`நானும் ஒரு பரதேசி...' எளிமையே வடிவான பகவான் ரமணர்! - பகவான் ரமணர் ஆராதனை தினப் பகிர்வு | Bahavan ramanar arathanai festival

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (01/05/2019)

கடைசி தொடர்பு:18:30 (01/05/2019)

`நானும் ஒரு பரதேசி...' எளிமையே வடிவான பகவான் ரமணர்! - பகவான் ரமணர் ஆராதனை தினப் பகிர்வு

அந்தக் கேள்வியே அவரை வாழ்நாள் முழுவதும் கொண்டு செலுத்தும் தன்மை வாய்ந்ததாக மாறியது. காதுகளில் போட்டிருந்த கடுக்கனை நான்கு ரூபாய்க்கு விற்றார். அந்தப் பணத்தில், ரயிலில் ஏறி விழுப்புரம் வந்தடைந்து, திருவண்ணாமலை வந்துசேர்ந்தான். அந்த இளைஞன் வேறு யாருமல்ல, உலகம் போற்றும் உன்னத மகான் ஶ்ரீரமணர்...

`நானும் ஒரு பரதேசி...' எளிமையே வடிவான பகவான் ரமணர்! - பகவான் ரமணர் ஆராதனை தினப் பகிர்வு

வனுக்கு வயது 17தான் ஆகியிருந்தது. குழந்தமை மாறாத வளரிளம் பருவம். ஆனால், அவன் மனம் அந்த வயதிற்கான பிள்ளை விளையாட்டுகளில் எல்லாம் ஈடுபடவில்லை. ஒரு நாள் தன் வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தபோது அவனுக்கு விசித்திர அனுபவம் ஏற்பட்டது. அது சகலரும் அனுபவிக்க விரும்பாத `மரணம்.' தன்னுடல் மரணித்துக்கிடக்கும் காட்சியை அவர் கண்டார். ஆனால் உடல் மரணித்தது என்றால், அதைக் காணும் `தான் யார்' என்ற கேள்வியும் அவர் மனதில் எழுந்தது. அந்தக் கேள்வியே அவரை வாழ்நாள் முழுவதும் கொண்டு செலுத்தும் தன்மை வாய்ந்ததாக மாறியது. காதுகளில் போட்டிருந்த கடுக்கனை நான்கு ரூபாய்க்கு விற்றார். அந்தப் பணத்தில், ரயிலில் ஏறி விழுப்புரம் வந்தடைந்து, திருவண்ணாமலை வந்துசேர்ந்தான். அந்த இளைஞன் வேறு யாருமல்ல, உலகம் போற்றும் உன்னத மகான் ஶ்ரீரமணர்.

ரமண மகரிஷி

`தான் யார்' என்னும் கேள்வியைச் சுமந்துகொண்டு, அருணாசலத்தில் வந்து அமர்ந்த ரமணரை, சேஷாத்திரி சுவாமிகள்தான் மக்களுக்கு அடையாளம் காட்டினார். அண்ணாமலையார் கோயிலில் இருக்கும் பாதாள லிங்க சந்நிதியில் அமர்ந்து தியானம் செய்து வந்த ரமணரை சேஷாத்ரி சுவாமிகள் அடிக்கடி வந்து பார்த்துச் செல்வார். அப்போது தன்னைக் காணவரும் பக்தர்களுக்கு சேஷாத்ரி சுவாமிகள், ரமணரைக் குறித்துச் சொல்லி அவரைப் பாதுகாக்கும்படியும் கூறினார். இப்படியாகப் பகவான் ரமணரைப் பற்றி பக்தர்கள் அறிந்துகொண்டனர். 

`நான் என்பது உடல் அல்ல' என்பதை உணர்ந்த ரமணர், அதைத் தன் பக்தர்களுக்கும் தொடர்ந்து போதித்து வந்தார். தனது பற்றற்ற வாழ்க்கையை அவர்களுக்குப் பாடமாக்கினார். உடல், அவரை வருத்தியதேயில்லை. பசியினால், நோயினால் அவர் துன்புற்றதும் இல்லை. 

ரமணரைக் காண உலகம் முழுமையும் இருந்து பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாதி, மத பேதம் இன்றி மக்கள் அவரை வந்து பணிந்துகொண்டனர். அதற்கு அவரின் எளிமை ஒரு முக்கியக் காரணம். வெறும் கௌபீணம் மட்டுமே அணிந்து, திருநீறு தரித்து சதாசிவம் என அமர்ந்திருக்கும் அவரின் தோற்றம் சகலரையும் வியப்பிலும் சிலிர்ப்பிலும் ஆழ்த்தும்

ரமண மகரிஷி

ஒருமுறை, ரமணாஸ்ரமத்தில் ஒரு பெரிய பூஜையும் நிறைவில் அன்னதானமும் ஏற்பாடாகியிருந்தது. பல முக்கியப் பிரமுகர்களும் விழாவில் கலந்துகொண்டிருந்தனர். அன்னதான நேரத்தில், பரதேசிகள் பலரும், முக்கியப் பிரமுகர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அன்னதானப் பந்தலில் நுழைந்துவிட்டனர். உடனே, அங்கிருந்த ஆஸ்ரம நிர்வாகிகள், ``பரதேசிகளுக்கெல்லாம் கிழக்குப் பந்தலில் அன்னதானம் நடக்கிறது. தயவு செய்து அங்கு செல்லுங்கள்" என்று சொன்னார். அதே போல பரதேசிகளும் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

அன்னதானத்தைத் தொடங்குவதற்காக ரமணர் எங்கே என்று தேடினர். ஆனால், பகவானைக் காணமுடியவில்லை. அவருடைய அறை, தோட்டம் என்று எங்கு தேடியும் அவரைக் காணவில்லை. அப்போது, ஒரு சேவகன் ஓடியடித்துக்கொண்டு வந்தான்.

``கிழக்குப் பந்தலில் ரமணரைப் போன்ற ஒருவர் அமர்ந்திருக்கிறார், வந்து பாருங்கள் " என்றார். எல்லோரும் அங்குச் சென்று பார்த்தால், ரமணர், பரதேசிகளோடு சேர்ந்து அமர்ந்திருந்தார். கண்டவர் கண்களில் நீர் சுரந்தது. 

நிர்வாகி அவரிடம், ``ஸ்வாமி, தாங்கள் ஏன் இங்கு வந்தமர்ந்தீர்கள்? " என்று கேட்டார். அதற்கு ரமணர்,

``பரதேசிகள் எல்லாம் கிழக்குப் பந்தலுக்குத்தான் போகவேண்டும் என்று விரட்டிக்கொண்டிருந்தனர். நானும் பரதேசிதானே, அதுதான் இங்கே வந்துவிட்டேன்" என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அந்த நிர்வாகி அவர் பாதங்களில் வீழ்ந்து தன் அறியாமையை மன்னித்துக்கொள்ளச் சொன்னார்.

பகவான் ரமணர்

தமிழில் தத்துவ ஞானம் மிளிரும் பல்வேறு நூல்களை ரமணர் எழுதியுள்ளார். அவற்றுள், அவர் மொழி பெயர்த்த ஆதிசங்கரரின் `ஆத்மபோதம்', `விவேக சூடாமணி' ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கன. இந்த இரு நூல்களும், `தான் யார்' என்று அறிய விரும்புபவர்களுக்கு, உலகம், உயிர், இறை ஆகியவை குறித்த தத்துவங்களை எளிமையாகப் போதிப்பன. ரமணர் `ஆத்ம போதம் ' நூலை, அழகு தமிழில் வெண்பாக்களாகச் செய்தார். `அறிவொன்றே நேர் முக்தி சாதனமாகும்' என்றும் `அறியாமைக் குப்பை அகன்றால்தான் தன்னையறிதலும் கூடும்' என்றும் மிகமிக எளிமையாக, சங்கரரின் தத்துவங்களைத் தமிழில் தந்தார்.

மனிதர்கள் மட்டுமல்ல, சகல ஜீவன்களும் அவரிடம் ஓடிவந்து அன்பு செய்யும். ரமணாஸ்ரமத் தோட்டத்தில் தாவித் திரியும் குரங்குகள் எல்லாம் அவரின் அன்பைப் பெற்றவை. நம் நாட்டின் முதல் சுதந்திர தினத்தன்று ஆஸ்ரமத்தில் எல்லோருக்கும் ஒரு பெரிய விருந்து ஏற்பாடானது. ரமணரோ, `எப்போதும் நம்மோடே இருக்கும் இந்தக் குரங்குகளுக்கும் அணில்களுக்கும் சேர்த்து உணவு தயார் செய்யுங்கள்' என்று சொல்லி குரங்குகளுக்கும் சேர்த்து விருந்து வைத்தாராம்.

திருவண்ணாமலை நினைத்த மாத்திரத்திலேயே முக்தி தரும் தலம். அதேபோல, சகல ஜீவன்களிலும் இறைவனைத் தரிசித்த சத்குரு ஶ்ரீரமணமகரிஷியின் பாதக் கமலங்களை நினைத்த மாத்திரத்திலேயே சகல துன்பங்களும் தீரும் என்கின்றனர் அவர் பக்தர்கள்.

கலியுகத்தில் கடைத்தேற்ற பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றுள் மிக எளிய வழி, சகலத்தையும் ரமணார்ப்பணம் செய்வதுதான். நாளை, ரமணரின் 69 வது ஆராதனை விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பகவானை தியானித்து நல்லருள் பெறலாம்.     

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்