எந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்? #Astrology | What are the effects of sasha yoga in Vedic astrology?

வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (12/05/2019)

கடைசி தொடர்பு:14:43 (13/05/2019)

எந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்? #Astrology

எந்தெந்த லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சசயோகம் கிடைக்கும்? #Astrology

வகிரகங்களில் சனிபகவான் நீதிமான் என்று போற்றப்படுபவர். ஒவ்வொருவருக்கும் அவரவர் கர்மவினைகளுக்கேற்ப பலன்களைத் தவறாமல் வழங்கும் ஆற்றல் பெற்றவர். பஞ்ச மகா புருஷ யோகங்களில் சனி பகவானால் ஏற்படக்கூடிய யோகம், 'சசயோகம்' ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் சனி எந்த நிலையிலிருந்தால் அவருக்கு சசயோகம் ஏற்படும் என்பது பற்றியும், அந்த யோகத்தால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்தும் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி கூறிய விளக்கங்கள் இங்கே உங்களுக்காக...

சனி வழங்கும் சசயோகம்

''வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே இரண்டு வெவ்வேறு எதிரெதிர் நிலைகளாகவே பரம்பொருளால் நமக்குத் தரப்பட்டிருக்கின்றன. ஆண் - பெண், இன்பம் - துன்பம், நல்லவை - கெட்டவை, இரவு - பகல், இருள் - ஒளி என அனைத்துக்கும் பரம்பொருள் வெவ்வேறு எதிர்நிலைகளைக் கொடுத்திருப்பதைப்போல, கிரகங்களிலும் சுப, அசுபக் கிரகங்கள் என்று இரு வேறு எதிரெதிர் நிலைகள் இருக்கின்றன.

ஒரு கிரகம் அசுப கிரகம் என்று அழைக்கப்பட அடிப்படைக் காரணம், அந்தக் கிரகத்தால் மனிதர்களுக்குக் கெடுதல்கள் ஏற்படுவதுதான்.  

கிரகங்கள்

சனிகிரகத்தை சமஸ்கிருத மொழியில், 'மெதுவாக நகர்பவர்' என்ற அர்த்தத்தில் ‘சனைச்சர’ என்று அழைக்கிறார்கள். 'சனியைப்போல் கெடுப்பாருமில்லை, சனியைப்போல் கொடுப்பாருமில்லை' என்று சொல்வார்கள். சனி பகவான் கிரகங்களில் நீதியை நிலைநாட்டு பவராக இருக்கிறார். அறத்துடன் வாழும் நல்லவர்களுக்கு அவர் எந்தக் கெடுதலும் செய்வதில்லை. அறமற்று நடப்பவர்களை அவர்களுக்கான தண்டனைக் காலம் வரும்போது அதை நிறைவேற்றுகிறார்.

இயற்கையிலேயே அசுப கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவற்றில் அசுப பலன்களைத் தருவதில் சனியே முதலிடம் வகிக்கிறார். இந்த நால்வரில் சனி ஒருவர் மட்டுமே முழுவதும் கொடிய காரகத்துவங்கள் உடையவர். ஒரு மனிதன் வாழ்வதற்கு ஆதாரமான ஆயுளுக்கும் இவரே காரணமானவர்'' என்ற ஆதித்ய குருஜி, தொடர்ந்து இந்த சசயோகத்தால் யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும் என்பது பற்றியும் விளக்கமாகக் கூறினார்.

''சர லக்கினங்கள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம், ஸ்திர லக்கினங்களான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய எட்டு லக்கினங்களுக்கு மட்டுமே சனி தரும் சசயோகம் செயல்படும். உபய லக்கினங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியோருக்கு சச யோகம் பலன் தராது. 

சனிகிரகம்

இந்த யோகம் அமையப் பெற்றவர்கள் எதிலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செய்யக்கூடிய வேலைகளில் ஈடுபடுவார்களாக இருப்பார்கள். கார், ரேடியோ, தொலைக்காட்சி, கடிகாரம் போன்றவற்றைச் சரிசெய்யும் மெக்கானிக்குகள், சிற்பிகள், ஓவியர்கள் இவர்களெல்லாம் பெரும்பாலும் சசயோகம் அமையப்பெற்றவர்களாக இருப்பார்கள். லக்கினத்திலிருந்து 1, 4, 7,10 ஆகிய இடங்களில் சனி ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்களுக்கு இந்த சசயோகம் சிறப்பாக வேலை செய்யும். 

இந்த யோகம் அமையப்பெற்றவர்கள், எதிலும் சிந்தித்துச் செயல்படக்கூடியவர்களாகவும் நேர்மையாளர்களாகவும் இருப்பார்கள். இவர்களை அவ்வளவு எளிதாக வசப்படுத்திவிட முடியாது. எவராலும் இவர்களை விலை கொடுத்து வாங்கிவிட முடியாது.

தன்னலத்துடன் சிந்தித்துச் செயல்படுவதைவிட பொது நலன் கருதியே செயல்படுவார்கள். இதனால் மக்கள் செல்வாக்குப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். மேலும் மக்களோடு மக்களாகக் கலந்து பழகுவார்கள். பொது மக்களின் ஆதரவை ஒருவர் பெறவேண்டுமென்றால், கண்டிப்பாக இந்தச் சசயோகம் அவர் ஜாதகத்தில் அமையப் பெற்றிருக்க வேண்டும்.

இரும்பு, பெட்ரோல், மதுபானம், ஆசிட் போன்ற பொருள்களை விற்று அதில் நல்ல லாபம் ஈட்டுவார்கள். உழைப்புக்கு அஞ்சாதவர்களாகவும் மக்கள் செல்வாக்கு மிக்கவர்களாகவும் திகழ்வார்கள். இவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்'' என்கிறார் ஆதித்ய குருஜி.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்