உங்கள் ராசிக்கு வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறதா? #Astrology | Astrological Remedies For getting successful career in Abroad

வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (19/05/2019)

கடைசி தொடர்பு:13:21 (19/05/2019)

உங்கள் ராசிக்கு வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறதா? #Astrology

உங்கள் ராசிக்கு வெளிநாடு செல்லும் யோகம் இருக்கிறதா? #Astrology

வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்பது, வெளிநாடுகளில் பணிபுரிவது என்பவை இன்று பலரின் கனவாக இருந்து வருகின்றன. பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளைச் சர்வ தேசத் தரத்திலான பள்ளிகளில் சேர்த்துப் பயிற்றுவிப்பதையும் பார்க்க முடிகிறது. ஜோதிடப்படி ஒருவருக்கு வெளிநாடு செல்லும் யோகம் எப்படி அமையும் என்பது பற்றி ஜோதிடக்கலை அரசு ஆஸ்ட்ரோ குருஜியிடம் கேட்டோம். 

"பக்கத்து நகரங்களுக்குச் சென்று வேலை பார்க்கப் பிடிக்காமல், சொந்த ஊரில் அதுவும் குறைவான ஊதியத்தில் பணிபுரியும் நிலை முன்பிருந்தது. ஆனால், தற்போது அப்படி இல்லை. இன்று வீட்டுக்கொருவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்கிற அளவு நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கனடா, அமெரிக்கா, துபாய், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா எனப் பல நாடுகளுக்கும் சென்று பணிபுரிகிறார்கள். வெளிநாட்டிலிருந்தவாறே மெயில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், மூலம் எல்லாரையும் செல்போனிலேயே எளிதாகத் தொடர்புகொள்ள முடிகிறது. அந்த அளவுக்கு விஞ்ஞானமும் அதன் சாதனங்களும் வளர்ச்சியடைந்திருக்கின்றன. 

வெளிநாட்டுயோகம்

வெளிநாட்டுக்குச் சென்று பணிபுரிபவர்களில் இரண்டுவிதமானவர்கள் இருக்கிறார்கள். அங்கே பத்து பதினைந்து ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு இங்கு வந்து செட்டில் ஆகிறவர்கள் ஒரு ரகம். அங்கேயே குடியுரிமை வாங்கி அங்கேயே மனைவி மக்களுடன் செட்டிலாகிறவர்கள் இன்னொரு ரகம். ஜோதிட ரீதியாக வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு வாய்க்கும் என்று பார்ப்போம்.  
 
ஜோதிட சாஸ்திரப்படி எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும் சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளிலும் கிரகங்களிருந்தால் ஜாதகர் வெளிநாடு செல்லும் யோகத்தைப் பெறுவார். அவற்றிலிருக்கும் கிரகங்களின் திசை நடக்கும்போது ஜாதகர் வெளிநாட்டுக்குச் செல்வார். குறைந்தபட்சம் சுற்றுலா பயணியாகவாவது ஜாதகர் வெளிநாடுகளுக்குச் சென்று வருவார்.

ராசிகள்

தாய்நாட்டை விட்டுப் பிரிந்து ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள, அவருடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 8 - மிடமும், 12 - மிடமும் சுபத்துவம் பெற்றிருக்கவேண்டும். ஜாதகருக்கு 8 - ம் வீட்டு அதிபதியின் திசையோ, 12 - ம் வீட்டு அதிபதியின் திசையோ நடக்கும்போது ஜாதகர் வெளிநாடு செல்வார். ஜாதகர், தாய்நாட்டைப் பிரிந்து வெளிநாட்டில் நீடித்து வசிப்பதை 8 - மிடமும், அவர் அங்கிருந்து திரும்புவதை 12-மிடமும் முடிவு செய்கின்றன. 

இதில், சாயா கிரகங்களான ராகு கேது ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, கேது மாறுபட்ட சிந்தனைக்கும் மாற்றங்களுக்கும் காரகத்துவம் பெற்றவர். ராகு திசை, கேது திசை நடக்கும்போது பலரும் வெளிநாடு செல்வதைப் பார்க்க முடிகிறது. ஜாதகக் கட்டத்தில் தொழில்ஸ்தானமான 10 - மிடமும், கடன், பகை, நோய்க்கு காரகத்துவம் பெற்ற 6 -மிடமும் ஜாதகர் வெளிநாட்டில் ஏற்க இருக்கும் தொழிலுக்கு காரணமாக அமைகின்றன.   

காளஹஸ்தி

ஒரு சிலர், 'சொந்த ஊரிலேயே இருந்திருக்கலாமே' என்று நினைக்கும் அளவு, வெளிநாட்டில் கஷ்டங்களை அனுபவிப்பார்கள். அதற்குக் காரணம் 8 - மிடமும் 12- மிடமும் சுபர்களின் பார்வை பெறாமல் சனி, செவ்வாய் போன்ற பாபர்களின் பார்வை பெற்றிருந்தால், இத்தகைய நிலை ஏற்படும்.

பரிகாரம்: வெளிநாட்டில், வெளியில் சொல்ல முடியாத நிலையில் கஷ்டப்படுகிறவர்கள், ராகு-கேதுவுக்குரிய ஸ்தலங்களில் முக்கிய ஸ்தலமான காளஹஸ்தி தெய்வமான காளத்திநாதரை மனதளவில் வேண்டிக்கொண்டால் அவர்களின் பிரச்னைகள் விலகும். தாயகத்துக்கு வரும்போது தங்களின் பிரார்த்தனைகளைச் செலுத்தலாம். வெளிநாடு செல்லத் தடங்கல்கள் ஏற்படுபவர்களும் இங்கு வந்து வணங்கினால், அவர்களின் வெளிநாட்டுப் பயணம் சிறப்பாக அமையும்'' என்று கூறினார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்