முருகனுக்கு உகந்த கடம்ப மலர் சீஸன்... சஞ்சீவிக் காற்றைச் சுவாசிக்க பழநியில் குவியும் பக்தர்கள்! | Kadamba flowers and palani temple

வெளியிடப்பட்ட நேரம்: 19:46 (14/05/2019)

கடைசி தொடர்பு:11:21 (15/05/2019)

முருகனுக்கு உகந்த கடம்ப மலர் சீஸன்... சஞ்சீவிக் காற்றைச் சுவாசிக்க பழநியில் குவியும் பக்தர்கள்!

"குழந்தை பாக்கியம் இல்லாதவங்க இந்தப் பதினைந்து நாளும் தொடர்ந்து கிரிசுத்தி வருவாக. அப்படிச் சுத்தி வர்றப்ப, இங்க வீசும் சஞ்சீவி காத்தால குழந்தை பிறக்கும்னு நம்பிக்கையோட சொல்லுவாங்க..."

முருகனுக்கு உகந்த கடம்ப மலர் சீஸன்... சஞ்சீவிக் காற்றைச் சுவாசிக்க பழநியில் குவியும் பக்தர்கள்!

துரையை மட்டுமன்றி, பழநி மலையையும் `கடம்ப வனம்' என்று சொல்வதுண்டு. எழில்மிகு பழநி மலையில் வருடத்துக்குப் பதினைந்து நாள்கள் மட்டுமே கடம்ப மலர்கள் பூத்துக் குலுங்கும். இந்தக் கடம்ப மலரின் நறுமணம் பல்வேறு மருத்துவக் குணங்கள் உடையது எனவும், இந்த மலர்களைத் தழுவி வீசும் காற்றினை `சஞ்சீவி காற்று' என்றும் சொல்கின்றனர் பழநி வாழ் மக்கள். 

பழநி கடம்ப மலர்

ஞானப்பழம் கொண்டு ஈசன் நடத்திய திருவிளையாடலால் கோபம் கொண்டு கயிலை மலையை விட்டு தெற்கு நோக்கி வந்துவிட்டார் பாலமுருகன். அப்போது, அகத்தியர் கொடுத்த சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளைக் காவடியாக தன் தோள்களில் எடுத்து வந்த இடும்பன், சிறிது நேரம் ஓய்வெடுக்க எண்ணி பழநியில் மலைக் காவடிகளை இறக்கி வைத்தான். கோபத்தில் வந்த பாலமுருகன், இடும்பன் இறக்கிவைத்த இரு மலைகளுள் கடம்ப மரங்கள் மிகுந்து, பூத்துக் குலுங்கும் அழகிய சக்திகிரியையே தன் இருப்பிடமாகக் கொண்டான். 

முருகனுக்கு மட்டுமன்று திருமாலுக்கும் பூஜிக்க உகந்த மலர் கடம்ப மலர். கோடைக்காலத்தில் மட்டுமே மலரக்கூடியது. இந்தக் கடம்ப மரத்தின் மலர்களையும் இலைகளையும் மாலையாகத் தொடுத்து முருகனுக்குச் சாத்துவது விசேஷமானது. 

மேலும் கடம்ப மரத்துக்கும் முருகனுக்குமான தொடர்பை சங்கப் பாடல்கள் பலவற்றிலும் காணலாம். `கடம்பமர் நெடுவேள்' என்று பெரும்பாணாற்றுப்படையும், `கடம்பின் சீர்மிகு நெடுவேள்' என்று மதுரைக் காஞ்சியும் சுட்டுகின்றன. கடம்ப மலர்களால் கட்டப்பட்ட மாலைகளை விழாக்களின்போது முருகனுக்கு அணிவிக்கப்படும் செய்தி அகநானூறு, புறநானூறு ஆகிய சங்க இலக்கியங்களில் தெரிவிக்கப்படுகிறது. 

பழநி முருகன்

பழநியில், சித்திரை மாதத்தில் வரும் அக்னி நட்சத்திர நாள்களில் கிரிவலம் வருவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. காரணம், அந்த நாள்களில்தான் கடம்ப மரங்கள் பூத்துக் குலுங்கும். கடம்ப மலர்களின் வாசம் இந்தக் காலகட்டத்தில் காற்றில் கலந்து வீசும். கிரிவலம் செல்பவர்கள் அதை நன்கு அனுபவிக்கமுடியும். இந்த நாள்களில், பழநி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும், கிரிவலம் வரும் பக்தர்களும் கடம்ப மலர் அணிந்து செல்வதையும் காணமுடியும்.

பழநியில் மலர்கள் விற்கும் முதியவர் ஒருவரிடம் பேசினோம்.

``நான் இங்க பல வருசமா, கடம்பப் பூ கட்டி விக்கிறேன். சித்திரை மாசத்துல பதினைஞ்சு நாள் மட்டும்தான் இந்தப் பூ கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவங்க இந்தப் பதினைந்து நாளும் தொடர்ந்து கிரிசுத்தி வருவாக. அப்படிச் சுத்தி வர்றப்ப, இங்க வீசும் சஞ்சீவி காத்தால குழந்தை பிறக்கும்னு நம்பிக்கையோட சொல்லுவாங்க. கடம்பப் பூவுல பல வகை இருக்கு. ஆனா, சாமிக்கு வைக்குறது வெள்ள நெறத்துல பூக்குற கடம்பப் பூதான். இந்த வருசம் மழை நல்லா பெய்யாததால பூ சரியா பூக்கல” என்றார்.

கடம்ப மலர்

அங்கு பூ வாங்க வந்த பக்தர்கள் சிலரிடமும் பேசினோம்.

``நாங்க வருடா வருடம் இந்த மாசத்துல கோயிலுக்கு வர்றோம். கிரிவலம் வர்றச்சே வீசும் சஞ்சீவிக் காத்து பல நோய்களையும் போக்கும்னு சொல்றாங்க. இந்தப் பூக்களைத் தலையில் வச்சுக்கிடறதால, தலைவலி, நுரையீரல் சம்பந்தமான நோய்கள்லாம் குணமாகும்னு சொல்றாங்க. அதனால, ஒவ்வொரு வருஷமும், சம்மர் சீஸனைத் தவற விடாமல் பழநிக்கு வந்திருவோம்” என்றனர்.

கடம்ப மலர்களின் மருத்துவக் குணம் குறித்து சித்த மருத்துவர் மகேந்திரனிடம் பேசினோம்.  

``காப்பி செடி குடும்பத்தைச் சேர்ந்தது கடம்ப மரம். இதன் அனைத்துப் பாகங்களிலும் மருத்துவக் குணம் உண்டு. அதிலும் பூக்களின் நறுமணம் நுரையீரல் சார்ந்த நோய்களுக்குச் சிறந்த மருந்தாகிறது. மன அமைதியையும் ஏற்படுத்தக்கூடியது. தலையில் சூடிக் கொள்ளும்போது உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும். கடம்ப மரத்தின் பட்டைகளும் இலைகளும் வயிறு தொடர்பான நோய்களுக்கு மருந்தாக அமையும். இதன் விதையும் வேரும்கூட இயற்கை மருத்துவத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன” என்றார்.  

இந்தக் கோடையில் பழநிக்குச் சென்று கடம்பனின் அருள் பெறுவதுடன், பூத்துக்குலுங்கும் கடம்ப மலர்களையும் கண்டு மகிழ்ந்து, ஆரோக்கியம் பெறலாம். 


டிரெண்டிங் @ விகடன்