"உண்மையில் நீ எல்லையற்றவன். எது பரிபூரணமானதோ அது நீதான்" - கோவையில் ஜகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் உரை! | Kovai Swami Jakathaathmaanantha Saraswathi speaks about Swami Dayananda Saraswathi

வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (05/05/2019)

கடைசி தொடர்பு:17:36 (05/05/2019)

"உண்மையில் நீ எல்லையற்றவன். எது பரிபூரணமானதோ அது நீதான்" - கோவையில் ஜகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் உரை!

னிதர்கள் தம்மைக் குறைவுள்ளவர்கள் என்றே நினைத்துக்கொள்கிறார்கள். அதனாலேயே பரிபூர்ணமான சத்குணத்தைத் தேடியலைகிறார்கள். ஆனால், சகலமும் அறிந்த குருவோ, மனிதர்கள் பரிபூர்ணர்கள் என்கிறார். அது எப்படி... என்கிற கேள்விக்கான விடையாக அமைந்தது ஓர் உரை. சக்தி விகடன் மற்றும் தயாலயா வேதாந்த ஆய்வு நிறுவனம் இணைந்து வழங்கும் ‘வேதாந்தா 24*7’ எனும் மாதாந்திர தமிழ்ச் சொற்பொழிவு நிகழ்ச்சி, கடந்த ஞாயிறு அன்று கோவை ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலத்தில் நடைபெற்றது. பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதியின் சீரிய சிந்தனைகளை நினைவுகூரும் விதமாக இந்த நிகழ்ச்சியில், உரையாற்றிய சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி, பூஜ்யஸ்ரீ சுவாமிகளின் கருத்துகளைத் தொகுத்து வழங்கினார். 

தயானந்த சரஸ்வதி சுவாமிகள்

விழா தொடக்கத்தில் சுவாமி சதாத்மானந்த சரஸ்வதி ஆசியுரை வழங்கினார். ஆசியுரையைத் தொடர்ந்து பேசிய சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி, ஸாதனமும் ஸாத்யமும் என்கிற தலைப்பிலான தன் உரையை நிகழ்த்தினார். அதில் அவர் கூறியதாவது, 

“இறைவனின் படைப்பில் சேதனம், அசேதனம் என்று இரண்டு வகை இருக்கிறது. சேதனம் இருப்பும், உணர்வும் உடையது. அசேதனம் இருப்பாய் மட்டுமேயுள்ளது. நாம் தேடுவது நம்மைத்தான். நம்மை உடல், மனம், புத்தி, சித்தம், அகங்காரம், இந்திரியங்கள் என்ற வரையறைக்குள் ஆட்படுத்திக்கொண்டு ‘நான் ஆன்மா’ என்ற உண்மையை உணரத் தவறி விடுகிறோம். நாம் அறிந்துகொள்ள விரும்புவது, தேடுவது ‘நான்’ என்ற எல்லையற்ற, வரையறைகளற்ற ஆன்மா பூரணமானது. 'முக்தி' அல்லது 'மோட்சம்' என்பது அந்த நிறைவை அடைவது. பூரணத்தை உணர்வது. ஒவ்வொரு மனிதனும், தான் ஒரு சுதந்திர புருஷனாக இருக்கவே விரும்புகின்றான். அத்தகைய சுதந்திரமே முக்தி அல்லது மோட்சம். ‘சார்ந்திருப்பதிலிருந்து விடுதலையடைதலே’ மோட்சமாகும். முக்திக்கு அடிப்படையானது ஞானம்.

சுவாமிகள்

இல்லாத ஒன்றை அடைவது அல்ல, உண்மையில் எவ்வித செயலின் பலனும் இல்லாமல் இருப்பதே மோட்சம். நிறைவற்றவன் எப்போதாவது நிறைவுள்ளவனாக மாறமுடியுமா? ஏதேனும் ஒரு செயலின் மூலம், நமக்கு என்றும் மாறாத நிறைவு கிடைத்து விடுமா? நிச்சயம் இல்லை. மாறும் குணமுடைய ஒன்றால், மாறாத ஒன்றைத் தந்துவிட முடியாது. நாம் ஏற்கெனவே பூரணமானவர்கள். அதை அறியாமை எனும் திரை மறைத்துள்ளது. அது நீக்கப்பட வேண்டும். பிறகு நாம் நம்மை அறிவோம். தன்னை அறிதலே நிறைவைத் தரும்.

எந்த ஒரு அறிவைப் பெறுவதற்கும், நமக்கு ஒரு பிரமாணம் அதாவது - ஸாதனம் வேண்டும். அறிய வேண்டியதன் தன்மையைக்கொண்டு அறிவின் ஸாதனம் அமையும். உதாரணமாக நிறத்தை அறிய வேண்டுமெனில் கண்கள்தான் பிரமாணம். ஒலியைக்கேட்க காதுகள்தான் பிரமாணம். ஐம்புலன்களால் பெறப்படும் அறிவுக்கான பிரமாணம் பிரத்யக்ஷ பிரமாணம் - காட்சிப் பிரமாணம் என்று கூறப்படும். ஒன்றைக் கொண்டு இன்னொன்றை யூகித்து அறிவது அனுமானம். புகையைப் பார்த்ததும் ‘நெருப்பின்றி புகையாது’என அறிவது அனுமானம். ‘பால் போல் வெண்மை’ என்பது போல் ஒன்றைக்காட்டி இன்னொன்றைப் புரிய வைப்பது உதாரணம். அர்த்த - ஆபத்தி - அர்த்தாபத்தி என்பது அடுத்த பிரமாணம். இதனை ஒரு கருதுகோள் என்று கூறலாம். ஒரு பொருளின் இன்மையை அறிவது அனுபலப்தி எனும் பிரமாணம்.

இவை எதனாலும், ஆன்மாவை, இறைவனை, பிரம்மத்தை நமக்குக் காட்ட முடியாது. எனவே ஆறாவதாக ஒரு பிரமாணம் தேவை. அதுதான் சப்த பிரமாணம் எனும் வேதம் ஆகும். அதன் நிறைவுப் பகுதியே வேதாந்தம்.

ஜகதாத்மானந்த சரஸ்வதி

நான் வரம்புகளுக்கு உட்பட்டவன், குறைபட்டவன் என்ற உணர்விலிருந்து விடுதலை அடைய வேண்டுமெனில், 'நான் ஏற்கனவே வரம்புகளுக்குட்படாத, நிறைவான ஆன்மா' என்று அறிந்தே ஆகவேண்டும். கண் முதலான எந்த ஒரு பிரமாணமும் இதற்குப் பயன் படப்போவதில்லை. இவை யாவற்றையும் தாண்டி ஓர் உறுதியான பிரமாணத்தை நாம் அறிந்தாக வேண்டும். அதுதான் உண்மையான ஸாதனம், அறிவுப் பிரமாணம், வேதாந்தம் அல்லது உபநிஷத்துகள்.

உபநிஷத்துகள் ஆன்மாவை எவ்வாறு விளக்குகின்றன? என்னைப் பற்றி எனக்குள்ள தவறான புரிதலை நீக்குவதன் மூலம் ஆன்மா விளக்கப்படுகிறது.

நீ எவ்வாறு இருக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ, அவ்வாறாகவே இருக்கிறாய். நீ அதற்கு மாறாக இல்லை. நீ குறையுடையவன் இல்லை. 'உண்மையில் நீ எல்லையற்றவன். எது பரிபூரணமானதோ அது நீதான்' என்று உபநிஷதம் கூறுகின்றது. அறியாமை அகல்வது என்பதும் ஆத்ம ஞானம் பெறப்பட்டது அல்லது ஸாத்யமானது என்பதும் ஒன்றுதான்” என்றார்.

வேதாந்தத்தின் தத்துவ சாரமாக விளங்கிய இந்த உரையை, அங்குக் கூடியிருந்த பார்வையாளர்கள் கேட்டுப் பயன்பெற்றனர்.


டிரெண்டிங் @ விகடன்