`நெருப்பு வழிபாடு இனி டிஜிட்டல் மயம்’ - பார்சி இன மக்களின் அசத்தல் முயற்சி | Plug and pray: Parsi priests go high tech

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (23/05/2019)

கடைசி தொடர்பு:21:00 (23/05/2019)

`நெருப்பு வழிபாடு இனி டிஜிட்டல் மயம்’ - பார்சி இன மக்களின் அசத்தல் முயற்சி

லகின் பழைமையான இனங்களுள் பார்சி இனமும் ஒன்று. பாரசீகம் எனப்படும் தற்போதைய இரான் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பார்சிக்கள், இன்று  உலகம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள். பல்வேறு நாடுகளில் சிதறி வாழ்ந்தாலும் அவர்கள் தங்களின் பழைமையான வழிபாட்டுச் சடங்கை விட்டுக்கொடுக்காமல், ஒரே சமுதாயமாக ஒற்றுமையுடன் வாழ்பவர்கள். அப்படிப்பட்ட பார்சி இன மக்கள் தங்களின் பழம்பெருமைச் சடங்குகளையும், வழிபாட்டு முறைகளையும் பாதுகாக்க, அவற்றை டிஜிட்டல் மயமாக்கியிருக்கிறார்கள். இதன் மூலம்  வருங்கால சந்ததியினர், பழைமையான வழிபாட்டுப் பாடல்களைக் கேட்டு, தம் பாரம்பர்யத்தை மறக்காமல் வாழ இயலும் என்று நம்புகிறார்கள். 

பார்சி வழிபாடு

பார்சி இன மக்களின் கடவுள்  `அஹுரா மாஜ்டா’ என்பவர். `அஹுரா மாஜ்டா' என்றால் `மெய் அறிவு கொண்டவன்’ என்று பொருளாகும். இவர்களின் வழிபாட்டுச் சடங்கில் நெருப்பு மிக முக்கியமானது. பார்சிக்கள், பாரசீகத்திலிருந்து நெருப்பைக் கொண்டு வந்து அணையாமல் பாதுகாத்து வழிபடுவார்கள். எரிந்துகொண்டிருக்கும் நெருப்புக்கு முன் நின்று பார்சி மொழியில் எழுதப்பட்ட புனித நூலான அவஸ்தாவை வாசித்து வழிபடும் பழக்கமுடையவர்கள் இவர்கள். அவர்களின் வழிபாட்டுச் சடங்குகளும், புனித நூலான அவஸ்தாவும் பழைமையான பாரசீக மொழியில் இருப்பதால் அதை வாசிக்கத் தெரிந்தவர்களின் துணையில்லாமல் இறைவழிபாட்டு சடங்கை மேற்கொள்ள முடியாது. அதனால், பார்சிக்களின் பழைமையான வழிபாட்டுச் சடங்குகளை மக்கள் மறந்துவிடக் கூடாதென்று அவற்றை அந்த மதத் துறவிகளின் உதவியுடன் டிஜிட்டல் மயமாக்கியிருக்கிறார்கள்.

வழிபாடு

இந்தத் திட்டத்தை முன்னெடுத்த சரோஷ் ஐபரா கூறுகையில், ``சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் கற்றுக்கொள்ளும்படி, வழிபாட்டுப் பாடல்களை, ஒலி - ஒளி வடிவில் பதிவு செய்திருக்கிறோம். மூன்று வரிப் பாடல்களைக் கொண்ட சிறிய பாடல்கள் முதல் ஏழு மணி நேரம் ஒலிக்கும் நீண்ட பாடல்கள்வரை என்று, நூற்றுக்கும் மேற்பட்ட வழிபாடுகளைப் பதிவு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார். 

இந்த முயற்சியின் மூலம் பழைமையான, பாரம்பர்ய வழிபாட்டுச் சடங்குகளுக்குப் புத்துணர்வு அளிக்க முடியும் என்று கருதுகிறார்கள் பார்சிக்கள்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க