திருப்பதி தேவஸ்தான தங்கத்தில் சுவிஸ் வங்கியின் முத்திரை! - ஊழல் காரணமா? | Congress staged Protest over Tirupati Tirumala Temple issue

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (03/05/2019)

கடைசி தொடர்பு:17:40 (03/05/2019)

திருப்பதி தேவஸ்தான தங்கத்தில் சுவிஸ் வங்கியின் முத்திரை! - ஊழல் காரணமா?

"திருமலை திருப்பதி கோயிலுக்குரிய தங்கம் மற்றும் ரொக்கத்தை வங்கிகளில் முதலீடு செய்வதில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. தேவஸ்தான அதிகாரிகள் கமிஷன் பெற்றுக்கொண்டு வங்கிகளில் முதலீடு செய்கிறார்கள்" என்று சித்தூர் மாவட்டக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சிந்தா மோகன், நேற்று நடைபெற்ற அமைதி ஊர்வலப் போராட்டத்தின்போது குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பினார்.

திருமலை

திருப்பதியில் ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளைத் தேவஸ்தான அதிகாரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு, மக்களைத் திரட்டி அமைதி ஊர்வலம் ஒன்றைக் காங்கிரஸ் கட்சி நேற்று நடத்தியது. 

இந்தப் போராட்டத்தின் போது பேசிய சிந்தா மோகன், “திருப்பதியில் குவிந்திருக்கும் சொத்துகள் அனைத்தும் ஏழுமலையானுக்குப் பக்தர்கள் அளித்த காணிக்கையாகும். இதில் ஊழல் நடக்க ஒரு நாளும் அனுமதிக்கப்பட மாட்டாது. சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து திருமலைக்குக் கொண்டுவரப்பட்ட தங்கக் கட்டிகளில், சுவிஸ் வங்கியின் முத்திரை இருந்தது. இது எப்படி வந்தது? தேவஸ்தான அதிகாரிகள் முதலீடு என்ற பெயரில் மிகப்பெரிய அளவுக்கு கமிஷன் பெறுகிறார்கள். பக்தர்களுடன் இணைந்து உள்ளூர் வாசிகள், ஏழுமலையானின் சொத்துகள் மற்றும் தங்க முதலீட்டு முறைகேடு குறித்துப் போராட வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் சொத்துகள் மற்றும் வங்கி முதலீடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். 

திருப்பதி

இந்தக் குற்றச்சாட்டு, திருமலை பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மீது குற்றம் சாட்டிப் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க