மே 9-ல் தொடங்குகிறது திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி வசந்த விழா | May month thiruchendur vaigasi vasantha festival

வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (06/05/2019)

கடைசி தொடர்பு:22:20 (06/05/2019)

மே 9-ல் தொடங்குகிறது திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி வசந்த விழா

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி வசந்தத் திருவிழா வரும் மே 9-ம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து வரும் மே 18-ம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறும். வைகாசி விசாகத்தின் முக்கிய நிகழ்வான முனிகுமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் அன்று மாலை நடைபெறுகிறது.

திருச்செந்தூர்

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாகத் திருவிழா ஒவ்வொரு முருகன் கோயிலிலும் சிறப்பாக நடைபெறும். அதில், திருச்செந்தூர் வைகாசி விசாகத் திருவிழாவானது ’வைகாசி வசந்தப் பெருவிழா’ எனும் பெயரில் மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் வசந்த விழா மே 9-ம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறும். உற்சவ நாள்களில் தினமும் உச்சிகால தீபாராதனை நடைபெறும். அதைத்தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் அருள்புரிவார். மாலை நேரத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெறும். அதற்குப் பிறகு ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தை 11 முறை வலம் வருவார். அப்போது வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், நந்தி மத்தளம், சங்கநாதம், பிள்ளைத்தமிழ், வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு, கப்பல் பாட்டு ஆகியன இசைக்கப்படும்.   

திருச்செந்தூர் முருகன் கோயில்

திருவிழாவின் நிறைவு நாளான மே 18-ம் தேதி (சனிக்கிழமை ) வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 1 மணிக்கே திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிப்பார், முருகப்பெருமான். அதைத் தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெறும். இறுதியாக ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க