ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட அழகர்தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங்..! | Azhagar Trending video

வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (26/04/2019)

கடைசி தொடர்பு:18:16 (26/04/2019)

ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட அழகர்தான் தற்போது இணையத்தில் டிரெண்டிங்..!

ர்ப்பரிக்கும் கூட்டம். மண்டகப்படி முடித்து அடுத்ததற்கு நகர்கிறார் அழகர். அப்போது கூட்டத்தில் சிக்கிக்கொண்டது ஒரு 108 ஆம்புலன்ஸ். அனைவரும் திகைத்து நிற்க, கூட்டம் விலகி ஆம்புலன்ஸுக்கு வழிவிடுகிறது ஊர்வலம். அழகரைத் தாங்கியிருந்தவர்கள் பின்னோக்கி நடந்து ஆம்புலன்ஸுக்கு வழியேற்படுத்துகிறார்கள். சைரனோடு முன்னேறிச் செல்கிறது ஆம்புலன்ஸ். நேற்றுமுதல் இந்த வீடியோதான் சமூக வலைதளத்தில் வைரல்.

 

 

கடந்த 23-ம் தேதியோடு மதுரை சித்திரைத் திருவிழா நிறைவடைந்தது. ஏராளமான மக்களை மகிழ்ச்சிப்படுத்திய இந்தத் திருவிழாவில், பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 19-ம் தேதியன்று அதிகாலை ஆற்றில் இறங்கிய அழகர் நேரே ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி முடித்து, மாலையில் தங்கக் குதிரை வாகனத்தில் வண்டியூர் நோக்கிப் பயணித்தார். மாலையில் அண்ணாநகர்ப் பகுதி திருக்கண்கள் ஒவ்வொன்றிலும் எழுந்தருளியபடியே வந்தார். 

அழகர்

அப்போது, அண்ணாநகர் 'ஷா' திரையரங்கம் அருகே, ஒரு திருக்கண்ணில் இருந்து மற்றொரு திருக்கண் நோக்கிச் செல்ல சாலைப்பக்கம் அழகர் திரும்பினார். அப்போது மக்கள் கூட்டத்தில் செல்ல வழியின்றி, அழகருக்குப் பின்னால் 108 ஆம்புலன்ஸ் ஒன்று நின்றுகொண்டிருந்தது. சாமி வருவதால் சைரன் ஒலிக்கவிடாமல் அவசர ஒளிமட்டும் சுழலவிட்டபடி நின்றிருந்தது. அழகரோடு கூடவே இருந்த பட்டரும், அழகரின் சீர்பாதம் தாங்கிகளும் இதைக் கண்டுவிட்டனர். உடனடியாகச் செயல்பட்டு, அந்த ஜனநெருக்கடியிலும் வந்த வழியே அழகரைப் பின்னோக்கிக் கொண்டுவந்து நிறுத்தினர். சுதாரித்துக்கொண்ட காவல்துறையினரும் உடனடியாகப் பக்தர்களை சாலையோரம் ஒதுக்கி, ஆம்புலன்ஸுக்கு வழிவிடச் செய்தனர்.

இந்த வீடியோவைப் பார்த்த அத்தனை பேரும் மின்னல்வேகத்தில் அனைவருக்கும் பகிர்ந்து வருவதால், தற்போது ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட அழகர்தான் இணையத்தில் டிரெண்டிங்காக உலாவருகிறார்! பக்தியோடு, அன்பர்களின் உள்ளத்தில் மனிதாபிமானத்தின் அவசியத்தை விளக்கும் விதமாக இந்தக் காட்சி அமைந்துள்ளதாகக் கருதுகிறார்கள் நெட்டிசன்கள்.