சாம்பல் பூசிய ஜடாமுனி லகுலீசர்; வளமையின் சின்னமாகப் பிள்ளையார்... 8-ம் நூற்றாண்டுச் சிற்பங்கள் | Found new laguleesar statue near kallakkurichy

வெளியிடப்பட்ட நேரம்: 19:54 (13/05/2019)

கடைசி தொடர்பு:19:54 (13/05/2019)

சாம்பல் பூசிய ஜடாமுனி லகுலீசர்; வளமையின் சின்னமாகப் பிள்ளையார்... 8-ம் நூற்றாண்டுச் சிற்பங்கள்

ள்ளக்குறிச்சி மாவட்டம், வரஞ்சரம் கிராமத்தில் உள்ள பழைமையான பசுபதீஸ்வரர் கோயிலில், சேலம் வரலாற்றுக் குழுவைச் சேர்ந்த ஆறகழூர் பொன்.வெங்கடேசன் மற்றும் ஆய்வாளர் வீரராகவன் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில், 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட லகுலீசர் மற்றும் கதிர் பிள்ளையார் சிற்பத்தைக் கண்டறிந்துள்ளனர். 

லகுலீசர்

சைவத்தின் ஒரு பிரிவான பாசுபதம், குஜராத் மாநிலம் காயாரோஹனம் எனும் இடத்தில் லகுலீசர் என்பவரால் தொடங்கப்பட்டது. சிவபெருமானின் 28-வது அவதாரமாகக் கருதப்படுபவர் லகுலீசர். அவரது சீடர்கள் கௌசிகர், கார்கி, கௌதமன் ஆகியோரால் இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட பாசுபதம், தமிழகத்தில் கி.பி 3-ம் நூற்றாண்டுக்குப் பிறகு வேர்விடத் தொடங்கியது. லகுலீசரின் சமயத் தத்துவங்கள் பாசுபத சைவம் என்று பெயர் பெற்றன. இதைப் பின்பற்றுபவர்கள், விபூதியை உடல் முழுவதும் பூசிக்கொள்வர். சாம்பலில் படுத்துறங்கி, சாம்பலில் நடனமாடி, மாலைகளை அணிந்துகொள்வர். லகுலீச பாசுபத சைவம் சார்ந்த கோயில்களில்தான் இவர்கள் தங்குவார்கள். தமிழகத்தில், இதுவரை சுமார் 20 லகுலீசர் சிற்பங்கள்தான் கிடைத்துள்ளன. அவற்றில் பத்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில்தான் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில், புதிதாக வரஞ்சரம் லகுலீசர் சிற்பமும் இணைந்துள்ளது. 

நெற்கதிர் பிள்ளையார்

இதுகுறித்து, ஆறகழூர் பொன்.வெங்கடேசன், “கள்ளக்குறிச்சி அருகே, கோமுகி ஆற்றுக்குத் தெற்கே வரஞ்சரம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்குதான் பாலாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகளுக்கு முன், செங்கல் தளியாக இருந்த கோயில், 11-ம் நூற்றாண்டில் கற்கோயிலாக மாற்றிக் கட்டப்பட்டது. அப்போது, செங்கல் தளியில் இருந்த லகுலீசர் சிற்பமும் கதிர் விநாயகர் சிற்பமும் கற்றளியில் தனி மாடத்தில் வைக்கப்பட்டு, இன்று வரை வழிபாட்டில் இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் லகுலீசர் சிற்பம் ஜடாமுனி என்ற பெயரில் வழிபாட்டில் உள்ளது. தனி மாடத்தில் அமர்த்தப்பட்டுள்ள லகுலீசர்,  2 அடி உயரமும் முக்கால் அடி அகலமும் உள்ள ஒரு பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த இந்தச் சிற்பம், தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட லகுலீசர் சிற்பங்களிலேயே மிக அழகிய சிற்பம். இங்குதான் நெற்கதிர் வைத்திருக்கும் கதிர் பிள்ளையார் சிற்பமும் காணப்பட்டுள்ளது. பிள்ளையார், பெருந்தெய்வமாக உருவெடுக்காத காலகட்டத்தில் வளமையின் சின்னமாகக் கருதப்பட்டு, கையில் நெற்கதிருடன் வழிபாட்டில் இருந்துள்ளார். 

பசுபதீசுவரர் கோயில்

மேலும், கி.பி1157-ம் ஆண்டு, இரண்டாம் ராஜராஜனின் 11-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று இந்தக் கோயிலில் காணப்படுகிறது. மிலாடாகிய ஜனநாத வளநாட்டு மேல் ஆற்றூர் கூற்றத்தில் உள்ள திருவலஞ்சரம் என இவ்வூரைக் குறிப்பிடுகிறது. 79 நாடுகளைச் சேர்ந்த சபையோர் திருவலஞ்சரத்தில் ஒன்றுகூடி, 11 நாட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த மலையமான், நத்தமான் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இடங்கை என்ற பிரிவில் இணைந்து, அந்தப் பிரிவுக்கு கண்ணும் கையுமாக துணை நிற்போம் என உறுதி அளித்துள்ளனர். 12 -ம் நூற்றாண்டில், ஒருவகை சமூக ஒருங்கிணைப்பு நிகழ்ந்ததற்குச் சான்றாக இந்தக் கல்வெட்டு திகழ்கிறது. இப்பகுதியில், மேலும் ஆய்வுகள் செய்தால், இன்னும் பல வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க