செவ்வாயால் ஏற்படும் ருசக யோகம் எந்த லக்கினக்காரர்களுக்கு நன்மை செய்யும்? | Who can get the benefits of Rusaka yogam from Mars?

வெளியிடப்பட்ட நேரம்: 08:46 (28/04/2019)

கடைசி தொடர்பு:16:46 (29/04/2019)

செவ்வாயால் ஏற்படும் ருசக யோகம் எந்த லக்கினக்காரர்களுக்கு நன்மை செய்யும்?

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் அதிகாரம், துணிச்சல், முன்கோபம், சகோதரர், விவேகமற்ற வீரம், பூமி, குன்றுகள், மலைகள், உலோகங்கள், எதிரிகள், கூர்மையான ஆயுதம், ரத்தம், சிவப்பு நிறமுடைய பொருள்கள், விளையாட்டு, உடற்பயிற்சி, சுதந்திர மனப்பான்மை, நெருப்பு, காவல்துறை, ராணுவம், ஆளுமை போன்றவற்றுக்கு காரகத்துவம் வகிக்கிறார்.

செவ்வாயால் ஏற்படும் ருசக யோகம் எந்த லக்கினக்காரர்களுக்கு நன்மை செய்யும்?

குரு, புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களினால் ஏற்படக்கூடிய யோகங்களைத் தொடர்ந்து, செவ்வாய் கிரகத்தினால் ஏற்படக்கூடிய ருசக யோகம் பற்றி 'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி விவரிக்கிறார்.

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் அதிகாரம், துணிச்சல், முன்கோபம், சகோதரர், விவேகமற்ற வீரம், பூமி, குன்றுகள், மலைகள், உலோகங்கள், எதிரிகள், கூர்மையான ஆயுதம், ரத்தம், சிவப்பு நிறமுடைய பொருள்கள், விளையாட்டு, உடற்பயிற்சி, சுதந்திர மனப்பான்மை, நெருப்பு, காவல்துறை, ராணுவம், ஆளுமை போன்றவற்றுக்கு காரகத்துவம் வகிக்கிறார்.

செவ்வாய்  வழங்கும் ருசக யோகம்

சர லக்கினங்கள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம்,  ஸ்திர லக்கினங்களான ரிஷபம்,  சிம்மம், விருச்சிகம்,  கும்பம் ஆகிய எட்டு லக்கினங்களுக்கு மட்டுமே ருசக யோகம் செயல்படும். கேந்திரம் எனக் கூறப்படும் லக்கினம், 4, 7, 10 ஆகிய இடங்களில்  செவ்வாய் அமையும்போது ருசக யோகத்தை அளிப்பார். அவர் இவ்வாறு பலம் பெறும் நிலையில், அவரது தசையில் அவரின் காரகத்துவங்கள் வெளிப்படும். உபய லக்கினங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றுக்கு ருசக யோகம் கிடையாது. 

பலம் பெற்ற செவ்வாய், ஒருவருக்கு உடல் ஆரோக்கியத்தையும், வலுவான உடலையும், உடற்பயிற்சி செய்யும் ஆர்வத்தையும் தருவார்.  விளையாட்டு, மருத்துவம் போன்ற துறைகளில் ஒருவருக்கு ஈடுபாடு வரக் காரணம் செவ்வாய்தான். அதேநேரத்தில்  சுக்கிரனை பாபியாகக் கொண்ட தனுசு, மீனம், கடகம் போன்ற லக்கினங்களுக்கு இந்த யோகம் சில நன்மைகளை செவ்வாய் தசையில் செய்யும். 

கிரகங்கள்

பொதுவாக செவ்வாய் வலுப்பெற்று லக்கினத்தோடு சம்பந்தப்படும் நிலையில் ஜாதகர் மிகவும் கோபக்காரராக இருப்பார். லக்கினத்தில் வேறு பாபக் கிரகங்களும் சேர்ந்தால் மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பேசுவார். அதேநேரம் சில நிலைகளில் செவ்வாய் சுபத்துவம் பெற்றிருந்தால் கோபம் அடங்கியதும், தான் பேசிய வார்த்தைகளுக்கு மனப்பூர்வமாக வருந்துவார். ஆயினும் அவரால் கோபத்தைக் கட்டுப்படுத்தமுடியாது. முன்கோபத்தில் பேசுவதும் பிறகு அதற்காக வருத்தப்படுவதும் இவருக்குத் தொடர்கதையாக இருக்கும். பலம் பெற்ற செவ்வாய் ஒருவரை, செய்த தவற்றை ஒத்துக் கொள்ள விட மாட்டார். தான் செய்தது சரி என்றே வாதாட வைப்பார்.

சூட்சும வலுப் பெற்று சுபத்துவமும் அடையும் செவ்வாய், சூரியன் சம்பந்தத்தோடு ராசிக்கோ அல்லது லக்கினத்துக்கோ பத்தாமிடத்தைத் தொடர்புகொள்ளும்போது, மிகச் சிறந்த, நேர்மையான, கடமையை உயிராகக் கருதும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை, ராணுவ மேஜர்களை உருவாக்குவார். வலுப் பெற்ற செவ்வாய், ஒருவரை அறுவைச் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற வைப்பார். இதே செவ்வாய் பகை, நீசம் பெற்றிருந்தால், வெட்டுக் குத்துக்கு அஞ்சாத பாதகச் செயல்களையும் செய்யச் செய்வார். செவ்வாய் பூமிகாரகன் என்பதால், ரியல் எஸ்டேட் பிசினஸ் மூலமாக சம்பாதித்து பொருள் தேட வைப்பார். 

மேஷம் :
மேஷத்துக்கு செவ்வாய் லக்கினத்துக்கும் எட்டாமிடத்துக்கும் உரியவராகி ஒன்றில் ஆட்சியும், பத்தாமிடத்தில் உச்சமும் பெற்று இரு நிலைகளில் ருசக யோகம் தருவார். லக்கினத்தில் ஆட்சி பெறும்போது நான்கு, ஏழு, மற்றும் எட்டாமிடங்களைத் தன் சிறப்புப் பார்வைகளால் பார்வையிட்டு நல்ல பலன்களைத் தருவார்.
லக்கினத்தில் சுப வலுவுடன் இருக்கும் செவ்வாய், ஜாதகருக்கு நல்ல ஆரோக்கியம், உடற்பயிற்சி செய்யும் ஆர்வம், உடலை நல்லமுறையில் பராமரித்தல் ஆகியவற்றை ஜாதகருக்குத் தருவார். பொதுவாகவே செவ்வாய் லக்கினம் அல்லது லக்கினாதிபதியோடு தொடர்பு கொண்டு அவரது தசை நடந்தாலே எல்லோருக்கும் உடலைப் பாதுகாக்கும் ஆர்வம் வரும்.

கிரக சஞ்சாரம்

ரிஷபம்:

ரிஷப லக்கினத்துக்கு செவ்வாய் ஏழாமிடத்துக்கு அதிபதியாகி விருச்சிகத்தில் ஆட்சி பெற்று செவ்வாய் தோஷம் ஏற்படுத்துவார். இங்கு ஆட்சி பெறும் செவ்வாய், ஜீவன ஸ்தானமான பத்தாமிடம், லக்கினம், மற்றும் குடும்பஸ்தானமான இரண்டாமிடம் ஆகியவற் றைப் பார்வையிட்டு அந்த இடங்களைப் பலவீனமாக்குவார்.
லக்கினத்தை செவ்வாய் வலுப்பெற்றுப் பார்க்கும் நிலையில் ஜாதகர் கோபக்காரராகவும், செலவாளியாகவும் இருப்பார். செவ்வாய் தசை நடக்கும்போது முரட்டுத்தனமான சுபாவங்களும், அசட்டுத் துணிச்சலும், முன்கோபமும் இருக்கும். மற்ற கிரகங்களோடு செவ்வாய் சேர்ந்திருந்தால், அந்த கிரகங்களின் சுப, பாபத்துவங்க ளுக்கு ஏற்ப குணநலன்கள் இருக்கும்.

கடகம்:

கடகத்தின் பூரண ராஜ யோகாதிபதியான செவ்வாய், இந்த லக்கினத்துக்கு பத்தாமிடமான மேஷத்தில் திக்பலம் பெற்றும், ஏழாமிடத்தில் உச்சம் பெற்றும் இரண்டு இடங்களில் வலுப்பெற்று ருசக யோகம் அளிப்பார்.

தன் வீட்டில் ஆட்சி பெற்ற நிலையில், தனது இன்னொரு வீட்டையும் பார்க்கும் ஒரே கிரகம் செவ்வாய் மட்டுமே. மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது வீட்டைப் பார்க்கும் கிரகம் அந்த பாவத்தை வலுப்படுத்தும் என்பதால், செவ்வாயின் இரண்டு வீடுகளும் இதனால் பலம் பெறும். இங்கிருக்கும் செவ்வாய் தனித்திருப்பதை விடவும் லக்கின சுபர்களான சூரிய, சந்திர, குருவுடன் தொடர்போ, இணைவோ பெறும் நிலையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
 
சிம்மம் :
கடக லக்கினத்துக்கு செவ்வாய் என்ன பலன்கள் தருவாரோ அவை யாவும் சிம்மத்துக்கும் பொருந்தும். செவ்வாய் இந்த லக்கினத்துக்கு சுபர் என்பதால் என்னதான் ஏழாம் பாவத்தைப் பார்த்தாலும் திருமண வாழ்வைக் கெடுக்கமாட்டார். செவ்வாய் வலுப்பெற்றிருந்தால், தனது காரகத்துவங்களான மருத்துவம், நெருப்பு, விளையாட்டு, சீருடைப் பணி உள்ளிட்டவற்றின் மூலம் ஜாதகருக்கு நன்மைகளையும், லாப வரவுகளையும் அளிப்பார்.

துலாம் :

துலாம் லக்கினத்துக்கு, அதன் லக்கினாதிபதி சுக்கிரனுக்கு எதிரி செவ்வாய். நான்கில் உச்சம் பெற்றும், ஏழாமிடத்தில் ஆட்சி பெற்றும் ருசக யோகத்தைத் தருவார். ஏழாமிடத்தில் ஆட்சி பெறும் நிலையில், அவர் பத்தாமிடத்தையும், லக்கினத்தையும், அவரது வீடான இரண்டாமிடத்தையும் பார்ப்பார் என்பதால், இரண்டாமிட பார்வையைத் தவிர, அவரின் மற்ற பார்வைகள் அவ்வளவு சிறப்பானதல்ல.
இந்த லக்கினத்தின் ஜீவனாதிபதி சந்திரன் அவருடைய நண்பர் என்பதால், பத்தாமிடத்தைப் பார்க்கும் நிலையில் ஜாதகருக்கு தனது காரகத்துவங்களில் தொழில் அமைத்துத் தருவார்.  பெரும்பாலும் சீருடை அணியும் துறைகளில் ஜாதகரை பணிபுரிய வைப்பார். இந்த அமைப்பால் ஜாதகருக்கு நிலையான பொருளாதார வசதி, வருமான வாய்ப்பு இருக்கும்.

ராசிகள்

விருச்சிகம்: 

விருச்சிக லக்கினத்துக்கு ருசக யோகம் அமைந்தால், ஜாதகர் உடற்பயிற்சியில் ஆர்வமும் துடிப்பான செயல்பாடும் உள்ளவராக இருப்பார். முன்கோபக்காரராகவும், நேர்மையானவராகவும் இருப்பார். செவ்வாய் தசையில் பூமி லாபம், மருத்துவம், விளையாட்டு, ராணுவம் போன்றவற்றில் பணிபுரிந்து பெயரும் புகழும் பெறுவார். விருச்சிகம் ஸ்திர லக்கினம் என்பதால், மேஷ லக்கினக்காரர்களைவிட இவர்கள் எந்தச் செயலிலும் தீர்க்கமான முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள். 

மகரம்:
மகர லக்கினத்தில் ருசக யோகம் அமையப்பெற்றால் ஜாதகர் அவசர புத்திக்காரராக இருப்பார்.  பொறுமை என்பதே இருக்காது. கடுமையான போக்குடைய அதிகாரியாகத் திகழ்வார். உச்சம்பெற்ற செவ்வாய் சுபர் பார்வை பெறுவது நல்லது. இல்லாவிட்டால்,  வேலையில் கடினமான போக்குடன் நடந்துகொள்ளச் செய்வார். சுபர் பார்வை பெற்றிருந்தால் ஜாதகர் தானிருக்கும் இடத்தில் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்வார்.

கும்பம்:
கும்ப லக்கினத்துக்கு  பத்தாமிடமான விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருப்பதால், இந்த ருசக யோகம் சிறப்பாக வேலை செய்யும். ஜாதகர் தனது ஆளுமைத் திறமையால் தானிருக்கும் துறையில் புகழின் உச்சியை அடைவார். பிரபலமான காவல் துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், புகழ்பெற்ற மருத்துவர்கள் இந்த ருசக யோகம் அமையப் பெற்றவர்களாக இருப்பார்கள். பலரும் வியந்து பாராட்டத் தக்க செயலைச் செய்து புகழ் பெறுவார்கள். பலருக்கு முன்மாதிரியாகவும் திகழ்வார்கள்'' என்கிறார் ஜோதிடக் கலைஅரசு ஆதித்ய குருஜி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்