அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்ட 2,700 சிலைகளின் நிலை என்ன...? உறங்குகிறதா மத்திய தொல்லியல் துறை? | ASI identifies Indian artefacts seized from smuggler Subhash Kapoor

வெளியிடப்பட்ட நேரம்: 19:32 (09/05/2019)

கடைசி தொடர்பு:19:32 (09/05/2019)

அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்ட 2,700 சிலைகளின் நிலை என்ன...? உறங்குகிறதா மத்திய தொல்லியல் துறை?

"மத்தியப்பிரதேசத்தில் பர்குத் எனும் இடத்தில், ஒரு விவசாயி தன் வீட்டில் குல தெய்வமாக வழிபட்டுக்கொண்டிருந்த சிலை இது. 1978-ம் ஆண்டே இந்திய தொல்லியல் துறையில் பதிவு செய்திருந்தார்கள். குல தெய்வமாக வழிபட்டுக்கொண்டிருந்தபோதே வீடு புகுந்து திருடப்பட்ட சிலை இது என்பது குறிப்பிடத்தக்கது."

அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்ட 2,700 சிலைகளின் நிலை என்ன...? உறங்குகிறதா மத்திய தொல்லியல் துறை?

2007-ம் ஆண்டு, மார்ச் மாதம் சிலைக்கடத்தல்காரர் சுபாஷ் கபூருக்குச் சொந்தமான கன்டெய்னர் ஒன்று இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கன்டெய்னரில் சட்ட விரோதமாகத் தொல்லியல் பொருள்கள் மற்றும் சிலைகள் கடத்தப்படுகின்றன என்ற தகவல் கிடைக்க, அதைச் சோதனை செய்ய முடிவு செய்தார்கள் அமெரிக்கச் சுங்கத் துறையினர். ஆனால் அந்த கன்டெய்னர் அமெரிக்காவை அடையும் முன்னரே, ``அது என்னுடையது அல்ல. அதற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை” என்று அறிக்கை வெளியிட்டார் சுபாஷ் கபூர்.

சிற்பங்கள்

திட்டமிட்டபடி அமெரிக்க சுங்கத் துறையினர் சோதனையிட்டபோது, அந்த கன்டெய்னர் முழுவதும் கல் சிலைகள், செப்புத் திருமேனிகள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய பாரம்பர்யச் சின்னங்கள் இருந்தன. அதை அமெரிக்க சுங்கத் துறை பறிமுதல் செய்தது. அதன்பிறகு இது தொடர்பான விசாரணை 2009-ல் தொடங்கப்பட்டது. மூன்று வருட விசாரணைக்குப் பிறகு 2012-ம் ஆண்டு நியூயார்க்கில் கபூருக்குச் சொந்தமான 12 சேமிப்புக் கிடங்குகளைச் சோதனையிட்டு கல் சிலைகள், சுடுமண் சுதைச் சிற்பங்கள், கலைப் பொருள்கள் அடங்கிய 2,622 பாரம்பர்ய கலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர். இவற்றில் நாகப்பட்டினம் புத்தர், தச்சூர் முருகன் சிலை, சேந்தமங்களத்தைச் சேர்ந்த நடனமாடும் சம்பந்தர் செப்புத் திருமேனி, ஸ்ரீபுரந்தானைச் சேர்ந்த செப்பு மயில் வாகனம் உள்ளிட்ட 34 சிலைகள் அப்போதே அடையாளம் காணப்பட்டன. ஆதாரங்களை அளித்தால் அனைத்தையும் திருப்பிக் கொடுப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது. ஆனாலும், அவற்றை மீட்க இந்திய அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மஹகோக்கா தேவதா

விஜயகுமார் சிலைக்கடத்தல்காரர் தீனதயாளன் தொடர்பாகவும், சிலைக்கடத்தல் தொடர்பாகவும் பல்வேறு ஆதாரங்களை அமெரிக்க அரசு இந்திய அரசுக்கும், தமிழக சிலைக்கடத்தல் தடுப்புத் துறையினருக்கும் 2014-ம் ஆண்டு அனுப்பி வைத்திருந்தது. ஆனால், இந்த ஆதாரங்கள் மீது, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2016-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றபோது, அமெரிக்க அரசு 200 பாரம்பர்ய சின்னங்களைத் திருப்பிக் கொடுப்பதாக அறிவித்தது. ஆனால், 11 சிலைகள் மட்டுமே இந்தியாவுக்குத் திருப்பித்தரப்பட்டது. பிரதமர் அமெரிக்கா செல்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு, தமிழகச் சிலைக்கடத்தல் தடுப்புத் துறையினர் அமெரிக்கா சென்று அங்கிருந்த தீனதாயாளனைக் கைது செய்ய வலியுறுத்தினார்கள். கைது செய்வதாக வாக்குறுதியளித்த அமெரிக்க அரசு, தீனதயாளனால் கடத்தப்பட்ட இரண்டு செப்புத் திருமேனிகளைத் திருப்பிக் கொடுத்தது. அதன்பிறகு, கபூர் சேமிப்புக் கிடங்கில் கைப்பற்றப்பட்ட சிலைகளைப் பற்றி மறந்துபோனார்கள் நம் அதிகாரிகள். 

மூன்று வருடங்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போது இந்திய தொல்லியல் துறை அதிகாரிகளான முனைவர் ஊர்மிளா சந்த் மற்றும் பி.எஸ்.ஸ்ரீராமன் ஆகிய இரண்டு பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர். கபூர் சேமிப்புக் கிடங்கு மற்றும் சில தனியார் அருங்காட்சியங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பாரம்பர்ய சிலைகளை ஆய்வு செய்தனர். அவற்றில் சுமார் 100 பாரம்பர்ய சின்னங்களை அடையாளம் கண்டுபிடித்திருக்கிறார்கள். விரைவில் அந்தச் சிலைகள் இந்தியாவுக்குக் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை சார்பில் வெளியாகியிருக்கும் அறிக்கையில், ``கபூர் சேமிப்புக் கிடங்கு மற்றும் பால் ஸ்டேட், ஹோனோலுலு அருங்காட்சியகங்களிலிருந்து அமெரிக்க அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தொல்லியல் பொருள்களில், ஹரப்பா நாகரிக காலத்திலிருந்து குப்தர்கள் காலத்துக்கு இடைப்பட்ட பல்வேறு சின்னங்களை அடையாளம் கண்டிருக்கிறோம். இவற்றில் சுத்தமல்லி மற்றும் ஸ்ரீபுரந்தான் கோயில்களிலிருந்து கடத்தப்பட்ட அழகான செப்புத் திருமேனிகளும் அடக்கம். முக்கியமாக 'மஹாகோக்கா தேவதா' சிலையை அடையாளம் கண்டுபிடித்திருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

மஹகோக்கா தேவதா என்னும் யக்‌ஷி சிலை, கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மத்திய பிரதேசத்தில் பர்குத் எனும் இடத்தில், ஒரு விவசாயி தன் வீட்டில் குல தெய்வமாக வழிபட்டுக்கொண்டிருந்த சிலை இது. 1978-ம் ஆண்டே இந்திய தொல்லியல் துறையில் பதிவு செய்திருந்தார்கள். குல தெய்வமாக வழிபட்டுக் கொண்டிருந்தபோதே வீடு புகுந்து திருடப்பட்ட சிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.  

``மதுரா பள்ளியைச் சேர்ந்த புத்தர் கல் சிலை, குப்தர் காலத்தைச் சேர்ந்த புத்தரது சுடுமண் சுதை சிற்பம் இவற்றோடு முகலாயர் காலத்தைச் சேர்ந்த பத்து குரான் செப்புத் தகடுகளும் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. டொலெடொ அருங்காட்சியகத்திலிருந்து மீட்கப்பட்டவற்றில் 56 சுடுமண் சுதைச் சிற்பங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. கபூரால் மேற்கு வங்கத்தில் உள்ள சந்த்ரகேதுகர் அருங்காட்சியகத்துக்குப் பரிசளிக்கப்பட சிலைகளும் இவற்றில் அடக்கம். இதுமட்டுமல்லாமல் பித்தளை, தாமிரம், தங்கம் ஆகிய வேலைப்பாடுகளைக் கொண்ட 232 பொருள்களை தொல்லியல் துறை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்” என்று தெரிவித்திருக்கிறார்கள் தொல்லியல் துறை அதிகாரிகள்.

இந்தச் சிலைக்கடத்தலுக்குக் காரணமான சுபாஷ் கபூர் 2011-ம் ஆண்டு ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுபாஷ் கபூர் சேமிப்புக் கிடங்கிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் பற்றியும் தற்போது அதிகாரிகள் சோதனையிட்டிருப்பது பற்றியும் `இந்தியா பிரைட் பிராஜெக்ட்’ தன்னார்வ அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரான சிங்கப்பூர் விஜயகுமாரிடம் பேசினோம்.  

விஷ்ணு

``சுபாஷ் கபூர் சேமிப்புக் கிடங்கில் அமெரிக்க அரசால் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை மீட்க ஏழு வருடங்களுக்குப் பிறகு நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். தற்போதுதான் இரண்டு பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவுக்குச் சென்று, ஒரு வாரம் தங்கி சோதனையிட்டு சுமார் 100 சிலைகளை அடையாளம் கண்டுபிடித்திருக்கிறார்கள். பிற சிலைகளை எப்போது அடையாளம் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை. பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது அமெரிக்க அரசு திருப்பிக் கொடுப்பதாகச் சொன்ன 200 சிலைகளில்தான் 100 சிலைகளை அடையாளம் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2700-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய சின்னங்களில் நூறு பொருள்களைக் கண்டுபிடிக்கவே ஏழு வருடங்கள் ஓடிவிட்டன. ஒவ்வொரு குழுவாகச் சென்று அடையாளம் காண முயல்வதை விடவும், சுபாஷ் கபூர் கலைக்கூடத்தில் கைப்பற்றப்பட்ட சிலைகள் மற்றும் பாரம்பர்ய பொருள்களின் புகைப்படங்களை இந்தியாவிலிருக்கும் அனைத்துத் தொல்லியல் துறை வட்டங்களுக்கும் அனுப்பி, அவற்றை அடையாளம் கண்டுபிடித்து, எஞ்சிய சிலைகளையும் மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்தச் சிலைகள் எப்படி இந்தியாவை விட்டு வெளியேறின, அதற்கு உதவியவர்கள் யார் யார் என்று விரிவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடத்தப்பட்ட சிலை

ஒவ்வொரு சிலையையும் மீட்டு வரும்போது, விழா நடத்துவதில் எந்தவித நன்மையும் இருக்கப்போவதில்லை. அந்தச் சிலைகள் எப்படி இந்தியாவைவிட்டு வெளியே சென்றன என்பதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மேலும் சிலைகள் திருடுபோவதைத் தடுக்க முடியும்...” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்