சமயப் பூசலால் 7 - ம் நூற்றாண்டில் கழுவேற்றட்டவரின் நடுகல்! - திருப்பத்தூரில் கண்டுபிடிப்பு | New Tombstone found near vellore

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (22/05/2019)

கடைசி தொடர்பு:17:40 (22/05/2019)

சமயப் பூசலால் 7 - ம் நூற்றாண்டில் கழுவேற்றட்டவரின் நடுகல்! - திருப்பத்தூரில் கண்டுபிடிப்பு

வேலூர்  மாவட்டம், திருப்பத்தூரில் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கழுவேற்ற நடுகல் ஒன்று புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் மோகன்காந்தி தலைமையில், ஆய்வு மாணவர்கள் அடங்கிய குழுவினர் மேற்கொண்ட ஆய்வுப்பணியில் இந்த நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் இருக்கும் தீப்பாஞ்சியம்மன் கோயிலுக்கு வெளியே பராமரிப்பின்றி இருக்கும் இந்த நடுகல் 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. 

நடுகல்

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட மோகன்காந்தி, ``இந்த நடுகல் பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும். கி.பி. 7-ம் நூற்றாண்டில், சமயப் பூசல் காரணமாகக் கழுவேற்றம் செய்யப்பட்டவருக்காக எடுக்கப்பட்ட நடுகல் இது. இந்த நடுகல்லில் வலது கை ஆசீர்வாதம் செய்வது போன்றும் இடதுகை இடது தொடையில் வைத்த நிலையிலும் காணப்படுகிறது” என்றார்.

கழுமரம்

பேராசிரியர் பிரபுவிடம் பேசினோம். ``கழுவேற்றம் (impalement) என்பது மரணதண்டனையை நிறைவேற்றும் முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனைப் பிடித்து நிர்வாணமாக்கி, குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயை கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவர். உடலின் எடையால், எண்ணெய் தடவிய கூர்முனையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலை துளைத்துக் கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலுக்குள் ஏற வலி தாங்காமல் குற்றவாளி  துடிதுடித்து மடிந்து போவான். சாதாரணமாக இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து புதைப்பது அல்லது எரிப்பது வழக்கம். ஆனால், கழுவேற்றம் மூலம் கொள்ளப்பட்டவர்களை அப்படியே விட்டு பறவை, நாய் மற்றும்  நரிகளுக்கு இரையாக்கிவிடுவார்கள். மரத்தினால் செய்யப்பட்ட கழுமரத்தைப்போலவே, அந்தக் காலத்தில் இரும்புக் கழுவும் இருந்தது. அது வெங்கழு என்று அழைக்கப்பட்டது. சமயப் பூசலை வெளிப்படுத்தும் கழுவேற்றம் நடுகல் அரிதானது. தீப்பாஞ்சியம்மன் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுகல் பராமரிப்பின்றி உள்ளது. இதுபோன்ற வரலாற்றைத் தெரிவிக்கும் நடுகற்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.