40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதர்... காஞ்சியில் கோலாகல ஏற்பாடுகள்! | Why is Athi Varadar raising once in 40 years at Kanchipuram?

வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (27/05/2019)

கடைசி தொடர்பு:18:53 (27/05/2019)

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதர்... காஞ்சியில் கோலாகல ஏற்பாடுகள்!

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதர்... காஞ்சியில் கோலாகல ஏற்பாடுகள்!

காஞ்சி மாநகரமே ஒரு பெருந்திருவிழாவுக்காகத் தன்னைப் பல வகைகளிலும் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆம். கோயில்கள் சூழ்ந்த காஞ்சியில் எண்ணற்ற திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும், அவற்றையெல்லாம்விடப் பல வகைகளிலும் சிறப்புகள் கொண்ட ஒரு விழா அது. அதுவும் நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா என்றால் ஏற்பாடுகளுக்கும் கொண்டாட்டத்துக்கும் கேட்கவா வேண்டும்?!

40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே தரிசிக்கக் கிடைக்கும் அத்திவரதரின் தரிசனம்தான் அது! வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் தரப்போகும் அந்த அற்புதத் திருவிழாவை காஞ்சி மக்கள் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் பக்தர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

வரதராஜ பெருமாள் கோயில்

காஞ்சியின் பல்வேறு சிறப்புகளில் ஒன்று வரதராஜ பெருமாள் கோயில். திருக்கச்சி, அத்திகிரி என்று பெருமையுடன் அழைக்கப்படும் தலம் இது. கோயிலில் மூலவர் தேவராஜ பெருமாளும் பெருந்தேவி தாயாரும் அருள்புரிகிறார்கள். பக்தர்கள் கேட்கும் வரங்கள் அனைத்தையும் அளிப்பவராகையால் இந்தப் பெருமாள், `வரதர்’ என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். தற்போது, கோயில் கருவறையில் வழிபடப்படும் தேவராஜ பெருமாள் ஆதிமூலவர் கிடையாது. இந்தத் தலத்தின் ஆதி மூலவராக இருந்த அத்திவரதர், அனந்தசரஸ் என்ற கோயில் தீர்த்தக் குளத்தின் நடுவிலுள்ள மண்டபத்தினடியில், வெள்ளிப் பேழையில் சயனக் கோலத்தில் உள்ளார். 

நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்புரிவார். முதல் 24 நாள்கள் சயனக் கோலத்திலும் அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் காட்சி தருவார். கடைசியாக, 1979-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி எழுந்தருளிய அத்திவரதர் இந்த ஆண்டு ஜூலை-1 ம் தேதி எழுந்தருளுகிறார். 

திருக்குளம்

ஆதி அத்திவரதர் கோயிலுக்குள் மூழ்கியிருப்பது குறித்து பல்வேறு விதமாகச் சொல்லப்படுகிறது. ஒருமுறை சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தன்று பெருமாள் தேவர்கள் அனைவருக்கும் காட்சி தந்தார். அந்தக் காட்சியைக் கண்ட பிரம்மதேவன், பெருமாளின் திருவடிவத்தை மிகப்பெரிய அத்திமரத்தில் வடித்து, பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரம்மதேவன் வழிபட்ட மூர்த்தம்தான் அத்திவரதர். இந்த அத்திவரதரை இந்திரனின் தேவலோக யானையான ஐராவதம் சுமந்துவந்து மண்ணுலகில் நிலைநிறுத்திவிட்டு அத்திகிரி, வேழமலை எனும் பெயரில் குன்றாகிப்போனது. அத்திகிரியில் எழுந்தருளிய பெருமாள் ஞானியர்களுக்கும், தேவர்களுக்கும் வேண்டிய வரங்களை அப்படியே அளித்ததால் அவர் `வரதர்' என்று போற்றப்பட்டார்.

பிரம்மதேவன் ஒருமுறை யாகம் செய்து அத்திவரதரை வழிபட்டார். அப்போது, பிரம்மனின் யாகத் தீயினால் அத்திவரதரின் உடல் பின்னப்பட்டுவிட்டதாம். யாகத் தீயின் வெப்பத்தைத் தகிக்கவே அத்திவரதர் தீர்த்தக் குளத்தில் வாசம் செய்கிறார். அத்திவரதர் கலியுகம் முழுவதுக்கும் அனந்தசரஸ் குளத்துக்குள் குளிர்ந்த நிலையில் அருள்புரிவார். அதுவரை இந்தக் குளம் வற்றவே வற்றாது என்றும் சொல்லப்படுகிறது. இதுவரை, மிகக் கடுமையான கோடைக்காலத்தில்கூட கோயில் திருக்குளம் வற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை கோயில் குளத்திலிருக்கும் நீரை வெளியேற்றியே அத்திவரதரை வெளியே கொண்டு வந்து வழிபடுவார்கள். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒருமுறை அத்திவரதரை தரிசித்தாலே வைகுண்ட பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதிகம். 

வரதராஜர்

இந்த அத்திவரதர் நீருக்குள் வாசமிருந்து சயனக் கோலத்தில் காட்சியளிப்பது குறித்து வேறு கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் கோயில் சிலைகள் பல ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அப்போது, அத்தி வரதரையும் நாடு கடத்தி விடுவார்களோ எனும் அச்சத்தில் மக்கள் அத்திவரதரைக் குளத்தில் மூழ்க வைத்துப் பாதுகாக்க முடிவெடுத்ததாகவும், அவருக்கு பதிலாகக் கருவறையில் பிரதிஷ்டை செய்ய, பழைய சீவரத்தில் செய்யப்பட்ட பெருமாள் திருவுருவச் சிலையை காஞ்சிக்குக் கொண்டுவந்து வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இப்போதும் வருடத்துக்கு ஒருமுறை வரதராஜ பெருமாள் காஞ்சியிலிருந்து பழைய சீவரத்துக்கு பரிவேட்டை உற்சவமாகச் சென்று வருகிறார். 

40 வருடங்கள் கழித்து எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிக்கும் அத்திவரதர் பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்றுவருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து அத்திவரதர் தரிசனத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து கடந்த 5 - ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் விழாக் குழு அமைக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம், காவல்துறை ஆகியவை இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளன. போக்குவரத்து மாற்றம், குடிநீர் வசதி, கழிவறை வசதி, 108 ஆம்புலன்ஸ் வாகனத்துடன் கூடிய மருத்துவ வசதி, பக்தர்கள் தங்குவதற்கான இட வசதி, தீயணைப்புத் துறை, மின்சார வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் முடிவு வெளியான நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இணைக்கப்பட உள்ளார்கள்.

அத்திவரதர்

தற்போது பொறியாளர்கள் அடங்கிய பத்துப் பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குளத்தில் எவ்வளவு சேறு உள்ளது, குளத்தில் உள்ள நீரை எப்படி அப்புறப்படுத்துவது என அவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். இதற்காக ஃபைபர் படகு ஒன்று குளத்தில் விடப்பட்டுள்ளது. அவர்கள் தினமும் நீரின் தன்மையைக் கண்காணித்து வருகிறார்கள். குளத்தில் உள்ள நீரை வெளியேற்றுவதற்காக ஒரு பெரிய மோட்டார் கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்று ராட்சத குழாய்கள் மூலம் பக்கத்தில் உள்ள வேறு குளத்திற்குத் தண்ணீரை வெளியேற்றுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. கோயிலில் கிழக்குக் கோபுரத்தைச் சீரமைக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கோயிலின் நுழைவுவாயில் பகுதியான மேற்குக் கோபுரம் அமைந்துள்ள பகுதியில் குளம் உள்ளது. அந்த நுழைவுவாயில் பகுதியிலேயே அத்திவரதரை வைக்கத் திட்டமிட்டுள்ளனர். கிழக்குக் கோபுரம் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு மேற்குக் கோபுரம் வழியாக வெளியே செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதுபோல் வி.ஐ.பி.க்கள் வருவதற்கான தனி வழி ஒன்றையும் ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். பச்சையப்பன் கல்லூரிப் பகுதியிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வாகன நிறுத்தங்களை அமைக்க உள்ளனர்.

வரதராஜர்

தரிசன ஏற்பாடுகள் குறித்து இதுவரை அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் கோயில் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப அட்டையை அடையாள அட்டையாகப் பயன்படுத்தி ஒருமுறை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்தமுறை ஆதார் அட்டையைக் கொண்டு ஆன்லைனில் முன்பதிவு செய்து அத்திவரதரை தரிசிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளார்கள். ஒரு நாளைக்கு 40,000 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்தார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்