்ளத்து கருப்பணார் கோயில். இந்தக் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழா நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. கருப்பணார் கோயிலுக்குக் கட்டடம் எதுவும் இல்லை. கருப்பணார் சுவாமி திறந்த வெளியில் இருந்து பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். தாழ்வான பகுதியில் சுவாமி குடிகொண்டிருப்பதால் சுவாமிக்குப் `பள்ளத்து கருப்பணார்' என்று பெயர் ஏற்பட்டது.    

பள்ளத்துக் கருப்பணார்


மிகவும் பிரசித்திபெற்று விளங்கும் இந்தக் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே திருவிழா நடத்தப்படும். திருவிழா நடைபெறும் ஆண்டின், சித்திரை மாதம் 2-வது புதன்கிழமை இரவே திருவிழா நாள். அந்த, ஒரே ஒரு நாள் மட்டும் நடைபெறும் இந்தத் திருவிழாவில், சுற்றியிருக்கும் ஊர்களில் இருந்து மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள, மிகவும் சீரும் சிறப்பாக நடைபெறும். 

இந்தத் திருவிழா, நேற்று (ஏப்ரல் 24-ம் தேதி) இரவு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. திருவிழாவுக்கு நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டனர். கோயிலின் முன்பு ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து ஸ்வாமியை வழிப்பட்டனர். 

கருப்பன்

திருவிழாவையொட்டி கருப்பணார் சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளித்தார். சுவாமிக்கு முதலாவதாகப் பல தானிய பூஜை நடத்தப்பட்டது. அடுத்து பொங்கல் பூஜையும், பலா பூஜையும் நடத்தப்பட்டது. 3 விதமான பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு, கோயில் பரம்பரை பூசாரிகள் தீர்த்தம் கொடுத்தனர். அதன்பிறகு, பக்தர்கள் அந்தத் தீர்த்தத்தை தெளித்து தாங்கள் கொண்டுவந்த ஆடுகளை நேர்த்திக் கடனாக வெட்டினார்கள். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டிப் பலி கொடுக்கப்பட்டது.

கருப்பன்

அவ்வாறு வெட்டப்பட்ட ஆடுகளைப் பக்தர்கள் அவரவர் வீட்டுக்கு  எடுத்துச் சென்று, உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்து கொடுத்தனர். திருவிழாவையொட்டி இரவு வானவேடிக்கை நடத்தப்பட்டது.