28 நாள்கள் உண்ணா நோன்பிருந்து சமாதிநிலையை அடைந்த சமணப் பெண் துறவி! | jain saint attains samadhi by fasting

வெளியிடப்பட்ட நேரம்: 21:39 (04/05/2019)

கடைசி தொடர்பு:21:39 (04/05/2019)

28 நாள்கள் உண்ணா நோன்பிருந்து சமாதிநிலையை அடைந்த சமணப் பெண் துறவி!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்சித்தாமூரில், 1,200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ 1008 பார்சுவநாதர் ஜெயின் கோயில் (ஜினலாயம்) மற்றும்  தமிழக ஜைனர்களின் தலைமைப் பீடமான ஜினகஞ்சி சமண மடமும் உள்ளன. தமிழகத்திற்கு யாத்திரை வரும் ஜெயின் துறவிகள், இங்கு வந்து செல்வது வழக்கம். இரண்டு மாதங்களுக்கு முன்,  கர்நாடகாவிலிருந்து இரண்டு திகம்பர ஜெயின் துறவிகள் தலைமையில், பெண் துறவிகள் (ஆயிர்கை / ஆர்யாகன்னிகள்) மேல்சித்தாமூர் ஜினகஞ்சி மடத்திற்கு வந்தனர். இவர்களில், 65 வயதாகும் பிரபாவதி மாதாஜி என்ற பெண் துறவியும் வந்திருந்தார். பிரபாவதி மாதாஜி, ஜெயின் மத கோட்பாட்டின்படி மேல்சித்தாமூரிலேயே, உண்ணாநோம்பிருந்து (சல்லேகனை மேற்கொள்ளுதல் / வடக்கிருத்தல்), சமாதி நிலையை அடைய முடிவெடுத்து விரதம் மேற்கொண்டார். அவர், நேற்று இரவு (3.5.19) சமாதி நிலையை அடைந்தார். 

சமண

இதுகுறித்து, அங்குள்ள ஸ்வஸ்தி ஸ்ரீ லக்ஷ்மிஷேன பட்டாரக பட்டாச்சார்ய வர்ய மாக இளைய சுவாமிகளிடம் கேட்டோம். 
``துறவிகள் உண்ணாநிலை விரதம் இருந்து தீட்சை அடைவதைச் சமண சமயத்தில் ‘சல்லேகனை விரதம்’ மேற்கொள்ளுதல் அல்லது ‘வடக்கிருத்தல்’ என்று கூறுவோம். புறப்பற்று 14-யும் அகப்பற்று 10-யும் தியாகம் செய்துவிட்டு, எந்த விதமான ஆசாபாசங்களும் இன்றி முற்றும் திறந்த நிலையில் தியானம் மேற்கொள்வது சல்லேகனை விரதம் ஆகும். அவ்வாறு சல்லேகனை விரதம் மேற்கொள்பவர்கள், படிப்படியாக ஆகாரங்களைத் தியாகம்செய்துவருவார்கள். கடைசியாக, நீர் ஆகாரத்தையும் தியாகம் செய்துவிடுவார்கள். நீர்கூட அருந்தாமல், மரணத்தை அடைவதே வடக்கிருத்தல்.

ஸ்ரீ பிரபாவதி மாதாஜி அவர்கள், கடந்த மாதம் 27-ம் தேதி முதல் நீர் குடிப்பதை நிறுத்திவிட்டு, தொடர் தியானத்திலிருந்தார். அவரது ஆத்மா நேற்று இரவு பிரிந்தது. சல்லேகனை விரதம் இருந்து சமாதி ஆனதால், அவரது உடலை கொப்பரைத் தேங்காய், சந்தனக் கட்டை, நெய் ஆகியவை கொண்டு, சிதை மூட்டி எரிக்கப்பட்டது. இதன்மூலம், அவர் மோட்சம் அடைவார்” என்றும் தெரிவித்தார்.  

இவ்வாறு மரணம் அடைந்தவர்கள் நேரடியாகவே மோட்சம் செல்வதால், யாரும் அவர் மரணத்தை முன்னிட்டு அழமாட்டார்கள். அதனால், உண்ணாநிலை மரணத்தை,  ‘மரண உற்சவம்’ என்றே அவர்கள் அழைக்கிறார்கள். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க