`நந்திப் பெருமானுக்கு ஏன் அபிஷேகம் இல்லை?' - மழை யாகத்தால் குமுறும் திருப்புன்கூர் பக்தர்கள் | Thirupungur Temple officials hold rituals for rain

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (03/05/2019)

கடைசி தொடர்பு:20:30 (03/05/2019)

`நந்திப் பெருமானுக்கு ஏன் அபிஷேகம் இல்லை?' - மழை யாகத்தால் குமுறும் திருப்புன்கூர் பக்தர்கள்

இந்து அறநிலையத் துறை ஆணையர் உத்தரவுப்படி, திருப்புன்கூர் சிவலோக நாதர் சுவாமி கோயிலில் இன்று மழை வேண்டி சிறப்பு யாகம் விமரிசையாக நடைபெற்றது.

temple

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருப்புன்கூரில், அருள்மிகு சௌந்தரநாயகி அம்பாள் உடனாகிய சிவலோகநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தலம், மூர்த்தி, தீர்த்தம், யாவினும் சிறப்புப் பெற்றது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஆகிய சமய குரவர்களால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். நந்தனார் தரிசனம் செய்வதற்காக  நந்தி விலகி வழிவிட்ட தலமான இங்கு பிரம்மா, இந்திரன், சூரியன்,  அகஸ்தியர் ஆகியோர்  சுவாமியை பூஜித்து சாபம்  நீங்கப்பெற்றனர் என்பது தல வரலாறு.

சோழர்கள் ஆட்சிக் காலத்தில் இக்கோயிலில் மழை பெய்யவும், மழை நிற்கவும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் பாடினார். அதன்படி மழை பெய்து  நாடு செழித்தது. இதனால் மனம் மகிழ்ந்த சோழ மன்னர்,  இக்கோயிலுக்கு  காணிக்கையாக 24 வேலி நிலத்தை வழங்கியுள்ளார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில், இன்று இந்து சமய அறநிலையத் துறை உத்தரவின்படி மழை வேண்டி ருத்ர யாகம் மற்றும் வருண ஜப யாகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, மகாமண்டபத்தில் 22 கலசங்கள் அமைக்கப்பட்டு ருத்ர ஹோமம், ருத்ர ஜபம், ருத்ர பூஜை, வருண ஜபம் மற்றும் ருத்ர அபிஷேகம் நடைபெற்றது அதனைத்  தொடர்ந்து வேதா உபசாரம், திருமுறை பாராயணம், நாத  உபசாரம், நாட்டிய உபசாரம் நடைபெற்றன. தொடர்ந்து  மேள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதன்பின் சுவாமி, அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். யாகம் மற்றும் பூஜைகளை கோயில் அர்ச்சகர் பாலாஜி தலைமையில் செதலபதி சுவாமிநாத சிவாச்சாரியார் செய்துவைத்தார். ஆனால், நந்திப் பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி, நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்யப்படும் என அறநிலையத் துறை அறிவித்திருந்தும் அதன்படி நடைபெறவில்லை என்று பக்தர்கள் குறை கூறினர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மகாதேவி, ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.